மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் இராஜகோபுரம் குடமுழுக்கு விழா தேதி முடிவு செய்து அழைப்பிதழ் அடிச்சாச்சு. விழாவை ஏற்பாடு செய்தவர் மணப்பாறை மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கின்ற மனிதப் புனிதர் மருத்துவர் பெரியவர் வி.என்.லஷ்மிநாராயணன்.  இவர்தான் திருப்பணிக்குழுவின் தலைவர். அக்காலத்திலேயே ஏழை எளிய மக்களுக்கு இலவச வைத்தியம் பார்த்த மாமனிதர். அதனால்தான் மணப்பாறை மக்கள் அவரை செல்லமாக "பெரியவர்" என்று அழைப்பார்கள். குடமுழுக்கு விழாவுக்கு பத்து நாட்களுக்கு முன்புதான் அன்றைய தினம் முகமதியர்களின் பக்ரீத் பண்டிகை என்பது தெரிந்தது. இது பெரியவர் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. காலையில் குடமுழுக்கு விழா...! அதே நேரத்தில் முகமதியர்கள் தொழுகை நடத்த வேண்டும். என்ன செய்வது...யோசித்தார் பெரியவர், உடனடியாக நட்டாண்மை மறைந்த ஆர்.வீராச்சாமி உள்ளிட்ட முன்னோடிகளை அழைத்துக் கொண்டு பள்ளி வாசலுக்கு வருகிறார். பெரியவர் வந்ததும் ஜமாத்தார் ஆரத்தழுவி வரவேற்று நாற்காலியில் அமரவைத்தனர். பெரியவர் எங்க பள்ளிக்கு வந்தது பெருமை என்றனர் ஜமாத்தார். மாமா பக்ரீத் பண்டிகைன்னு தெரியாம கும்பாபிஷேகம் அந்தத் தேதியில வச்சுட்டோம். அதான் என்ன செய்யறதுன்னு தெரியல என்றார் பெரியவர். மாமா நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். உங்க அழைப்பிதழை பார்த்த உடனேயே நாங்க பொய்கைமலை அடிவாரத்தில் உள்ள திடலுக்கு தொழுகையை மாற்ற முடிவெடுத்துட்டோம். (இன்றைய ஈத்கா திடலில் அப்போதுதான் முதல் தொழுகை தொடங்கியது). நீங்க ஒண்ணும் யோசிக்காம கும்பாபிஷேகம் செய்யுங்க. சரிங்க மாப்பிள்ளை.. ரொம்ப நன்றி. நீங்களும் கும்பாபிஷேகத்துக்கு வந்திருங்க என்றார் பெரியவர் வி.என்.லஷ்மிநாராயணன். வேப்பிலை மாரியம்மன் கோயில், பின்னால் பள்ளிவாசல், பக்கத்தில் புனித லூர்தன்னை தேவாலயம். இதுதான் மணப்பாறையின் மிகப்பெரிய அடையாளம். வேப்பிலை மாரியம்மன் கோயில் திருவிழாவானது சித்திரையில் தொடங்கி வைகாசி வரை 22 நாட்கள் நடக்கும். பூச்சொரிதல், காப்புக் கட்டுதல், அதனைத் தொடர்ந்து பல்வேறு சமூகத்தவர்களின் மண்டகப்படி, பால்குடம், வேடபரித் திருவிழா என களை கட்டும். தொடர்ந்து தப்படிச் சத்தம், பாட்டுக் கச்சேரி, முளைப்பாரி அணிவகுப்பு, காவடியாட்டம், வேல், சிலா குத்தி வரும் வைபவம் என பள்ளிவாசல் முன்பு ஆர்ப்பரிக்கும். அதை முகமதியர்களும் கண்டு ரசிப்பார்கள். பள்ளிவாசலின் மதில் சுவர்களிலும், வணிக வளாக மாடியிலும் அமர்ந்துதான் பெண்கள் இவற்றை பார்த்து மகிழ்வார்கள். பள்ளிவாசல் நிர்வாகமும் அவர்களை இன்முகத்துடன் அமரச்செய்து அழகு கூட்டுவார்கள்.தேவாலயத்தில் திருப்பலி நடக்கும்..பள்ளிவாசலில் பாங்கு ஒலிக்கும்..வேப்பிலை மாரியம்மன் கோயிலின் வாத்திய இசை கேட்கும். அதேபோல ஹஜரத் பாணிமஸ்தான் ஒலியுல்லா தர்ஹாவுக்கு ராஜம் சவுண்ட் சர்வீஸ் தங்கவேல் பிள்ளை, ராமலிங்கம் பிள்ளை தலைவராக இருந்து சந்தனக் கூடு நடத்திய வரலாறு இளைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த சந்தனக்கூடு விழாவானது பெரிய மதநல்லிணக்க விழாவாகவே நடத்தப்படும். இவ்விழாக்களில் குன்றக்குடி அடிகளார், மதுரை ஆதீனம், சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, பேராசிரியர் அறிவொளி இப்படி ஆகச்சிறந்த ஆளுமைகள் பங்கேற்ற பட்டிமன்றங்கள், மதநல்லிணக்கச் சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது இந்த தர்ஹாவும் இடிக்கப்பட்டது. அப்போது மணப்பாறை மக்களின் மதநல்லிணக்க அடையாளம் இடிக்கப்படுவதாகவே மக்கள் வேதனைப்பட்டனர். வேப்பிலை மாரியம்மன் கோயில் பால்குட விழாவில் கிறித்தவர்கள், முகமதியர்கள் பால்குடம் எடுப்பதும், நோயுற்ற இந்து மதத்தைச் சேர்ந்த சிறு குழந்தைகளை பள்ளிவாசல் அழைத்துச் சென்று புனித நீர் பருகச் செய்வதும், தர்ஹாவில் உப்பு தந்து நேர்த்திக் கடன் செலுத்துவதும் வாடிக்கை. புனித லூர்தன்னை தேவாலயத்தின் திருப்பலிகளில் மதம் கடந்து, அனைத்து மக்களும் பங்கேற்று பிரார்த்தனை செய்வதும் இன்றளவும் தொடர்கின்றது. இன்னும் நிறைய சொல்ல முடியும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மணப்பாறையில் மதநல்லிணக்க அடித்தளத்தை எவராலும் தகர்க்க முடியாது. அந்தளவிற்கு மக்கள் அன்பால் பிணைக்கப்பட்டிருப்பது இந்த மாநகருக்கான பெரும் சிறப்பாகும். இது மாநிலமெங்கும் தொடர்ந்தால் நாட்டில் மதபேதம் இமியளவும் துளிர்க்காது. மாறாக மானுட உணர்வு மதநல்லிணக்க மலர்களாக பூத்துச் சிரிக்கும்.