பாமக, சிறுத்தை, தேமுதிக ஸ்டாலின் சதுரங்க கணக்கு!

0
நம்ம திருச்சி-1

தமிழ்நாட்டில் கூட்டணிப் பேச்சு சூடு பிடித்திருக்கிறது. தமிழ்நாடு பாஜகவுக்கான பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பிப்ரவரி 14 இரவு சென்னை வந்தார். அதிமுகவோடும், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடும் புரபோஸ் செய்வதற்காகக் காதலர் தினத்தன்று அவர் சென்னை வந்திருக்கிறார்.

அதேநேரம், அதிமுக அணியில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் பாமகவின் ரகசிய காய் நகர்த்தல்கள் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, அக்கட்சியின் நிர்வாகிகளுக்கிடையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. கூட்டணி பற்றி ஊடகங்கள் பலவிதமாக எழுதுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார். ஆனால், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திசைகளில் பாமக நடத்தும் பேச்சுவார்த்தைகள் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

 

 

இந்த வகையில் கடந்த வாரம் அதிமுகவோடு பாமகவின் டீல் முடிந்துவிட்டது என்று ரகசியத் தகவல் கிடைத்த நிலையில், இன்னொரு பக்கம் திமுகவுக்கும் கூட்டணிக் கதவைத் திறந்தே வைத்திருந்தது பாமக. அதே போல இன்னோரு பக்கம் தேமுதிகவிற்காக கதவையும் வைத்திருக்கிறது.

 

பாஜக தமிழகப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழகம் வருவதற்கு முன்பாகவே, பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணியோடு பேசுவதற்காகத் தொடர்ந்து முயன்றபோதும் கோயலின் லயனில் அன்புமணி கிடைக்கவில்லை. தொடர்ந்து முயன்றபோதும் அன்புமணியின் தொடர்பு கிடைக்காததால், அன்புமணிக்கு நெருக்கமான தொழிலதிபர் மூலம் அவரைத் தொடர்புகொண்டார்.

இந்த நிலையில்தான் அன்புமணி திமுக தலைவர் ஸ்டாலின் மருமகனான சபரீசன் சந்திப்பு பற்றிய தகவல்கள் ஐபி மூலம் மத்திய அரசுக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அன்புமணியை அவருக்கு நெருக்கமான மேலும் சில நண்பர்கள் மூலம் தொடர்புகொண்ட பாஜக மேலிடம், ‘அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள்’ என்று சொல்லி தொகுதிகளுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களை அதிமுக மூலமாக பாஜகவே செய்து தரும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேநேரம் திமுக தரப்பில் ‘பாமக – தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக அணியில் இடம்பெற்றால் அதுதான் வெகுஜன கூட்டணி போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். எனவே இரண்டில் ஒரு கட்சியை திமுக அணிக்குள் கொண்டுவர வேண்டும்’ என்றும் ஸ்டாலினிடம் சொல்லப்பட்டது. இதற்கு ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டிய நிலையில்தான் கடைசி கட்டத்தில் திமுக அணிக்குள் பாமகவை அல்லது தேமுதிக ஆகிய கட்சிகளில் ஏதேனும் ஒன்றை செட் செய்வதற்கான தீவிர நகர்த்தல்கள் நடைபெற்று வருகின்றன.

பாமக திமுகவை நோக்கித் திரும்பினால் திமுக அணியில் நீண்டகாலமாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் என்னாகும் என்ற கேள்வியும் பெரிய அளவில் எழுந்து நிற்கிறது.
பாமக இருக்கும் அணியில் இடம்பெற மாட்டோம் என்பதைக் கொள்கை முடிவாகவே வைத்திருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.
அதேநேரம் பாமக – பாஜக இருக்கும் அணியில் எங்களால் இடம்பெற முடியாது’ என்று நேரடியாகவே சொல்லியிருக்கிறார். அப்போது ஸ்டாலின் திருமாவளவனிடம், ‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. நீங்க நம்ம கூட்டணியிலதான் இருக்கீங்க’ என்று பதில் தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் தொடர்ந்து திமுகவுடன் தோழமை பாராட்டி வந்தார் திருமாவளவன்.

இப்போது திமுக கூட்டணிக்கு வரும் என்ற செய்திகள் வரும் நிலையில் திருமாவளவனும் தன் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், ஸ்டாலின் நெருங்கிய வட்டாரத்திலோ, “பாமக, சிறுத்தைகள் இரண்டுமே திமுக அணியில் இடம்பெற்றாலும் நல்லது என்று நினைக்கிறார் ஸ்டாலின். 2004 போல நாற்பதுக்கு நாற்பது ஜெயிக்க நல்ல வாய்ப்பிருக்கும் நிலையில் அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தலைச் சந்தித்தாலும் நல்லது என்றே நினைக்கிறார் ஸ்டாலின்.

ஆனால், திமுக அணிக்குள் பாமக வரும் பட்சத்தில், திருமாவளவனை தக்கவைத்துக் கொள்வது என்பது திமுகவுக்கு தர்ம சங்கடம்தான்” என்று கூறுகிறார்கள். இதே நேரத்தில் பாமக கொண்டு வர முடியவில்லை என்றால் தேமுதிகவை கொண்டு வந்தால் விடுதலை சிறுத்தைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் தேமுதிக பக்கம் தி.மு.க. தங்கள் பார்வையை திருப்பி இருக்கிறார்கள் என்கிறார்கள் தி.மு.க. முக்கிய புள்ளிகள். தேர்தல் தேதி அறிவிக்கும் வரை இன்னோரும் பல கட்ட திருப்பங்கள் ஏற்பட வாய்பிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.