பத்திரிகையாளரும்… திருச்சி கலெக்டரும்..

0
ntrichy

வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை கடந்து செல்கிறோம். அதில் பலர் நமக்குள் வந்து செல்கிறார்கள். அதில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். நான் கெட்டவர்களை எளிதில் மறந்து விடுவேன். நல்லவர்களை காலத்திற்கும் மனதில் பதிய வைத்துக் கொள்வேன். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்த வை.மூர்த்தி. 3 ஆண்டுகள் அவர் பதவி வகித்ததாக நினைவு.

 

தூய வெள்ளை நிற சஃபாரிதான் அணிவார். கருப்பு நிறம் முறுக்கிய மீசை என அச்சு அசலான தமிழ் முகம். எந்த நேரத்தில் போன் செய்தாலும் “வணக்கங்க மூர்த்தி பேசுறேன்” என்றுதான் சொல்வார். அவர் தன்னை ஒரு ஆட்சித் தலைவராக எப்போதும் கருதியதில்லை. ஒரு நிமிடம்கூட அவர் அமைதியாக இருந்து பார்க்க முடியாது. எப்போதும் பம்பரம் போல சுற்றிக் கொண்டே இருப்பார். ஒரு நாளைக்கு குறைந்தது 100 மனுக்களிலாவது கையெழுத்துப் போடுவார்.

சில நேரங்களில் மிகவும் எளிய மனிதராகி குடிசைக்குள் சென்று அமர்ந்து சாப்பிடுவார். “நான்தாம்மா உங்க கலெக்டர் வந்திருக்கேன்” என்று உரிமையோடு சொல்வார். யாராவது எதிர்த்து நின்றால் போலீசாக மாறி மீசையை முறுக்குவார்.
நியாயமான எந்த கோரிக்கைக்கு யார் போய் நின்றாலும் உடனே செய்வார். திருச்சி பத்திரிகையாளர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் வீட்டுமனை பெறுவதற்கு அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. நான் மற்றவர்களுக்கு அதிக உதவி செய்தது இவர் ஆட்சித் தலைவராக இருந்தபோதுதான். நான்கைந்து பேருக்கு மினி பஸ் ரூட் பர்மிட் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். பல பேருக்கு இட மாறுதல்கள், பலருக்கு கல்வி, மருத்துவ உதவிகள், முதியோர் பென்சன், விதவைகள் பென்சன், திருமண உதவி திட்டம் இப்படி நிறைய என்னால் செய்ய முடிந்தது.

நான் எந்த கோரிக்கைக்கு போய் நின்றாலும் அந்த மனுவை வாங்கி “எனது நெருங்கிய நண்பனின் கோரிக்கை, விரைந்து முடிக்கவும்” என பச்சை மையில் கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புவார். முடிந்த வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போன் பண்ணி பேசுவார். அதற்கு காரணம் அந்த காரியத்தை நான் செய்வதற்கு அவர்களிடம் பணம் வாங்க மாட்டேன் என்று உறுதியாக நம்பினார். நானும் அவர் நம்பிக்கையை காப்பாற்றினேன். அவர் செய்த உதவிகளுக்கு அன்றைய மார்க்கெட் நிலவரப்படி நான் பணம் வாங்கியிருந்தால் திருச்சியில் சொந்த வீடு, கார் என்று செட்டிலாகியிருப்பேன்.

அவர் ஆட்சித் தலைவராக பதவியேற்ற புதிதில் ஒரு நீண்ட தூர கார் பயணத்தில் என்னை உடன் அழைத்துச் சென்றார். “இந்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யதுட்டு போகணும்னு நினைக்கிறேன். ஆபீசர்ங்ககிட்ட கேட்டா சரியான விஷயம் கிடைக்காது. திருச்சி மாவட்டத்தின் குடிமகனாக, ஒரு பத்திரிகையாளனா இந்த மாவட்டத்துக்கு என்னவெல்லாம் உடனடி தேவை. என்னவெல்லாம் செய்யலாம்” என்று கேட்டார். நானும் எனக்கு தெரிந்த விஷயங்களை சொன்னேன். அதன் பிறகு அடிக்கடி போன் பண்ணி அலுவலகம் வரச் சொல்வார். தனது கேபினில் உள்ள அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு மனம் விட்டுப் பேசுவார். சில நல்ல விஷயங்களைச் செய்வதற்கு அரசியல் தரப்பிலிருந்து வரும் நெருக்கடிகளை வேதனையோடு குறிப்பிடுவார்.

தனிப்பட்ட முறையில் அவர் என்னை தன் தம்பியாகவே பாவித்தார். “என்னமோ தெரியல மீரான் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்குது” என்று அடிக்கடி சொல்வார். எனது மகள் காதுகுத்து விழா உள்பட என் வீட்டு அனைத்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். தீபாவளி, பொங்கலுக்கு அவர் அணிகிற அதே வெள்ளை நிற சஃபாரி துணியை எனக்கு அனுப்பி வைப்பார், கூடவே ஒரு கவரில் அதை தைப்பதற்கான தையற் கூலியும் இருக்கும்.
ஒரு பொங்கலுக்கு என்னையும், என் மனைவியையும் கலெக்டர் பங்களாவுக்கு அழைத்து விருந்து வைத்தார். அவர் கையாலேயே பரிமாறினார். விடைபெறும்போது அவருக்கு வந்த பல பரிசு பொருட்கள், எனக்கு பட்டுவேட்டி, சட்டை, என் மனைவிக்கு பட்டுச் சேலை, கொடுத்து தனது சொந்த காரில் அனுப்பி வைத்தார்.

திருச்சி மாவட்டத்திலிருந்து அவர் மாறுதலாகி செல்லும்போது அவருக்கும், எனக்கும் இருந்த நட்பை ஒரு கவிதையாக எழுதி அதனை பிரேம் பண்ணி கொடுத்துச் சென்றார். கால வெள்ளத்தில் திசைக்கு ஒருவராக தூக்கி எறியப்பட்டோம். இந்த உலகில் அவர் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் மனசுக்குள் இன்னும் பத்திரமாக இருக்கிறார்.

-பத்திரிகையாளர் மீரான்
முகநூல் பக்கத்திலிருந்து…

Leave A Reply

Your email address will not be published.