திருச்சி இளைஞர்கள் சாகசம் 10,125 கி.மீ விழிப்புணர்வு பயணம்

0
நம்ம திருச்சி-1

தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலைவிபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதற்காக சட்டங்களில் மாற்றம், ஆபராதங்கள் அதிகரிப்பு என அரசு ஒரு புறமும், சாலைபாதுகாப்பு வாரம் என பாதுகாப்பான பயணம் குறித்து போக்குவரத்து காவல் துறையினரின் விழிப்புணர்வு ஒருபுறமும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுதான் வருகின் றன. இருப்பினும், இந்த விபத்துகள் குறைந்த பாடில்லை, குறிப்பாக தலைகவசம் குறித்தான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இருந்தும், போக்குவரத்து விபத்துகளில் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைகவசம் இல்லாததன் காரணத்தினாலேயே நிகழ்கிறது.

இந்நிலையில், தலைகவசம் உள்ளிட்ட பாதுகாப்பான பயணம் குறித்தான முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் தமிழ்நாடு, ஆந்திரா, மேகாலாயா, அஸ்ஸாம் உள்ளிட்ட 14 மாநிலங்கள், பூடான், பர்மா, நேபாளம் உள்ளிட்ட 3 நாடுகள் என 10,125கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளனர். திருச்சியைச்சேர்ந்த பால்பாண்டியன், அருண்கணேஷ் மற்றும் பழநியைச்சேர்ந்த அஜித்குமார் என்ற மூன்று இளைஞர்கள்.

திருச்சி பாலக்கரையைச்சேர்ந்த பால்பாண்டியன் கடந்த ஒரு ஆண்டுகளாகவே ரைடர்ஸ் டிஎன் 45 (Way Riders TN 45) என்ற இருசக்கர வாகனக்குழுவை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், பாதுகாப்பான பயணம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே, முகநூலில் உள்ள பை ரைடஸ் குழுவின் உதவியை நாடியுள்ளார். பயணத்திற்கு உண்டான நம்பிக்கை கிடைத்தவுடன் தனது நண்பர் அருண்கணேஷ் மற்றும் முகநூல் நண்பர் அஜித்குமார் ஆகியோருடன் பயணத்தை தொடங்கிவிட்டார்.


கடந்த 2018 நவம்பர் 30ம் தேதி பாலக்கரையில் இருந்து பயணத்தை தொடங்கிய இவர்கள் 2019 பிப்ரவரி 2ம் தேதியன்று திரும்பி வந்தனர். இவர்களின் விழிப்புணர்வு பயணம் குறித்து நம்ம திருச்சி இதழ் சார்பிலான சந்திப்பின் போது பால்பாண்டியன் கூறுகையில், சிறுவயதில் இருந்தே இருசக்கர வாகனம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதன் விளைவாகவே Way Riders TN 45 என்ற குழுவை உருவாக்கினேன். இந்நிலையில், பாதுகாப்பான பயணம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டும் என நினைத்தேன். அதற்காக முகநூல் நண்பர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டேன்.

அப்போது, BELENNS என்ற இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு ஆடை வடிமைக்கும் நிறுவனத்தின் உதவி கிடைத்தது. அதேபோல, பழநியில் இருந்து ஒரு நண்பரும் எங்களுடன் வருவதாக தெரிவித்தார். இது எங்களின் பயணத்தின் மீதான நம்பிக்கையினை அதிகரித்தது. எந்த முன் ஏற்பாடுகளும் இன்றி பயணத்தை தொடங்கினோம். செல்லும் வழி எங்கும் உள்ள காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரிடம் எங்களுடைய பயணம் குறித்துக் கூறி தலைகவசம் பற்றிய விழிப்புணர்வு அடங்கிய துண்டறிக்கையினை கொடுத்தோம்.

மொத்தம் 65 நாட்களில் 10,125 கி.மீ பயணம் மேற்கொண்டோம். பைக் ரைடஸ் என்ற முகநூல் மூலம் கிடைத்த நண்பர்களைக்கொண்டு அந்தந்த மாநிலங்கள் மற்றும் நாடுகளில் தங்கினோம். அதனால், தங்கும் விடுதி, உணவு உள்ளிட்ட செலவுகளை பெரும்அளவில் எங்களால் குறைக்க முடிந்தது. இத்தருணத்தில் அவர்களுக்கும், என்னுடன் பயணம் மேற்கொண்ட என் நண்பர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

தலைகவசம் உயிர்கவசம் என்ற பழமொழியை உணர்த்தும் வகையில் இவர்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு பயணத்திற்கு நம்ம திருச்சி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

Leave A Reply

Your email address will not be published.