பெரம்பலூரா, கள்ளக்குறிச்சியா? உதயசூரியன் சின்னத்தில் ஐஜேகே!

0
நம்ம திருச்சி-1

இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) யின் தலைவரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக நிறுவனருமான பாரிவேந்தர் மார்ச் 2 அன்று திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு சென்றார். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

 

அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருப்பதாக சில வாரங்களுக்கு முன் கருதப்பட்ட ஐஜேகேவை கடைசி நேரத்தில் பாஜக கழற்றிவிட்டது. பின்னர், அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுக அணியில் பாமக இடம்பெற்றது. இதையடுத்து, ‘பாமக இருக்கும் அணியின் திசைக்குக் கூட திரும்ப மாட்டோம்’ என்று அறிவித்தார் பாரிவேந்தர்.

இந்நிலையில் திமுகவில் இருக்கும் அவருக்கு நெருக்கமான சிலர் பாரிவேந்தரிடம் பேசியிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் அறிவாலயத்துக்கு வந்த பாரிவேந்தர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

“நாங்கள் இந்த அணிக்கு வந்த காரணம் எல்லாருக்கும் நன்றாக தெரியும். அந்த பாஜக கூட்டணியில் எங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கொண்டுவந்த, எங்களை இம்சித்துக் கொண்டிருந்த, தனிப்பட்ட முறையிலும், பல்கலைக் கழகத்துக்கும் தொந்தரவு கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சி இருப்பதால் அங்கே எங்களால் தொடரமுடியாது” என்று தங்களது கட்சியின் பொதுக்குழு மேற்கொண்ட ‘கொள்கை முடிவு’ பற்றி வெளிப்படையாகவே கூறினார் பாரிவேந்தர்.

”இப்போது திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கத்தான் வந்தோம். தொகுதி பற்றியெல்லாம் அவர்கள்தான் சொல்லுவார்கள்” என்றும் கூறினார் பாரிவேந்தர்.

பெரம்பலூர் அல்லது கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்று ஐஜேகேவுக்கு வழங்கப்படக் கூடும் என்று தெரிகிறது. கடந்த 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக நின்றார் பாரிவேந்தர்.
அந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மருதராஜா 4 லட்சத்து 62 ஆயிரத்து 693 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இரண்டாவதாக வந்த திமுக வேட்பாளர் சீமானூர் பிரபு 2 லட்சத்து 49 ஆயிரத்து 645 வாக்குகள் பெற்றார். பாரிவேந்தர் மூன்றாவதாக வந்தாலும் திமுகவை விட சுமார் பத்தாயிரம் வாக்குகள்தான் குறைவாகப் பெற்றார். 2 லட்சத்து 38 ஆயிரத்து 387 வாக்குகள் பெற்றார். இந்த வாக்குகளில் அப்போது தேஜ கூட்டணியில் இருந்த பாஜக, தேமுதிக, பாமக வாக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

கள்ளக்குறிச்சி தொகுதியில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ஐஜேகே இடம்பெற்றிருந்த கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 183 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம்பெற்றார். அப்போது அதிமுக வேட்பாளரான காமராஜ் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற, இரண்டாவது இடம் பெற்ற திமுக 3 லட்சம் வாக்குகளைத் தாண்டியது.

இந்த இரு தொகுதிகளின் நிலவரங்களையும், புள்ளிவிவரங்களையும் கவனித்து ஐஜேகேவின் தொகுதி எது என முடிவு செய்யப்படும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். ஐஜேகே கட்சிக்கு கொடுக்கப்படும் தொகுதியில் பாரிவேந்தரே நிற்பதா அல்லது அவரது மகன் ரவி நிற்பதா என்பதை இருவரும் ஆலோசித்து முடிவு செய்ய இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.