மணப்பாறை அய்யர் குளத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கேட்கும் மக்கள் !   மணப்பாறை ராஜிவ்நகர் மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்திடும் வகையில் அப்பு அய்யர் குளத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்திட கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணியிடம் மதிமுக தேர்தல் பணிச்செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.   மணப்பாறை ராஜீவ்நகரில் உள்ள அப்பு அய்யர் குளத்தில் ஆழ்குழாய் அமைத்து சிண்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.   இதில், அடிக்கடி உடைப்பு ஏறபட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, 25 மற்றும் 26-வது வார்டு ராஜீவ்நகர் பகுதி மக்களின் நலனுக்காக ஒரு மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி அமைத்து காலை - மாலை இருநேரமும் குடிநீர் விநியோகம் செய்துதர வேண்டும் என்றும்.   அப்பு அய்யர் குளத்தை தூர்வாரி கரையை உயர்த்த வேண்டும் என்றும்.   அப்பு அய்யர் குளத்தில் சாக்கடைக் கால்வாயை இணைத்துள்ளதால் குளத்திற்குள் உள்ள ஆழ்குழாய் நீர் மாசுபடும். நீர்பிடிப்புப் பகுதி பாழாகும்.   ஆகவே, குளத்திற்குள் விடப்படும் சாக்கடைக் கால்வாயை துண்டித்து மற்றொரு சாக்கடைக் கால்வாயுடன் இணைத்திடுமாறும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.   அப்பு அய்யர் குளத்தில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு நகராட்சி ஆணையர் முத்து அவர்களிடம் அறிவுறுத்தியதோடு, புதிய சாக்கடை இணைப்பிற்கு மாவட்ட ஆட்சியரிடம் பேசுகிறேன் என்றும் எம்.பி.ஜோதிமணி பொதுமக்களிடம் வாக்குறுதியளித்தார்.   அப்போது மதிமுக நகரச்செயலாளர் எம்.கே.முத்துப்பாண்டி, ராஜீவ்நகர் குடியிருப்போர் சங்கத் தலைவர் த.ஜெயராமன், ஆனந்தன், முத்து, பாண்டியன், ஐயப்பன் மற்றும் அப்பகுதி பெண்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.