அருளமுதம் எனும் அருமருந்து உயிர் வளர்ப்போம்! கதை வழி மருத்துவம்-18

0
நம்ம திருச்சி-1

சந்திரவதியின் மழலை கேள்விக்கு “அம்மா சந்திரவதி, நம்முடைய உடலில் மிகச்சிறந்தது நம்முடைய உயிர் தானம்மா” என மன்னன் பதிலளித்தான். அப்பதிலை கேட்ட சந்திரவதி “அப்பா, உயிர் என்றால் என்ன? அது நம் உடலில் எங்கு உள்ளது? எனக்கு காட்டுங்கள்” என மேலும் வினாக்களை தன் மழலை மொழியில் அடுக்கினாள். தன் மகளின் கேள்விக் கணைகள் மன்னனை வாயடைக்க செய்தன. இக்கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கக் கூடியவர் யோகியார் ஒருவரே என்பதை உணர்ந்த மன்னன் “அய்யனே, தாங்கள்தான் என் மகளின் கேள்விக்கு விடையளித்து அவளது ஐயப்பாட்டினை தீர்த்து வைக்க வேண்டும் என பணிவுடன் வேண்டினான்.

 

அங்கு நடந்தவற்றை புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்த யோகியார் சந்திரவதியை தன் அருகில் அழைத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டு அன்பான குரலில் மகளே சந்திரவதி, உயிரென்பது நமது உடலினை இயக்கும் மூல ஆற்றலாகும். அது நமது உடலில் உச்சந்தலைக்கு கீழாக அமைந்துள்ளது” எனக் கூறியபடி அவளின் உச்சந்தலையின் பள்ளத்தினை தொட்டுக்காட்டினார். யோகியாரின் விளக்கத்தினை கேட்ட சந்திரவதி “ஓ, இங்கு தான் உயிர் இருக்கா, இந்த உச்சந்தலை பள்ளம் என் தம்பிக்கு துடிக்கிறதை பார்த்திருக்கிறேன். இதுதான் உயிரா? இதுதான் நம் உடலில் அனைத்திலும் தலைசிறந்ததா?” என்று கூறியபடி மகிழ்ச்சியுடன் எழுந்து தன் அன்னையை தேடி ஓடினாள். அப்போது அங்கு வந்த அவைக் காவலன் மன்னரிடம் நாட்டின் மருத்துவ நிபுணர்கள் பலரும் அக்குயோகா எனும் ஞான மருத்துவக்கலையை பயில வேண்டி அரசவை முன் திரண்டிருப்பதாகத் தெரிவித்தான்.

 

இதனை கேட்டு மகிழ்வுற்ற மன்னன்  யோகியாரை அழைத்துக் கொண்டு அம்மருத்துவர்களைக் காண விரைந்தான். அவையின் முன்னே பல்வேறு மருத்துவம் செய்து வரும் தலைசிறந்த மருத்துவர்கள் யாவரும் குலுமியிருந்தனர்.  மன்னன் அனைவரின் முன்பாக பேசத் தொடங்கினான். “கூடியிருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் எம் பணிவான வணக்கங்கள். தாங்கள் அனைவரும் கேள்வியுற்ற அற்புத மௌன யோகியார் இவர்கள்தான். இவர் மந்திர மலை அடிவாரத்தில் இருக்கிறார். நாடும், நமது மக்களும் நன்மை அடையும் பொருட்டு தன் ஞானத்தால் பெற்ற அக்குயோகா எனும் ஞான மருத்துவ கலையை நமக்கு கற்றுத்தர இங்கு வருகை புரிந்துள்ளார். அவரை உங்கள் அனைவரின் சார்பாகவும் வருக! வருக!! என வரவேற்கிறேன்.

 

இன்றிலிருந்து யோகியார் தங்கள் அனைவருக்கும் தனது ஞான மருத்துவக்கலையை போதிக்கத் தொடங்குவார். இப்போது அவரை உங்களின் முன் உரையாற்ற அழைக்கிறேன் என மன்னன் பேசி முடித்ததும் பலத்த கரவொலி எழுப்பி அனைவரும் தங்கள் வரவேற்பை தெரிவித்தனர், யோகியார் தனது உரையை தொடங்கினார். “அன்பார்ந்த சகோதர, சகோதரிகளுக்கு எம் பணிவான வணக்கங்கள். நமக்கு இறைவன் அருளி உள்ள இந்த ஞான மருத்துவக்கலை தம்முள் அறிவால் அறிப்பட வேண்டிய அற்புதம் ஆகும்.

 

இந்த உயர் கலையினை கற்க வந்துள்ள தங்கள் அனைவரையும் வெகுவாக பாராட்டுகின்றேன். புதிய மருத்துவமாய் இருப்பினும் இதனை  ஆதரிக்கும் தங்களின் பரந்த மனப்பான்மை போற்றுதலுக்குரியது. ஒரு மனிதன் ஞானம் பெறுவதற்கு அடிப்படை தேவையே இந்த பரந்த மனப்பான்மைதான். இம்மருத்துவத்தில் இரண்டு படிநிலைகள் உள்ளன. முதல் படிநிலை தங்களது அகக்கண், நெற்றிக்கண், ஞானக்கண் எனப்படும் மூன்றாம் கண்ணைத் திறக்கச் செய்து, அதனை மருத்துவத்திற்கு பயன்படுத்தி சூட்சுமங்களை உணர்ந்து, அகக்கண் மூலமாக ஒருவருக்குள் உறங்கும் ஆற்றலை எழுப்பி, அதனை வைத்து நோய்களை நீக்க பயிற்றுவித்தல்.

 

இரண்டாவது படிநிலை உடலையும், உடலில் செயல்படும் உயிராற்றலையும், பஞ்சபூதங்களையும், உடலின் ஆற்றல் மையங்களாய் விளங்கும் சக்தி பாதைகளையும், அதன் சக்தி மைய புள்ளிகளையும் அவற்றின் செயல்பாடுகளையும், உணர்ந்து கொள்ளுதல், நாடி பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோதனை முறைகளை கற்றுத் தேர்தல். மொத்தத்தில் உடலையும் உயிரையும் நன்கு உணர்ந்து மருத்துவம் செய்தல் வேண்டும். இம்மருத்துவத்தின் அடிப்படை தத்துவங்கள் யாவும் எழுத்து வடிவில் புத்தகங்களில் ஆக்கப்பட்டுள்ளன. அதன் பிரதிகள் தங்கள் அனைவருக்கும் வழங்கப்படும். அவற்றை பெற்றுக்கொண்டு அடிப்படை தத்துவங்களை நன்கு விளங்கிக் கொள்ளுங்கள். நாளை காலை அனைவருக்கும் அக்குயோகாவின் நாடி பரிசோதனை முறையை பயிற்றுவிக்க உள்ளேன். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும். நன்றி” என தன் உரையினை முடித்துக்கொண்டார்.

 

அடுத்தநாள் காலை அனைத்து மருத்துவர்களும் பாடசாலையில் குழுமியிருந்தனர். பாடசாலைக்கு விரைந்த யோகியார்  முதலில் இறைவணக்கத்துடன் தொடங்கினார். இறைவணக்கத்திற்குப்பின் யோகியார் பேசத் தொடங்கினார். “அன்பு சகோதரர்களே,

மருத்துவம் என்பது கற்று பெறும் அறிவோ

பிறப்பால் பெறும் வரமோ அல்ல

உழைப்பால் ஈட்டப்பட வேண்டிய செல்வம்

அறிவை குவித்து அறியப்படும் ஞானம்”

இப்போது நாடி பரிசோதனை முறையை விளக்குகின்றேன்…

Leave A Reply

Your email address will not be published.