9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் 'கோவிட்- 19 பரவலை கருத்தில் கொள்ளாமல் வளர்ச்சி துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்ட பணிகளை முடிக்க நிர்ப்பந்திப்பதை கைவிடவேண்டும். பழிவாங்கும் நோக்கோடு பிறப்பிக்கப்பட்ட கோவை மாவட்ட 4 ஊழியர்களின் மாவட்ட மாறுதல்களை உடனே ரத்து செய்ய வேண்டும். முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மீது ஒழுங்கு நடவடிக்கை குறித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் பங்கேற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உடனே ரத்து செய்ய வேண்டும்' என்ன  உள்பட ஒன்பது அம்சங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.