கிரெடிட் கார்டு… சில தகவல்கள்…

0
நம்ம திருச்சி-1

கிரெடிட் கார்டு நம் நண்பன் என்ற எண்ணத்தை முதலில் விட்டுவிடுங்கள்… அது நம் கடன்காரன். அவசரத்துக்கு உதவினாலும் நம்மைக் கடனாளி ஆக்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உண்மையிலேயே மிகச் சரியாகப் பயன்படுத்தினால் கிரெடிட் கார்டு சரியான ஆயுதம்தான். நம் பணத் தேவைகளுக்குக் கைகொடுக்கும் உற்ற தோழன்தான்… ஆனால், நம் வருமானத்தை மீறிய செலவுகளுக்கு நம்மை இழுத்துச் செல்கிறதா என்பதைக் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
நாலைந்து கார்டுகள் வாங்காதீர்கள். உங்களால் பராமரிக்க முடியாது.
கார்டு இலவசம்… குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால் வட்டி கிடையாது என்பன போல பல விஷயங்கள் சொல்லப்பட்டாலும் மறைமுகக் கட்டணங்கள் இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பயண டிக்கெட்டுகள் வாங்குவது போன்ற சில விஷயங்களில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் சலுகைகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதுபோன்ற விஷயங்களில் பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம்தான்.
கிரெடிட் கார்டில் செலவழித்துவிட்டு அதை எளிதான தவணைகளாக மாற்றிக்கொள்ளும் முறையைப் பின்பற்றாதீர்கள். அது நம்மைக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும். கிரெடிட் கார்டுக்கு நம் வாழ்க்கை முறையை மாற்றிவிடும் சக்தி இருக்கிறது. சிறிய ஹோட்டலுக்குப் பதிலாக நட்சத்திர விடுதிகளுக்குச் செல்வது, ரயில் பயணத்துக்குப் பதிலாக விமானத்தில் செல்வது என்று அடுத்த லெவலுக்குப் போய்விடும். இப்போதைக்கு கிரெடிட் கார்டு கொடுத்தாலும் நாம்தான் திரும்பக் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிரெடிட் கார்டு தொடர்பான அழைப்புகள் உங்கள் வசதிக்குள் இல்லையென்றால் கண்டிப்பான குரலில் நோ சொல்லுங்கள். அவர்களுடைய மார்க்கெட்டிங்கிற்காக நம்மை பலியாக்க விடாதீர்கள்.

 

கிரெடிட் கார்டைத் தேய்த்து ஒரு பொருள் அல்லது சேவையைப் பெறும் முன் அது நமக்கு அவசியமானதா… அது இல்லையென்றால் நம் ரொட்டீன் பாதிக்கப்படுமா என்பதை ஒருமுறைக்கு இருமுறை செக் பண்ணிவிட்டு வாங்குங்கள்.

கிரெடிட் கார்டு மிக அற்புதமான ஆயுதம்… அதைச் சரியாகப் பிரயோகிக்கத் தெரிந்தவர்களுக்கு… அவர் வைத்திருக்கிறாரே… இவர் வைத்திருக்கிறாரே என்று நாமும் வாங்கினால் நம்மை பதம் பார்த்துவிடும் ஆபத்தான ஆயுதமும்கூட!

Leave A Reply

Your email address will not be published.