குளங்களில் ஆக்ரமிப்புகள் அகற்றி பராமரிக்க நடவடிக்கை

0
ntrichy

குளங்களில் ஆக்ரமிப்புகள் அகற்றி பராமரிக்க நடவடிக்கை

கொட்டப்பட்டு குளத்தில் தூர்வாரும் பணியை கலெக்டர் ராசாமணி நேற்று ஆய்வு செய்தார். அருகில், மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன்.

கலெக்டர் உறுதி

திருச்சி ஜீன் 22

திருச்சி மாவட்டத்தில் உள்ள குளங்களில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு, தூர்வாரி பராமரிக்கப்படும் என கலெக்டர் ராசாமணி கூறினார். திருச்சி- புதுகை சாலையில் கொட்டப்பட்டு பகுதியில் குளம் உள்ளது. இந்த குளத்தில் மாநகராட்சி சார்பில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி , குளத்தின் கரைகளை உயர்த்தும் பணி நேற்று துவங்கியது. இந்த பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் ராசாமணி கூறியதாவது:

திருச்சியில் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. எனவே, அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்தோம். கொட்டப்பட்டு குளம் 72 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த குளத்தில் ஆக்ரமிப்புகளை அகற்றி, சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தி சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. குளத்தின் கரைகளை உயர்த்தும் பணியை பொதுப்பணித்துறையினர் கண்காணிக்க உள்ளனர். கரைகளில் அழகிய பூச்செடிகளை வைத்து அழகுபடுத்துவதுடன் பொது மக்கள் அமர்ந்து பொழுதுபோக்க வசதி செய்யப்படும். குளத்தை தூர்வாரி, மின்விளக்கு அமைத்து பராமரிப்பது உள்ளிட்ட வசதிகளை செய்ய, சமூக பொறுப்புணர்வு ‘திட்டத்தின் கீழ் தனியார் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தகுதி வாய்ந்த தனியார் தேர்வு செய்யப்பட்டு பணிகள் ஒப்படைக்கப்படும். குளத்தில் வெள்ளம் ஏற்பட்டால் தண்ணீர் வெளியேற ரெகுலேட்டர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தண்ணீர் வெளியேறும் பகுதிகள் கட்டடங்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ரமிப்புகள் அகற்றப்படும். இதே போல, திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டில் 25 ஏக்கரில் உள்ள சாத்தனூர் குளத்திலும் சீமைக்கருவேல மரங்கள், ஆக்ரமிப்பு அகற்றி தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இது போன்று அனைத்து குளங்களையும் சீரமைத்து நீர் நிலைகளில் தண்ணீர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைக்கு முன்பாக இந்த பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ராசாமணி கூறினார். பேட்டியின் போது மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், பொன்மலை உதவி கமிஷனர் தயாநிதி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.