திருச்சியில் நள்ளிரவில் மண்டை ஓடுகளுடன் அகோரிகள் !

0
நம்ம திருச்சி-1

திருச்சியில் நள்ளிரவில் மண்டை ஓடுகளுடன் அகோரிகள் !

மகா சிவராத்திரியையொட்டி திருச்சி அருகே நள்ளிரவில் மண்டை ஓடுகளை கழுத்தில் அணிந்து கொண்டு அகோரிகள் சிறப்பு பூஜையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியை சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர் காசிக்கு சென்று பயிற்சி பெற்று திருச்சி அரியமங்கலம் உய்யகொண்டான் வாய்க்கால் கரை ஓரத்தில் ஜெய் அகோர காளி கோவில் அமைத்து உள்ளார். அதில், ஜெய் அகோர காளி மற்றும் ஜெய் அகோர அஷ்ட கால பைரவர் சிலைகளை பிரதிஷ்டை செய்து அதற்கு தினந்தோறும் பூஜைகள் செய்து வருகிறார். இந்த கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியதும் விசேஷ காலங்களில் காளிக்கு சிறப்பு பூஜைகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் மகா சிவராத்திரியையொட்டி நேற்று முன்தினம் இந்த கோவிலில் நள்ளிரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில், திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அகோரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் உடல் முழுவதும் திருநீறு மற்றும் சாம்பல் பூசிக்கொண்டும், கழுத்தில் மனித மண்டை ஓடுகளை அணிந்து கொண்டும், கையில் ருத்ரா மணிகளை உருட்டியபடி மந்திரங்களை சொல்லி காளியை வழிபட்டனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நவதானியங்கள், பழங்கள், மூலிகைகள் ஆகியவற்றை படைத்து பூஜை செய்தனர்.

அப்போது சக அகோரிகள் மேளம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும் ஹர ஹர மகாதேவ் என முழக்கமிட்டனர். அவர்களில் ஒரு அகோரி யாககுண்டம் முன்பு தலைகீழாக நின்றபடி காளியை வணங்கினார். முன்னதாக ஜெய் அகோர காளிக்கு அலங்காரம் செய்யப்பட்டும், ஜெய் அகோர அஷ்ட கால அகோர பைரவருக்கு அர்த்த நாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டும் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், பெண் பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அகோரிகள் நடத்திய இந்த நள்ளிரவு பூஜையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. இதேபோல, சில மாதங்களுக்கு முன்பு அகோரி மணிகண்டனின் தாயார் இறந்தார். அப்போது அவரது இறுதி சடங்கின்போது சுடுகாட்டில் அவரது உடலின் மீது ஏறி அமர்ந்து மணிகண்டன் பூஜை செய்தது நினைவு கூரத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.