கந்து வட்டியில் தப்ப சில வழிகள்…

0
நம்ம திருச்சி-1

சாதாரண மனிதர்களாக இருந்தாலும் சரி, பிசினஸ் செய்பவர்களாக இருந்தாலும் சரி, திடீர் தேவைக்குக் கடன் வாங்குவது தவறில்லை. ஆனால், தொடர்ச்சியாக கடனை வாங்கிக்கொண்டே வாழ்க்கையையும், பிசினஸையும் நடத்துவதுதான் தவறு. பணத்தைக் கடனாக வாங்கும்போது அது நமக்கு எதிராக வேலை செய்கிறது. ஆனால், முதலீடு செய்யும்போது நமக்குச் சாதகமாகச் செயல்படுகிறது. பணத்தின் இந்தத் தாரக மந்திரத்தைப் புரிந்துகொள்பவர்கள் கடன் வலையில் ஆரம்பத்தில் சிக்கினாலும், பிறகு அதில் சிக்கவே மாட்டார்கள்.

வருமானத்துக்குள் செலவு

முடிந்தவரை கடன் வாங்காமல் நமது தேவைகளை நிறைவேற்றக் கற்றுக்கொண்டால் நிம்மதியுடன் வாழலாம். மாதம் ரூ.5,000 சம்பாதித்தாலும், ரூ.50,000 சம்பாதித்தாலும் இன்னும் நிறைய பணம் வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் தவறானது. பக்கத்து வீட்டுக்காரர் அதை வைத்திருக்கிறார், இதை வைத்திருக்கிறார் என்று சொல்லி நாம் கடனில் பொருள்களை வாங்குவது தவறு. கல்யாணமோ, கருமாதியோ, நம் கையில் உள்ள பணத்துக்கேற்ப செலவு செய்ய நினைக்கும் தைரியம் நமக்கு வேண்டுமே தவிர, கெளரவத்துக்காக கடன் வாங்கிச் செலவு செய்துவிட்டு, சிக்கலில் மாட்டக்கூடாது. வருமானத்துக்கேற்ப வாழக் கற்றுக்கொண்டால், கடன் வலையில் சிக்காமலே இருக்கலாம்.

 

வட்டியைப் புரிந்துகொள்ளுங்கள்

கடன் வாங்கும்போது தனிப்பட்ட நபர்களிடம் வாங்குவதைவிட, வங்கிகளில் வாங்குவது நல்லது என்பதற்குக் காரணம் வட்டிதான். இந்த வட்டியைப் புரிந்துகொண்டால், கடன் வாங்க பலரும் யோசிக்கவே செய்வார்கள்.
வங்கியில் ரூ.10,000 கடன் வாங்குகிறோம் எனில், அதற்கு வட்டியாக ஆண்டுக்கு 10% என்றால், ஆண்டுக்கு ரூ.1,000 கட்டினால் போதும். இதை மாதக் கணக்கில் கணக்கிட்டால் வெறும் ரூ.83 மட்டுமே ஆகும்.

ஆனால், கந்துவட்டி அப்படியல்ல. இதில் மாதத்துக்கு ஒரு ரூபாய்க்குக் குறைந்தது மூன்று பைசா முதல் அதிகபட்சமாக 10, 12, 15 பைசா என்கிற அளவில் வட்டி வசூலிப்பார். அதாவது, 10,000 ரூபாய்க்கு மாதத்துக்கு மூன்று பைசா வட்டி என்றால், அதற்கு மாதத்துக்கு வட்டியாக 300 ரூபாய் தரவேண்டும். ஆக, ஆண்டுக்கு ரூ. 3,600 வட்டி போகும். சதவிகிதக் கணக்கில் பார்த்தால், ஆண்டுக்கு 36% சதவிகித வட்டியாகும்.

மூன்று பைசாவுக்கே இப்படி எனில், நான்கு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா என்றால், வட்டியாகக் கட்டவேண்டிய பணம் எவ்வளவாக இருக்கும் என்பதைக் கணக்கிட்டால், நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள். இந்த வட்டிக் கணக்கைப் புரிந்துகொள்ளாமலே பலரும் கடன் வாங்கி, பிறகு அசலைத் திரும்பத் தரமுடியாமல் வட்டி மட்டுமே கட்டி, தன் வாழ்க்கையைத் தொலைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

வங்கியில் வாங்கினால் தப்பில்லை

வங்கியில் கடன் வாங்கத்தான் நினைக்கிறோம். ஆனால், தரமாட்டேன் என்கிறார்களே என்பதே பலருடைய புகாராக இருக்கிறது. வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்துள்ள பணத்தைத்தான் வங்கிகள் மற்றவர்களுக்குக் கடனாகத் தருகின்றன. எனவே, பணத்தைத் திரும்பச் செலுத்தும் தகுதியிருந்தால் மட்டுமே வங்கிகளில் கடன் கிடைக்கும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். வங்கிகளில் கடனுக்கான வட்டி நியாயமாக இருப்பதால், அங்கு மட்டுமே தேவைப்படும்போது கடன் வாங்கலாம். வங்கிகளில் கடன் கிடைக்கவில்லை எனில், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களில் கடன் வாங்கலாம். மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் அதிகபட்சமாக 26 சதவிகிதத்துக்கு மேல் வட்டி வசூலிக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது. இந்த 26 சதவிகித வட்டியே வங்கி வட்டியுடன் ஒப்பிடும்போது அதிகம் என்றாலும், தனிப்பட்ட நபர்களிடம் 36 சதவிகித வட்டி கட்ட வேண்டியிருக்கும் என்பதால், இந்த வட்டி பரவாயில்லை எனலாம்.

 

Leave A Reply

Your email address will not be published.