மற்ற மாவட்டங்களைப் போல மாறுமா மாற்றுத் திறனாளிகள் நிலை

0
ntrichy

மற்ற மாவட்டங்களைப் போல மாறுமா மாற்றுத் திறனாளிகள் நிலை

மாற்றுத்திறனாளிகளின் மீதான பொதுவான சமூக பார்வை இரக்கக்குணம் கொண்டதாக இருந்தாலும், அரசின் மூலம் அவர்கள் அணுகும் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் தீர்வு கிடைப்பது என்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. அந்த வகையில், திருச்சி கலெக்டர் ஆபீஸில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கும், வாரந்தோறும் புதன்கிழமை திருச்சி நீதிமன்றத்துக்கு அருகே உள்ள மாற்றுத்திறனாளி அலுவலத்திற்கும் செல்ல மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து பேட்டரி கார் இயக்கவேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்று.

திருச்சி மாவட்டத்தைச்சார்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலெக்டர் ஆபீசுக்கோ அல்லது மாற்றுத்திறனாளி அலுவலத்திற்கோ செல்லவேண்டும் என்றால் பெரும்பாலான நேரங்களில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து செல்லவேண்டியுள்ளது. இந்த கோடை வெயிலில் சாதாரணமானவர்கள் செல்லும் போதே களைப்படையும் நிலையில், மாற்றுத் திறனாளிகளின் கதை மிகவும் வேதனைக் குரியதாகவும், கவலையளிப்பதாகவும் உள்ளது.
இது குறித்து முன்பு திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெய. முரளிதரனிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு என பேட்டரி கார்களை மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கும் இலவசமாக வழங்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் நோக்குடன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள தொகையின் மூலம் இந்த திட்டத்தைத் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவரும் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டார். இத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.
இது மட்டுமின்றி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டமும் கூட்டப்படாமலேயே இருந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த மே மாதம் திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அலுவலகப் பணி காரணமாக வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொண்டு நிறுவனத்தின் மூலமாக வாகன வசதி ஏற்படுத்தி கொடுத்து வாகனத்திற்கு ஆகும் மாதாந்திர செலவை மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்று மாவட்ட நல நிதியிலிருந்து வழங்கப்படும், திருச்சி மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள் மற்றும் அனைத்து பொருள்களையும் பூமாலை வணிக வளாகத்தில் வைத்து விற்பனை செய்ய தமிழக ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் இடம் அளிக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது என மொத்தம் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால், கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகியும் எந்த தீர்மானங்களும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தற்போது, திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் திட்டம் நிறைவேற்றப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கும், மாற்றுத்திறனாளிகளின் அலுவலகத்திற்கும் இலவசமாக இயக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்க செயலாளர் மாரிக்கண்ணு கூறுகையில், எந்த ஒரு கோரிக்கை யினையும் அந்த கால சூழலைக்கருதியே வைக்கிறோம். ஆனால், மாற்றுத்திறனாளிகள் என்று கூடப் பாராமல் அதில் அலட்சியம் காட்டுவது வேதனையளிக்கிறது. பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கும் செல்லும் மாற்றுத்திறனாளிகளை பார்க்கும் போதெல்லாம் எனக்கும் மிகவும் சங்கடமாக உள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு என்பது மிகவும் சக்தி வாய்ந்த குழு. ஆனால், இங்கு அது செயல்படாமல் இருக்கிறது. இதை சரிசெய்து எங்களின் கோரிக்கையினை காலதாமதம் இன்றி முடித்துத் தர முன்வரவேண்டும் என்றார்.
இது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அதிகாரி சுவாமிநாதனிடம் கேட்கையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் ஆட்சியரின் ஒப்புதலுடன் கூட்டம் கூட்டப்படும். அதில், தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையான பேட்டரி கார் வசதி குறித்து எங்கள் துறை கமிஷ்னர் அரசுக்கு ஒரு திட்ட வரைவினை அனுப்பியுள்ளார். இந்த பட்ஜெட்டில் எங்கள் துறை சார்ந்த மானிய கோரிக்கை வரும் போது இத்திட்டம் குறித்தான அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 10 மாதங்கள் ஆகியும், ஒரு திட்டம் நடைமுறைப் படுத்தப் படவில்லை என்பது அரசின் ஆமை வேக செயலை எடுத்துக்காட்டுகிறது. எந்த ஒரு கோரிக்கையும் காலத்தைப்பொறுத்தே எழுகிறது. எனவே, அது உரிய காலத்தில் கிடைத்தால் மட்டுமே அது மக்களுக்கு வரமாக பயனளிக்கும்.
-ச.பாரத்

Leave A Reply

Your email address will not be published.