திருச்சியில் காங்கிரஸ் போட்டி?

0
நம்ம திருச்சி-1

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்தியா முழுவதும் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் பரபரப்புக்கு குறையே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் திராவிடக்கட்சிகள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காங்கிரஸ் கட்சியின் மண்டல அளவிலான தேர்தல் ஆயத்த கூட்டம் கடந்த 19ம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தமிழக செயல்தலைவரும், திருச்சி மண்டல பொறுப்பாளருமான எம்.எல்.ஏ வசந்தகுமார், மயூரா எஸ். ஜெயக்குமார், மாவட்ட தலைவர்கள் கலைச்செல்வன், வழக்கறிஞர் கோவிந்தராஜன் மற்றும் நிர்வாகிகளான ஆர்.சி.பாபு, ஜெரோம் ஆரோக்கியராஜ், சுஜாதா, விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளம்பர பிரிவு நிர்வாகியுமான ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் வரவேற்புரையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலர் சஞ்சய்தத் சிறப்புரையும் ஆற்றினர்.

இதில் பேசிய கட்சி நிர்வாகிகள், கூட்டணிக்கட்சிளுடன் இணக்கமாக செயல்பட்டு, கடந்த 4 ஆண்டுகளில் அரங்கேறிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்டவைகளினால் மக்கள்பட்ட துயரங்களையும், காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சென்று வரும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை பிரதமராக்க உறுதிமொழி எடுக்கவேண்டும் என அனல்பறக்க பேசினர். அதேபோல, அதிமுக கூட்டணியைக்குறித்தும் விமர்சிக்க தவறவில்லை. ஆரம்பம் முதலே உற்சாகத்துடன் இருந்த இக்கூட்டத்தில் கிட்டத்தட்ட 4000-த்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அங்கே இரவு உணவும் வழங்கப்பட்டது.

 

இக்கூட்டத்தில், இறுதியாக சிறப்புரையாற்றிய சஞ்சய்தத், நம்முடைய தலைமுறையினரின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கிய கட்டத்தில் நாம் உள்ளோம். தமிழகத்திற்கு காங்கிரஸ் கட்சிக்கு உள்ள வரவேற்பு உற்சாகம் அளிக்கிறது. அதிமுக, பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி, இரண்டு நாட்களுக்கு முன்பு வரை சாடிக்கொண்டவர்கள் இன்று கூட்டணி வைத்துவிட்டனர். பாஜகவுடனான இந்த கூட்டணி வருமானவரித்துறையினரின் பயத்தால் நேர்ந்த கூட்டணியே. தமிழகத்தில் அதிமுகவை வைத்து பாஜக தான் நினைத்ததை சாதித்துக் கொள்கிறது. கஜா புயலின் போது துயர்பட்ட மக்களை சந்திக்க வராத பிரதமர், நடிகர், நடிகைகளின் திருமணத்தில் பங்கேற்கிறார். இது எப்படி ஏழைமக்களுக்கான அரசாக இருக்கமுடியும். அதிமுக கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு மோடிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். ராகுல் காந்தியை பிரதமராக அமர்த்துவதை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படவேண்டும் என்றார்.

 

திருச்சியில்
மோதிக்கொள்ளும் தேசியக்கட்சிகள்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் திருச்சியில் போட்டியிட உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவும் இதே தொகுதியை கேட்பதாக தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில், இரண்டு தேசியக்கட்சிகளும் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதால் இத்தொகுதி தமிழக அளவில் கவனிக்கப்படும் மற்றும் தேர்தல் திருப்புமுனை தொகுதியாக அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

சோனியா உத்தரவு

கூட்டத்தில் சஞ்சய்தத் பேசுகையில், திருச்சி தொகுதியில் நாம் வெற்றிபெற்றே ஆக வேண்டும். எனவே நீங்கள் சென்று பேசுங்கள் என சோனியாகாந்தி எனக்கு உத்தரவிட்டார். திருச்சி தொகுதியில் நமக்கு பலம் அதிகம் இருப்பதால் நாம் வெற்றி பெறுவது உறுதி. தமிழகம் முழுவதும் சத்தி உறுப்பினர்கள் 2லட்சம் பேர் இதுவரை காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். அதில் அரியலூரில் அதிகபட்சமாக 3,000 உறுப்பினர்களும், திருச்சி தெற்கு, மாநகராட்சி உள்ளிட்ட இடங்களில் 4000 உறுப்பினர்களும் சேர்ந்துள்ளனர். இனி வரும் நாட்களில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்க நாம் உழைக்கவேண்டும் என்றார்.

 

மாமாவை விமர்சித்த மச்சான்

பாமகவின் இளைஞரணி தலைவரும், சகோதரியின் கணவருமான அன்புமணி ராமதாஸையும், அவருடைய தந்தையும் காங்கிரஸ் அமைப்பு செயலாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத் கூட்டத்தில், திராவிடக்கட்சிகளுடன் கூட்டணியே கிடையாது என்றார்கள். ஆனால், இன்று 10 நிபந்தனைகளை முன் வைத்து அதிமுகவுடன் இணைந்து விட்டனர்.

அதிமுக, பாமக இடையே கூட்டணி பேரம் நடந்துள்ளது. அவர்கள் நம்மிடம் வந்திருந்தால் அவர்களுக்குப் பெருமை. ஆனால், தற்போது வேறு வழியை தேர்ந்தெடுத்துவிட்டனர். வன்னியர் சங்கத் தலைவராக இருந்த குருவை கைது செய்து சிறையில் அடைத்த காரணத்தினால் தான் மரணமடைந்தார். தற்போது அமைந்துள்ள இந்த கூட்டணியை குருவின் ஆன்மா கூட மன்னிக்காது. காங்கிரஸ் ஆட்சியில் பாமகவுக்கு அமைச்சர் பதவி வரையில் கிடைத்தது. தற்போதோ முதுகில் குத்திவிட்டு ஓடுகிறீர்களே என்று கடுமையாக விமர்சித்தார்.

 

 

ஜோசப் லூயிஸ் வேட்பாளர்

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக செயல்தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏவிடம் கேட்ட போது, திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சிதான் போட்டியிடுகிறது. முன்னாள்
எம்.பி அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தான் வேட்பாளராக போட்டியிட உள்ளார் என்றார்.
இதுபற்றி காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் விசாரிக்கையில், ஜோசப் லூயிஸ் போட்டியிட்டால் திருச்சி தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவோம். அவர் போட்டியிட தயாராக உள்ளார் என்ற செய்தி வந்த உடனே காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகமாகிவிட்டனர். இதே உற்சாகத்துடன் களத்தில் இறங்கி வேலைபார்ப்பார்கள் என்றனர்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.