காடுவெட்டி குரு உறவினருடன் ராமதாஸ் சமரச முயற்சி!

0
நம்ம திருச்சி-1

அதிமுக-பாமக கூட்டணி உருவான பின்னரும் கூட பாமகவின் வெற்றிக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் விவகாரங்களை முடித்து வைப்பதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீவிரமாக இருக்கிறார்.

மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் பாமகவுக்கு எதிராக காய் நகர்த்தி வருவதையும், அவருக்குப் பின்னால் வன்னியர் சங்கப் பிரமுகர்கள் பலர் இருப்பதையும் நன்கு அறிந்த ராமதாஸ், இப்போது குரு குடும்பத்துடன் சமரசம் பேசும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதன் ஒரு பகுதிதான் குருவின் மூத்த அக்காவின் கணவரான கருணாகரன் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் தங்கை மீனாட்சி, அத்தை மகன் மணி, மருமகன் மனோஜ், வேங்கை அய்யனார் ஆகியோர் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து, ‘மாவீரன் ஜெ. குரு வன்னியர் சங்கம்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தனர். மேலும் குருவின் மகன் கனலரசன் அந்த செய்தியாளர் சந்திப்புக்கு பாதுகாப்பு காரணங்களால் வர இயலவில்லை என்றும் தெரிவித்தனர். “காடுவெட்டி குருவின் குடும்பத்தை அடியோடு அழிக்கும் வேலைகள் நடக்கின்றன. எங்களின் புதிய அமைப்பு பாமகவின் முகத்திரையைக் கிழிக்கும். வரும் மக்களவைத் தேர்தலில் அன்புமணி எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து எங்கள் மாவீரன் குருவின் தாயார் கல்யாணி போட்டியிடுவார்” என்றும் அவர்கள் அறிவித்தனர்.

 

அறிவிப்புக்குப் பின் அதற்கான வேலைகளில் குரு குடும்பத்தினரும், குரு வன்னியர் சங்கத்தினரும் ஈடுபடத் தொடங்கிய நிலையில்தான் குரு குடும்பத்தோடு சமரசம் பேச, குரு குடும்பத்தில் உள்ள டாக்டர் ஆதரவாளர்கள் சிலர் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ள்ளப்பட்டதாக தெரிகிறது.
அதன் விளைவாகத்தான், மறைந்த குருவின் மூத்த சகோதரி செல்வியின் கணவரும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவருமான கருணாகரன் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசினார்.

 

பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளை அமைதியாக செய்யும் டாக்டர் ராமதாஸ், இந்த சந்திப்பை ஒட்டி ‘குருவின் மகன் கனலரசன் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று அறிக்கையே வெளியிட்டுள்ளார்.

மார்ச் 2 ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குருவின் மூத்த சகோதரியின் கணவர் கருணாகரன் குரு குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகள் குறித்து நிறைய விசயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
குருவின் பெருமைக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவரது மற்றொரு சகோதரியின் கணவர் அன்பழகனும், அவரது குடும்பத்தினரும், மற்றவர்களும் செயல்படுவதை எண்ணி தாம் மிகுந்த வருத்தமடைவதாகவும் கூறினார். குருவின் மகள் விருதாம்பிகையின் திருமணம் குறித்து அந்தக் குடும்பத்தின் முக்கிய நபர்களான குருவின் மனைவிக்கும், தமக்கும் தெரியாது என்றும் வேதனையுடன் அவர் கூறினார். குருவின் மனைவியை விரட்டியடித்துவிட்டு, அவர்களின் சொத்துக்களை பறித்துக்கொள்ள அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் பொறியாளர் கருணாகரன் கூறினார்” என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
மேலும் கருணாகரன் தன்னிடம் முக்கிய வேண்டுகோள் விடுத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ்.

“குருவின் மகன் கனலரசனை சீரழித்துவிட்டதாகவும், தமக்கு எதிராக பின்னப்படும் சதி வலையை அவனே உணர்ந்து திருந்தாதபட்சத்தில், அவனையும், அவனது எதிர்காலத்தையும் யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் அவர் வேதனைப்பட்டார். ஒருவேளை கனலரசன் அவனது தவறுகளை உணர்ந்து திருந்திவந்து உங்களிடம் தஞ்சமடைந்தால் அவனது கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு உதவி செய்யவேண்டும் என்றும் கருணாகரன் கேட்டுக்கொண்டார்.

அதைக்கேட்ட நான், குருவின் மகன்மீது நானும், அன்புமணியும் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக தெரிவித்தேன். குருவின் மறைவிற்குப் பிறகு அவரது மகன் கனலரசனை அன்புமணி அழைத்து, அவனது கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து 2 மணி நேரம் பேசியதாகவும், அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சிறப்பாக படித்து மருத்துவராக ஆகவேண்டும் என்று அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்தேன்.

 

கனலரசன் திருந்தி வந்தால் அவனது கல்வி மற்றும் எதிர்காலத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்ய நானும், அன்புமணி காத்திருப்பதாகவும் கருணாகரனிடம் உறுதியளித்தேன்” என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
இதை குருவின் குடும்பத்துக்கு ராமதாஸ் விடுத்திருக்கும் பகிரங்க அழைப்பாகவே பார்க்கிறார்கள் பாமகவினர். ராமதாஸின் இந்த அழைப்பை குருவின் மகன் கனலரசன் ஏற்பாரா மறுப்பாரா என்பதுதான் எதிர்ப்பார்ப்புக்கு உரிய விஷயமாக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.