திருவெறும்பூர் பகுதி மக்களை விரட்ட துடிக்கும் ரயில்வே

0
ntrichy

 

திருவெறும்பூர்  பகுதி மக்களை விரட்ட துடிக்கும் ரயில்வே

ஒவ்வொரு பகுதி மக்களும் தங்களுக்கான சுகத்தை மட்டும் பார்க்கும் நிலை மாறி,சக மனித உரிமைக்காக போராடினால் மட்டுமே நியாயக் கதவு சற்று அசையும். மக்களுக்காக ஆட்சியா? ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க மட்டுமா… மனித உரிமையில் அடிப்படை தேவைகளில் ஒன்றான உறைவிடம் பறிபோகும் நிலையில், குறிப்பிட்ட துறை சார்ந்த நடவடிக்கைகளில் அதிகாரம், தர்மத்தை மிதித்துவிட்டு தலை தூக்கும்போது,சட்ட போராட்டங்கள் பொய்த்துப் போகும் போது, பிரதானம் எனும் நிலையே சுக்கு நூறாய் உடைந்திடும் போது… யாரை சொல்லி என்ன செய்ய, என விட்டு விட்டு போகமுடியுமா… இந்த பிரச்சனையின் முடிவை உங்களிடமே விட்டு விடுகிறோம்…

ரயில்வே துறையின் சேவையினை மேன்மைப்படுத்தும் பொருட்டு  ரயில் பாதைகளை விரிவாக்கம் செய்தல்,  புதிய ரயில் நிலையங்களை அமைத்தல், ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுதல் என தொடர்ந்து ரயில்வேதுறை பல்வேறு வேலைகளை செய்து வருகின்றது. ஆனால், இது போன்ற சம்பவங்களினால் சில நேரங்களில் பொதுமக்களும் பாதிப்படைகின்றனர். அந்த வகையில்,  அமைந்திருப்பது தான் திருச்சி திருவெறும்பூரில் கட்டப்பட்டுள்ள புதிய இரயில் நிலையம். திருச்சி, திருவெறும்பூரில் புதிய இரயில் நிலையம் அருகில் உள்ள திருவெறும்பூர் வட்டம் (சர்வே எண் 341, 342, 343) மற்றும் கூத்தைப்பார் கிராமம்(சர்வே எண் 180, 181, 182) உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக ரயில்வே துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அதில், இந்த பகுதி ரயில்வே துறைக்கு சொந்தமான பகுதி என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்து. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்டு தங்கள் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துக்கூறி வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள திடீர் நகர், பர்மா காலனி பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும், 1960களில் உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து இரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் மற்றும் பர்மா அகதிகளாக வந்தவர்களுமே பெரும்பாலும் வசிக்கின்றனர். பெல் நிறுவனத்தில் தினக்கூலித்தொழில் மேற்கொண்டிருந்த இப்பகுதிமக்கள், தற்போது, கொத்தனார், சித்தாள், பெயிண்டிங் என கூலித்தொழில்களையே பெரும்பாலும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் எல்லாம் சுமார் 60 ஆண்டுகளாக இதே பகுதியில் இருப்பவர்கள். 1962ம் ஆண்டு அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சொக்கலிங்கம், பர்மாவில் இருந்து வந்த அகதிகளுக்காக பர்மா காலனியை அவர்களுக்கு ஒதுக்கிக்கொடுத்துள்ளார். எனினும், இப்பகுதியில் உள்ள மக்கள் யாருக்கும் பட்டா வழங்கப்படவில்லை. எனவே, பல வருடங்களாக இப்பகுதி மக்கள் பட்டா கேட்டு  போராடி வருகின்றனர். இப்பகுதிகளில், சுமார் 500 குடும்ப அட்டைகள் கொண்ட 2500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, ரேஷன் கடைகள், அங்கன்வாடிகள், பள்ளிக்கூடங்கள் என அரசு சார்ந்த பல்வேறு சேவைத் துறைகளும் இயங்கி வருகின்றனர்.  இங்கு உள்ள அனைவருக்கும், ஆதார் அட்டை, வாக்கு அட்டை, வங்கி கணக்கு என அனைத்தும் வைத்துள்ளனர். தண்ணீர் வரி, மின்கட்டண ரசீது உள்ளிட்டவைகளை செலுத்தி வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டில் இதேபோன்று இரயில்வே துறை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வலியுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த முறை விழிப்புணர்வுடன் செயல்பட்டு இந்த பிரச்சினையை தீர்வைநோக்கிகொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டப்பகுதி மக்கள், திடீர் நகர், பர்மா காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தை ஆரம்பித்து குழுவாக செயல்பட்டு இப்பிரச்னையை எதிர்கொள்ளத்துணிந்தனர். இந்த இடம்தொடர்பான பலவேறு ஆவணங்களை, கிராம நிர்வாக அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தகவல் அறியும் உரிமைச்சட்டம் உள்ளிட்டவையின் மூலம் பெற்றனர். மேலும், அப்போதைய மாவட்ட ஆட்சியாளர் ஜெயஶ்ரீ முரளிதரனிடம் இந்த ஆவணங்கள் அடங்கிய மனுவையும் கொடுத்தனர். இது குறித்து நடவடிக்கை மேற்கொண்ட அவர் சர்வே எண். 342 பகுதியில் 10 ஏக்கர் ரயில்வே துறைக்கும், 5 ஏக்கர் மக்கள் வசிக்கும் பகுதியாகவும் கூறி இரண்டினையும் பிரித்துக் காட்டும் வகையில் இடையில் கல்தூண்களை வைத்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் இப்பிரச்சனையானது, தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.    

இந்த பிரச்னை தொடர்பாக போராடி வரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் தண்டபாணி கூறியதாவது, இந்த பிரச்னை பல ஆண்டுகளாவே  நடந்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டு சற்று தீவிரமாக இருந்த போது  இந்த இடம் யாருக்குசொந்தம் என முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆவணங்களை திரட்ட ஆரம்பித்தோம். அதில், 31 மே 1927ம் ஆண்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் கூத்தைப்பார் பேரூராட்சிக்குட்பட்ட சர்வே எண் 341, 342, 343 ஆகிய பகுதிகள் கிராம சமுதாய கமிட்டிக்கு சொந்தமானது என உள்ளது. இது குறித்து இரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டப்போது, 1965ம் ஆண்டு வருவாய் நில ஆணையர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் போட்டுகொண்ட ஒப்பந்தத்தின்படி இந்த இடம் இரயில்வே துறைக்குசொந்தமானது என்கின்றனர். மேலும், இது குறித்து திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம் கிராம எண் 60 கூத்தைப்பார் சர்வே எண். 340 மற்றும் அதன் உட்பிரிவு, 341, 342, 343 என்ற சர்வே எண்கள் கொண்ட நிலங்கள் நத்தம் நிலமா, அரசு புறம்போக்கு நிலமா, அல்லது ரயில்வேக்கு சொந்தமான நிலமா, அல்லது, வேறு எந்த வகை நிலம்?, மேற்படி நிலம் ரயில்வேக்கு ஒப்படை செய்யப்பட்டிருந்தால் எந்த ஆண்டு ஒப்படை செய்யப்பட்டுள்ளது? என இது சார்ந்து ஏழுகேள்விகளை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டோம். இதற்கு பதிலாக, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், கூத்தைபார் கிராமத்திற்கான எஸ்.எல்.ஆர் ஆவணம் இக்காப்பகத்தில் இல்லை. மேலும், மனுவில் கோரிய வரசை எண்.1,2,3,4,6,7க்கான ஆவணங்கள் குறித்த விவரங்கள் இக்காப்பகத்தில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது என வந்தது. கிராம நிர்வாக அலுவலரிடம் இப்பகுதிக்கான பீம்ரசீது பெற்றபோது, இப்பகுதியில் வசிக்கக்கூடிய நபர்களின் பெயர்களுடன் பெறப்பட்டது. அரசு புறம்போக்கு நிலமாக இருந்த இப்பகுதிகள் எப்போது இரயில்வே துறைக்கு மாற்றப்பட்டது என்பது தெரியவில்லை. அதற்குண்டான முறையான ஆவணங்களும் இல்லை என்றார்.

மாணிக்கம்

இது குறித்து பர்மா காலனியைச்சேர்ந்த மாணிக்கம் கூறியதாவது, நாங்க இந்த பகுதியில் பல வருடங்களாக இருக்கிறோம். இந்த பகுதியை மாவட்டஆட்சியரே எங்களுக்காக வழங்கினார். ஆனால், இது ரயில்வேக்கு சொந்தமான இடம்,  ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என்று நோட்டீஸ் வருகிறது.

இது குறித்து இப்பகுதியைச்சார்ந்த சுபாஷ் கூறுகையில், நான் இங்கே தான் பொறந்து வளர்ந்தேன். தற்போது எனக்கு 45 வயது ஆகிறது. ஆனால், இந்த பிரச்னையானது, 40வருடங்களுக்கு மேலாக உள்ளது. இங்கே இருக்கும் ஒவ்வொருவரும் போராடியே தங்களின் இருப்பிடத்தை தக்கவைத்துகொள்ளும் நிலை உள்ளது. 2013ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் கொடுத்த உத்தரவாதத்தின் பெயரால் இங்கு பலர் வீடு கட்ட ஆரம்பித்துவிட்டனர். பல லட்சங்கள் வரையில் செலவு செய்தும் வீடு கட்டியுள்ளனர். தற்போது, நீண்ட நாட்களுக்கு பிறகு, இவ்வாறாக நோட்டீஸ் வருவது வேதனையளிக்கிறது.

இதுதொடர்பாக திருவெறும்பூரில் மரக்கடை வைத்துள்ள, இப்பகுதியின்  அனைத்துக் கட்சி பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் குத்புதீன் கூறியதாவது, நான் இங்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக கடைவைத்துளேன். இவர்கள் அகற்றச்சொல்லும் பகுதியில் சில கடைகளும் இருக்கின்றன. ரயில் நிலையத்திற்கு பேருந்துகள் வந்துசெல்ல ஏதுவாக இருக்கவேண்டும் என்பதற்காக முன் பகுதியும், ரயில் பாதைகளை அமைக்கவேண்டும் என்பதற்காக வீடுகள் இருக்கக்கூடிய பகுதிகளையும் அகற்ற சொல்கின்றனர். இதுகொஞ்சம் கூட முறையான செயல் அல்ல. இது வரையில் காவேரி நகருக்கு நோட்டீஸ் வந்ததில்லை, ஆனால் தற்போது அங்கும் வந்துள்ளது என்றார்.

இப்பகுதி வாசிகள் தங்களுக்கென்ற ஒரு அடையாளத்துடன் 60ஆண்டுகளாக இங்கே வசித்து வருகின்றனர். அவர்கள் கேட்கும் முறையான எந்த ஒரு ஆவணங்களுமின்றி ரயில்வே துறை அவர்களை வெளியேறச் சொல்வது நியாயமே இல்லை. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தற்போதுதான் குடிசையில் இருந்த வீடுகட்டும் அளவிற்கு பொருளாதார ரீதியில் முன்னேறி வருகின்றனர். இருப்பினும், இன்னும் பல வீடுகள் குடிசைகளாகவே உள்ளது. இந்த பகுதியில், தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் எப்போது போய் மனு அளித்தாலும், எங்களுக்குதெரியாமல் எதுவும் செய்யமாட்டார்கள், இன்னும் இது குறித்து எங்களுக்கு எந்தசெய்திகளும் வரவில்லை என்றே கூறுகின்றனர்களாம். ஆனால், தற்போது நோட்டீஸ் வந்திருப்பது, ஆட்சியாளர்களின் மீது இருக்கும் நம்பிக்கையினை மக்கள் இழக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. மேலும், இவர்களின் பிரதான கோரிக்கையாக குடியிருக்கும் பகுதிகளுக்கு உடனடியாக பட்டா வழங்கவேண்டும், ரயில் பாதைக்கான மாற்றுப்பாதையினை அமைத்து மக்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என்பதே. இதை நிறைவேற்றித்தரவும், அவர்களின் நலன்களைக் காக்கவும் அரசு முன்வரவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.