சிவனை சந்திரன் தனது ஒளியால் அபிஷேகிக்கும் நாள்

0
நம்ம திருச்சி-1

.தமிழ் மாதத்தின் 12-ஆம் மாதமான பங்குனியில் 12-ஆவது நட்சத்திரமான உத்திரம் இடம் பெறும் புனித நாள்தான் பங்குனி உத்திரமாகும். பல்வேறு சிறப்புகளையும், பெருமைகளையும் பெற்ற பங்குனி உத்திர திருவிழா “பிரமோற்சவ விழா” எனவும் அழைக்கப்படுகிறது.

கடும் கோடை வெப்பம் தொடங்கியுள்ள பங்குனி மாதத்தில் முருகபக்தர்கள் முருகனை குளிர்விக்கும் பொருட்டு கொடுமுடி சென்று காவிரி ஆற்று நீரை தீர்த்த காவடியாக எடுத்து வந்து அபிஷேகம் செய்வது, தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும். பங்குனி உத்திர திருவிழா நாளன்று பல லட்சம் பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து, முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனியில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 20ம்தேதி சுவாமி -அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதியுலா வருகின்றனர். மார்ச் 21ஆம் தேதி பங்குனி உத்திர தினத்தன்று தேரோட்டமும் நடைபெறும். 22ம் தேதி வெள்ளிக்கிழமை தங்க குதிரை வாகனத்திலும், 23ம் தேதி சனிக்கிழமை வெள்ளிப்பிடரி மயில் வாகனத்திலும், மார்ச் 24ம் தேதி கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது

பங்குனி உத்திரத் திருநாளில் திருவையாறு அருகிலுள்ள திங்களூர் சிவாலயத்தில் லிங்கத் திருமேனியை சந்திரன் தனது ஒளியால் அபிஷேகிப்பார். அதாவது அன்று சந்திரஒளி சிவன் மீது படும் அழகை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு தங்கிரீடம் சூட்டி, நவரத்தினங்களான செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டு, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான்-தெய்வானையின் திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடக்கிறது. ஞானத்தின் வடிவான முருகப்பெருமான் கிரியாசக்தியை தன்னோடு இணைத்துக்கொள்ளும் தெய்விக நிகழ்வே முருகன் தெய்வானை திருமணம். ‘நான்முகன் வேதம் ஓத, சூரிய சந்திரர்கள் தீபங்கள் ஏந்தி நிற்க, சிவ சக்தியர் ஆசி வழங்க, இந்திரன் தெய்வானையைத் தாரை வார்த்துக் கொடுக்க, சுப்பிரமணியக் கடவுள் தெய்வானையைத் திருமணம் செய்துகொண்டார்’ என்று முருகப் பெருமானுக்கும் தெய்வானைக்கும் நடைபெற்ற திருமணம் பற்றி திருப்பரங்குன்றம் தலபுராணம் விவரிக்கிறது.

மதுரையில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரரேசுவரர் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் சோலைமலை முருகப்பெருமான் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. திருக்கல்யாணத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோயில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவுதான் நமக்கு வருகிறது.

பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.

அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான்.

பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடை பெறும் அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.