நடிகை ரோஹிணியை மிரட்டும் அரசியல் குண்டர்கள்.

0
நம்ம திருச்சி-1

நடிகை ரோஹிணியை மிரட்டும் அரசியல் குண்டர்கள்.

திரைக்கலைஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவருமான ரோஹிணி, தனது கலைப்பணியில் முனைப்புடன் செயலாற்றிக்கொண்டே சமூகப்பிரச்னைகள் மீது கூரிய விமர்சனங்களை முன்வைப்பதுடன் களப்போராட்டங்களிலும் பங்கெடுத்து வருபவர்.

மலையாள தொலைக்கட்சி ஒன்றின் சமீபத்திய நேர்காணலில் அவரிடம், பிரதமர் ‘மோடியிடமும் ராகுல் காந்தியிடமும் நீங்கள் கேட்பதற்கு ஏதுமுள்ளதா எனக் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, ‘மோடியிடம் கேட்பதற்கு எனக்கு ஏதுமில்லை, ஆனால் சொல்வதற்கு இருக்கிறது. மோடி அவர்களே தயவு செய்து தேர்தலில் போட்டியிடாதீர்கள், இப்படியான பாசிச ஆட்சி இனி ஒருபோதும் தேவையில்லை. கடந்த ஐந்தாண்டுகளாக இந்துத்வாவை அதிக அளவில் கண்டுவிட்டோம். இந்துத்துவாவுக்கு எதிரானவர்களை, விமர்சித்துப் பேசுகிறவர்களைக் கொலை செய்வோருக்கு ஆதரவளித்து ஊக்குவிக்கும் ஒருவர் நாட்டின் தலைவராக மீண்டும் வருவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று பதிலளித்திருந்தார். விரிவான இந்த நேர்காணலில் இந்த ஒரு பகுதியை மட்டும் தமிழ் இதழ் ஒன்றும் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியது.

ஆட்சியாளர்களின் கடுமையான கண்காணிப்புக்கும் கருத்தியல் ஒடுக்குமுறைக்கும் ஆளாகியுள்ள இந்த நாடு அமைதி, நல்லிணக்கம், கண்ணியமான வாழ்வு ஆகியவற்றுக்கு திரும்பவேண்டும் என விரும்பும் கோடானுகோடி மக்களின் உள்ளக்கிடக்கையையே ரோஹிணி வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவரை ஒரு கும்பல் அலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வழியே மிரட்டி அவதூறு செய்துவருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் அஞ்சியோ பணிந்தோ தன் கருத்துரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்று ரோஹிணி தெரிவித்திருப்பதை தமுஎகச பாராட்டுகிறது.

திறக்கப்படாத ரயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டிருந்ததாக சொல்லிக் கொள்ளும் மோடி அந்த வேலையை விட்டுவிட்டு ஏன் பிரதமரானார் என்று கேட்காதவர்கள், அவரது ஆட்சியை விமர்சிக்கிற ரோஹிணியை மட்டும் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஏன் அரசியல் பேசுகிறாய் என்று கேட்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது. அரசின் நடவடிக்கைகள் உள்ளிட்ட எதன் மீதும் சுதந்திரமாக கருத்து சொல்வதற்கான அரசியல் சாசன உரிமையை அச்சுறுத்தல் மற்றும் அவதூறுகளால் ரோஹிணிக்கு மறுப்பதற்கான சட்டவிரோத முயற்சிகளை தமுஎகச கண்டிக்கிறது. ஜனநாயகத்திலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திலும் நம்பிக்கையுள்ள யாவரும் இவ்விசயத்தில் தமது கண்டனத்தை தெரிவிக்குமாறு தமுஎகச சார்பில் கேட்டுக்கொள்ளப் பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.