உயிர் காக்குமா ரயில்வே நிர்வாகம்

0
ntrichy

உயிர் காக்குமா ரயில்வே நிர்வாகம்

சேவையே பொதுத்துறை நிறுவனத்தின் நோக்கம்; பாதுகாப்பும் பராமரிப்புமே சேவையின் நோக்கம்

ஒரு நாட்டின் உள்நாட்டு வணிகம் மற்றும் போக்குவரத்து என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று. அந்த வகையில் நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு இந்திய ரயில்வே துறைக்கு உள்ளது. ஆனால், அப்பேர்பட்ட துறையை பாதுகாப்பாகவும், பராமரிப்புடனும் வைத்துள்ளோமா? என்று கேட்டால் இல்லை என்பதை நிதர்சனமான உண்மை.

இந்திய ரயில்வேயை பொறுத்தவரையில் 5லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துனர், அலுவலகப்பணியாளர்கள் என உலகிலேயே அதிக தொழிலாளர்களை கொண்ட துறை நடத்துகிறது இந்திய அரசு. ஒரு நாளைக்கு சுமார் 2கோடியே 50லட்சம் பேர் பயணம் மேற்கொள்கின்றனர். இப்படியாக இருக்கும் போது ஒவ்வொருவரின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது ரயில்வே துறையின் கடமை. இது ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டும் அல்ல. ரயிலின் தண்டவாளங்களுக்கு அருகே குடியிருப்பவர்களையும், அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு கொடுத்து பாதுகாக்கவேண்டியதும் ரயில்வேயின் கடமையாகும்.
தண்டவாள குடியிருப்புகள்
அந்த வகையில், திருச்சி ஜங்சனில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வரையில் லட்சக்கணக்கான மக்கள் இரயில் தண்டவாளத்தின் இருபுறமும் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர்ந்து வந்து வாழும் மக்கள், தற்போது அதன் எண்ணிக்கை வீரீயமாக முளைத்துள்ளது. ரயில் தண்டவாளத்தின் ஒருபுறமிருந்து இன்னொருபுறம் செல்ல தண்டவாளத்தின் மீது நடந்து செல்வதை இயல்பாகவே வைத்துள்ளனர். குறிப்பாக காவிரி திரையரங்கிற்கும், தென்னூர் மின்சாரத்துறை அலுவலகத்திற்கும் இடையில் உள்ள தண்டவாளத்தில், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், குழந்தைகள் என அனைவரும் இயல்பாக தண்டவாளத்தை கடந்து செல்லுவதை பார்க்கமுடிகிறது.

காவிரி தியேட்டர் பகுதியில் இருந்து தண்டவாளத்தை கடந்து செல்லக்கூடாது என்று இரும்பு கம்பிகள் கொண்டு முழங்கால் உயரத்திற்கு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மக்கள் அதை பயன்படுத்துவதையே இயல்பாக மாற்றிகொண்டுள்ளனர். சைக்கிளில் செல்பவர்கள் இந்த கம்பி அருகில் சைக்கிளை தூக்கி அடுத்தப்பக்கம் வைத்து செல்கின்றனர். ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் படிக்கட்டுகள் வைத்து பாலத்தில் செல்லும்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதில், பெரிய படிக்கட்டுகளாக 50படிக்கட்டுகள் உள்ளன. எனவே, முதியவர்கள், சுமை தூக்கிவருவோர் போன்றவர்களினால் அந்த படிக்கட்டுகளில் ஏறுவது சிரமமாக உள்ளது. பற்றாக்குறைக்கு அந்த படிக்கட்டுகளின் இடையில் அமர்ந்து மது அருந்துவதையே மதுபிரியர்கள் வழக்கமாகவும் வைத்துள்ளனர். இதனால், தர்மசங்கடத்திற்கு உள்ளாகும் பொதுமக்களும் பாலத்தின் மீது செல்லாமல் தண்டவாளத்தை கடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த பகுதியில் பள்ளிமாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என பெரும்பாலோர் செல்வதால், இது போன்று மதுகுடிப்பவர்களை பார்த்து அவர்களும் கெட்டுப்போக வாய்ப்புள்ளது என கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

திருச்சி இருப்புபாதை காவல்நிலையக்கணக்கின்படி, கடந்த 4ஆண்டுகளில் திருச்சி பகுதிக்கு உட்பட்ட தண்டவாடங்களில் மட்டும் 800க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக, ஜங்சனில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வரையில் 15க்கும் மேற்பட்டவைகள் நடந்துள்ளன. இதில், மிகவும் சொற்ப எண்ணிக்கையில் தற்கொலையாக கணக்கு காட்டப்பட்டுள்ளன. பெரும்பாலானவை விபத்துகளாகவே நடந்துள்ளது. இரவு நேரங்களில் அப்பகுதியை கடக்க முயற்சிக்கும் முதியோர்கள், இயற்கை உபாதைகளை கழிக்க முற்படும் போது ஏற்படும் விபத்துகளே அதிகமாக உள்ளன
பராமரிப்பு மற்றும் தடுப்புசுவர்கள்
திருச்சி ஜங்சனில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வரையில் உள்ள ரயில்வே தண்டவாளங்களின் ஓரங்களில் மக்கள் தொகை பெருக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனால், வீட்டில் இருக்கும் குப்பைகளை தண்டவாளங்களின் ஓரங்களில் கொட்டுவது மக்களின் வாடிக்கையாகவே மாறிவிட்டது. அது மட்டுமின்றி அந்த இடங்களில் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பது, இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவது என அனைத்தும் அப்பகுதி மக்களின் வாழ்வியல் இயல்பாகவே மாறிவிட்டது. . இதன் முக்கிய காரணமாக பொதுமக்களின் விழிப்புணர்வின்மையும், ரயில்வே துறையின் அலட்சியமுமே உள்ளது. சுமார் 6 கி.மீ வரையில் உள்ள இந்த தூரத்தில் பாலக்கரை, தென்னூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளன. மேலும், இப்பகுதியில், லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், தண்டவாளங்களின் ஓரங்களில் பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும். குப்பைகள் கொட்டாத அளவிற்கு ரயில்வே ஊழியர்கள் இடங்களை பராமரிக்க வேண்டும்.

இந்த வழித்தடங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு பாலங்கள் வைத்திருந்தாலும், மக்களின் விருப்பமாக சுரங்கப்பாதையே உள்ளது. அதன் மூலமே பல கி.மீ தூரம் சுற்றிவரும் நிலை தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கின்றனர்.

இது குறித்து திருச்சி காவேரி தியேட்டர் அருகில் மரக்கட்டை கரி வியாபாரம் செய்யும் வசந்தா கூறியதாவது,
நீண்ட நாட்களாகவே மக்கள் இந்த பாதையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இல்லை என்றால் ரொம்ப தூரம் சுற்றிவரவேண்டும், படிக்கட்டுகளின் வழியாக பெரும்பாலான மக்கள் செல்வதில்லை. எனவே, காவிரி தியேட்டருக்கும், இ.பி ஆபிஸ்க்கும் இடையில் இருக்கும் தண்டவாளத்தில் சுரங்கப்பாதை அமைத்துத்தரவேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால் எந்த பயனும் இதுவரையில் இல்லை. கடந்த வாரம் கூட இங்கிருந்து சற்றுத்தொலைவில் ஒருவர் ரயிலில் அடிபட்டு தலை நசுங்கி இறந்தார். சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும் என்றும் கோரிக்கையையும் நீண்ட நாட்களாகவே ரயில்வே துறையிடம் வைத்துதான் வருகிறோம். அதற்கும் எந்த பயனும் இல்லை என்றார்.
சுரங்கப்பாதை தேவை என்பது இப்பகுதிக்கு மட்டும் அல்ல. அந்த வழித்தடங்களில் அதிகமாகவே தேவைப்படுகிறது. எந்த ஒரு வழித்தடமும், பாலங்களும் மக்களின் தேவைக்காகவே இருக்கவேண்டும். அதைவிடுத்து, கட்டியபிறகு மக்களை அந்த வலையத்திற்குள் கொண்டுவர நினைப்பது இயலாத ஒன்று. இப்பகுதியில் இருந்து மக்கள் பிரதிநிதியாக செல்லும் எம்.பிக்கள் இந்த பிரச்சனைக்குறித்து பேசாமல் இருப்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. எந்த ஒரு அரசு நிறுவனத்தின் முக்கியஸ்தர்களாக இருப்பவர்கள் மக்களே, பாதுகாப்பும், பராமரிப்புமே அந்த நிறுவனத்தின் சேவைக்கு அடிப்படை நோக்கம். அந்த வகையில், பாதுகாப்பான ரயில் சேவையை விரும்பும் திருச்சி மக்களின் இந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-ச.பாரத்

படங்கள்:சுபா

Leave A Reply

Your email address will not be published.