நீர் மேலாண்மையில் முன்னுதாரணமாக விளங்கும் திருச்சி மஸ்ஜிதுல் ஆலியா பள்ளிவாசல்

0
ntrichy

நீர் மேலாண்மையில் முன்னுதாரணமாக விளங்கும் திருச்சி மஸ்ஜிதுல் ஆலியா பள்ளிவாசல்

கொடை காலம் நெருங்கி வர பலருக்கு இப்போதே தண்ணீர் பற்றிய கவலை வந்துவிட்டது. நம் முன்னோர்கள் கையாண்ட நீரியல் பற்றிய  தொழில்நுட்பம்,  நீரை சிக்கனமாக பயன்படுத்திய விதம், பகிர்ந்து கொண்டமுறை, நீர் நிலைகளை பராமரித்த பங்கு என அவர்கள்  கடைபிடித்த கோட்பாடுகள் இன்றளவிற்கும் நீர் மேலாண்மையை சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றன.

இன்றைய காலகட்டத்தில் நீரின் தேவையையும், நீர் மேலாண்மையின் அவசியத்தையும் உணர்ந்த திருச்சி ஜெனரல் பஜார் பகுதிவாசிகள் தங்களது வழிபாட்டுத் தலமான பள்ளிவாசலில் நீரையும், வீணாகும் நீரையும் , “நீர் மேலாண்மை” முறையை பயன்படுத்தி நிலத்தடி நீராக சேமித்து, வறட்சியிலும் நீர் வளம் குறையாது தங்களின் சேமிப்பு முறையால் நம்மை ஆச்சிரியப்படுத்துகின்றனர்.

திருச்சி பென்ஷனர் தெருவில் உள்ள மஸ்ஜிதுல் ஆலியா பள்ளிவாசல், சுமார் நூறாண்டுக்கும் மேலான பழமை வாய்ந்தது. இங்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் தொழுகை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேலானோர் தொழுகைக்கு வருவார். இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை இப்பள்ளிவாசலில் இருந்து  நாளொன்றுக்கு 1000 லிட்டர் நீரும், வெள்ளிக்கிழமைகளில் அதுவே ஐந்து மடங்காக 5000 லிட்டர் நீரும் வீணாகி கழிவு நீர் கால்வாயில் கலக்கும். ஆனால் இப்போது ஒரு துளி நீர் கூட பள்ளி வாசலில் உள்ள சேமிப்பு தொட்டிகளை தாண்டி வெளியேறுவதில்லை. அதுமட்டுமின்றி இங்கு உபயோகத்திற்கு தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதில்லை.

காரணம் இவர்கள்  நீர் மேலாண்மை முறையின் அடிப்படையில் இங்கு நீர்  சேமிக்கப்பட்டு வருவது தான்.  இதன் அருகில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் அல் – மத்ரஸதுல் ஆலியா நிஸ்வான் எனும் பெண்கள் தொழும் கட்டிடம் என அனைத்து கட்டிடங்களை சுற்றிலும் சுமார் நான்கிற்கும் மேலான மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளில் மழைநீரோடு, உபயோகிக்கும் தண்ணீரும் அவற்றில் சென்று சேரும் வண்ணம் கட்டமைப்பு வசதியினை ஏற்படுத்தியுள்ளனர். தொட்டிகளில்  சேகரிக்கப்படும் நீரானது மறு சுழற்சி முறையில் நிலத்தடி நீராதாரமாகிறது. கடந்த ஆண்டு  திருச்சியில் கடும் வறட்சி நிலவிய போதும் இங்குள்ள ஆழ்துளை கிணறுகளில் மட்டும் நீர் வற்றாதது பலரையும் ஆச்சரிய பட வைக்கும் விசயம்.

இந்த முறையினை கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பள்ளி வாசலில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஆண்டு இப்பகுதி முழுவதும் கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டு ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் 60 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. ஆனால் இப்பள்ளி வாசலில் செயல் படுத்தப்பட்ட நீர் சேமிப்பு முறையால் இங்குள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் 30 அடியிலேயே கிடைத்ததாகவும்,

மேலும் இத்திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்வதோடு, பாதாள சாக்கடை கால்வாய்களில் நீர் கலப்பதும் வெகுவாக குறையும். எனவே  இது திட்டத்தை மற்ற அனைத்து பள்ளி வாசல்களிலும் செயல்படுத்த வலியுறுத்தி வருகிறோம்”, என்கிறார்கள் இப்பள்ளிவாசலிற்கு தினமும் வந்து போகும் மக்கள்.

Leave A Reply

Your email address will not be published.