தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு விருது

0
நம்ம திருச்சி-1

பிப்ரவரி 21, 2019 உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் ஒருங்கிணைக்கும் தாய்மொழி நாள் உறுதியேற்பு விழா தமிழ்ச் சான்றோர்கள் படம் பொறித்த ஊதுப்பி(பலூன்) பறக்கவிடும் நிகழ்வு மற்றும் தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களை போற்றி சிறப்பு செய்திட சிறப்பாரம் (விருது) வழங்கும் விழாவானது திருச்சி, தூய வளனார் கல்லூரி ஏ.வி. அரங்கத்தில் இன்று பிப்ரவரி 20, 2019 ல் நடை பெற்றது.

இவ்விழாவிற்கு தமிழகப் பெண்கள் செயற்களத்தின் தலைவர் இசை மொழி தலைமை வகித்தார். தமிழரண் மாணவர்கள் தாமரை மற்றும் இரவிக்குமார் முன்னிலை வகித்தார்கள்.

இவ்விழாவில் தூய வளனார் கல்லூரி கலைமனைகளின் அதிபர் தந்தை லியோனார்டு சிறப்பு விருந்தினர் முன்னிலையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 22 தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களை போற்றி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் தமிழ்க் குரிசில் என்னும் சிறப்பாரம் (விருதுகளை) வழங்கி பொன்னாடை போர்த்தி மலர்கள் தூவி போற்றப்பட்டனர்.

பின்னர் பெயரில், கல்வியில், கையெழுத்தில், வழிப்பாட்டில், நிருவாகத்தில், ஆட்சியில், வணிகப் பெயர் பலகையில், ஊர்திகளில், இல்லற வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில், எங்கும் எதிலும் தமிழே நிலைபெற செயல்படுவோம் என மாணவர்கள், சான்றோர் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடி உறுதியேற்றனர்.

இறுதியாக தமிழ்ச் சான்றோர்கள் படம் பொறித்த ஊதுப்பி (பலூன்) பறக்கவிட்டு, அன்னைத் தமிழ் வாழ்க! என்றும் தமிழாய் வாழ்வோம்! தாய் தமிழை தலை நிமிரச் செய்வோம்! என முழக்கங்கள் முழங்கினார்கள்.

இந்நிகழ்வை தமிழரண் மாணவன் விசயகுமார் ஒருங்கிணைத்து வரவேற்புரையாற்றினார். தமிழகப் பெண்கள் செயற்களத்தின் தீபிகா மற்றும் தமிழரண் மாணவி கவிதா இருவரும் தொகுத்து வழங்கினார்.

இறுதியில் தமிழரண் மாணவி அபிநயா நன்றி கூற இனிதே நிறைவுற்றது.

 

Leave A Reply

Your email address will not be published.