அதிகாரிகளின் அலட்சியத்தால் வழிப்பறிக் கொள்ளை மின்விளக்குகள் இல்லாமல் அச்சப்படும் மக்கள்

0
நம்ம திருச்சி-1

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம் செங்கரையூர் மற்றும் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி ஒன்றியம் பூண்டி ஆகிய இரு மாவட்டத்தை இணைக்கும் முக்கிய பாலமான செங்கரையூர் பூண்டி கொள்ளிடபாலத்தில் இரவில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் இப்பகுதியில் செல்வோர் மிகவும் அச்சத்துடன் பயணிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

செங்கரையூர் பூண்டி கொள்ளிடபாலமானது திமுக ஆட்சியில் நேரு முயற்சியால் சுமார் 37 கோடிக்குமேல் செலவு செய்து கட்டப்பட்டது. இப்பாலம் இல்லாத போது தஞ்சைக்கு செல்ல திருமானூர், திருவையாறு வழியாகவோ அல்லது கல்லணை, வல்லம் வழியாகவோ செல்ல வேண்டும். இதனால், தஞ்சைக்கு வேலைக்கு செல்வோர் உட்பட பலர் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில்தான் கடந்த திமுக ஆட்சியில் லால்குடி பூண்டி வழியாக தஞ்சைக்கு சுமார் ஒன்றரை மணி நேரத்தில் செல்லக்கூடிய வகையில் இப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தில் இரவும் பகலும் பல்வேறு வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், சில வருடங்களாக இந்த பாலத்தில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிவதில்லை. இந்த பாலம் இருமாவட்டங்களை இணைக்கும் முக்கிய பாலம் என்றபோதிலும் இது குறித்து எந்த மாவட்ட அதிகாரிகளும் தங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. மின் விளக்குகள் எரியாத நிலையில் இரவு நேரங்களில் குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போது மர்ம கும்பல்களால் அந்த பாலத்தில் வழிப்பறி கொள்ளை நடந்து வருகிறது. மேலும் பெண்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

இது குறித்து இப்பகுதி வாசிகள் கூறுகையில், பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. உள்ளுரில் வசிப்பவர்களே இப்பகுதியில் இரவு நேரத்தில் செல்ல அச்சப்படுகிறோம். அப்படியென்றால், வெளியூர் செல்பவர்களின் நிலையை யோசித்துக்கொள்ளுங்கள் என்று வேதனையுடன் கூறியவர்கள், இப்பகுதியின் முக்கியத்துத்தை உணர்ந்து அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.