சாம்பவாண் ஓடை சிவராமன் சமகால வரலாற்றுத் தொடர்-18

0
நம்ம திருச்சி-1

சீனிவாசராவ் தண்ணீர் கேட்டதைப் பார்த்துவிட்டுச் சேரியிலுள்ள கிழவி வெடவெடத்துப் போயிருக்கிறாள்.
“சாமி நாங்க நத்த திம்போம். செத்தமாடு திம்போம். எங்க குடிசையிலே நீங்க தண்ணி கேக்கலாமா? கொடுத்தா எங்களுக்கு பாவம் இல்லயா சாமீ?”
அவள் சொல்லியதைக் கேட்டவுடன் சீனிவாசராவ் அப்படியே ஒரு கணம் சிலையாக நின்றாராம். அவளுக்குப் பதில் சொல்ல வார்த்தைகளே வரவில்லை.
அப்படியே நிற்கின்றார். சிவராமனுக்கு புத்தரின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றைப் படித்தது நினைவிற்கு வந்தது.

 

புத்தர் ஒரு பொட்டைக் காட்டு வழியில் போகின்றார். நல்ல வெயில் நேரம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கானல் நீர். குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லை. தொண்டை வறண்டு விட்டது. மயக்கம் வந்தது. அப்படியே விழுந்து விட்டார்.
ஆடு மேய்த்த இடைச் சிறுவன் ஓடி வருகின்றான். தழைகளை ஒடித்து அவர் மேல் நிழல் பட வைக்கிறான். ஆட்டைப் பிடித்து வந்து காம்பை வாயில் வைத்து பாலைக் கறந்து விடுகிறான். மயக்கம் தெளிந்த புத்தர் இடைச்சிறுவனிடம் கலயத்தில் பால் கறந்து தருமாறு கேட்கின்றார். இவன்தான் தாழ்ந்த குலம் என்றும் தன் கலயத்தில் அவர் பால் குடிக்கக் கூடாது என்றும் மறுக்கின்றான். உயர்ந்தோர், தாழ்ந்தோர் என மனித குலத்தில் இல்லை. மனிதர்களே அப்படி பாகுபாடு செய்துள்ளார்கள் என்று அறிவுரை வழங்கினார்.

 

மேல் சாதி, கீழ் சாதி என்ற பாகுபாடுகள் இடைக்காலத்தில் ஏமாற்றுக்காரர்கள் உண்டாக்கியவை என்று சொல்லிக் கலயத்தில் பால் வாங்கிக் குடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டதாம்.
ஓடும் உதிரத்தில் வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப்பார்த்தாலும் – சாதி
தெரிவதுண்டோ அப்பா!
கவிமணியின் இந்த வரிகளை நினைத்துப் பார்க்கும் போது சிவராமனுக்கு அப்படியே உடம்பு சிலிர்த்து விட்டது.
திருத்துறைப்பூண்டியில் ஒரு இளைஞனைச் சிவராமனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். ஆள் கருப்புதான். நல்ல அழகாக இருந்தான்.
அவனைப் பார்க்க இவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. களப்பால் குப்பை நினைவுபடுத்தும் வகையில் இருந்தான்.

 

அவனுக்குத் தஞ்சாவூர் பக்கம் ஊராம். வெள்ளக்கார அரசாங்கத்தில் வேலையில் இருக்கிறானாம். மதம் வேறு மாறி இருக்கிறானாம். சேரி ஆள் வேலையில் – அதுவும் அரசாங்க வேலையில் இருக்கிறான் என்பதை அறிதும் சிவராமனுக்கு வியப்புத் தாங்க முடியவில்லை. ஊரில் நிறைய நிலமும் இருக்கின்றதாம்.
பேசிக் கொண்டு இருக்கும் போது அவன் பேசியது சிவராமனுக்கு வியப்பை தந்தது. ஒன்றுமே இல்லாதவர்களிடமும் சோகம். ஓரளவு வசதியோடு வாழும் சேரி மக்களிடமும் சோகம்.

 

“அரசாங்க வேலை இருந்து என்ன? வசதி இருந்து என்ன? மதம் மாறி என்ன? தீண்டாம இருக்கே?
அவன் சொல்லிய செய்திகளைக் கேட்ட சிவராமன் அதிர்ச்சி அடையவில்லை. அன்றாடம் எங்கும் நடைபெறக் கூடியவையே. இருந்தாலும் படித்து வேலையில் இருப்பவனுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு வியப்படைய வேண்டியது இல்லை.
இந்த இளைஞன் பக்கத்திலுள்ள சொந்தக்கார வீட்டிற்குச் சென்று இருக்கிறான். எப்போதும் போல வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து கொண்டு வந்து இருக்கிறான். காலில் செருப்பும் இருந்தது. குடியானவர்கள் தெரு வழியாகத்தான் சேரியிலுள்ள அவன் சொந்தக்காரர் குடிசைக்கு போக வேண்டும்.

 

பொதுவாக ஊர்ப்புறங்களில் வெளியூரிலிருந்து யாராவது வந்தால் ‘யார், எவர்” என்று விசாரிப்பார்கள். இந்த இளைஞனைச் சாவடியில் உட்கார்ந்து இருந்தவர்கள் விசாரித்து இருக்கிறார்கள். இவனும் தான் போக வேண்டிய இடத்தையும் என்ன சொந்தம் என்பதையும் சொல்லி இருக்கின்றான்.
“இவனப் புடிச்சு ஆல மரத்துல கட்டுங்கடா?”
அந்தப் பக்கமாப் போன சேரி ஆட்களிடம் சொன்னார்கள். அவர்களும் ஆலம் விழுதில் பிடித்துக் கட்டினார்கள்.
“நான் அரசாங்க வேலையில் இருக்கேன்”
” நீ யாரா இருந்தா என்ன?சேரிப் பய என்னா திமிரு இருந்தா செருப்புப் போட்டுக்கிட்டு எங்க தெருவுல வருவே?”
சூரியன் உச்சியில் இருக்கும் போது கட்டிப் போட்டார்கள் நீண்ட நேரமாகியும் அவனுடைய சொந்தக்காரர்கள் செய்தி அறிந்தும் வரவே இல்லை. எப்படிப் போய் அவிழ்த்துவிடச் சொல்வது என்று குழம்பினார்கள். பொழுது சாயும் நேரத்தில் வெற்றிலைப் பாக்கு வாங்கி வைத்துக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்டு அவிழ்த்துக் கொண்டு போனார்களாம்.

 

இந்த நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது சிவராமனுக்கு இரத்தம் கொதித்தது, கோபம் வருவதை முகம் நன்றாக காட்டிக் கொடுத்தது. சீனிவாசராவ் சிவராமனைக் கவனித்துக் கொண்டு இருந்தார். அவரிடம் இவன் பேசினான்.
“தோ… தோழரே எனக்கு ஒரு ஆச”
“என்ன?”
“ந… நம்ப கட்சி ஆட்சிக்கு வருமா?”
“சுதந்திரம் வரட்டும்”
“சு… சுதந்திரம் வந்தா ஆட்சியப் புடிச்சுடுமா?”
“நம் கையிலதான் இருக்கு”
“ந… நம்ப கட்சி ஆட்சிக்கு வந்தா எ…எனக்கு ஒரு எஸ் ஐ வேல வாங்கிக் கொடுங்க”
சீனிவாசராவுக்குச் சிவராமன் எதற்கு கேட்கிறான் என்று ஒன்றும் புரியவில்லை. இவனிடம் சிரித்துக்கொண்டே கேட்டார்.
“எஸ் ஐ ஒரு பெரிய வேலயா? ஆட்சி வரட்டும். ஒனக்கு மந்திரி பதவியே கொடுக்கச் சொல்லுறேன்.”
“எ… எனக்கு அந்தப் பதவி எல்லாம் வேண்டாம். நா… நாக்கு வழிக்கவா? ம… மக்கள ஏமாத்துறவன, தீ… தீண்டாமைய ஆதரிக்கிறவன ல… லஞ்சம் வாங்குற அதிகாரிய, க… கள்ளக்கடத்தல் பண்ணுறவன, க… கலப்படம் செய்யுறவன, ப… பதுக்குறவன அதால ஒ.. ஒன்னும் செய்ய முடியாது. அ… அது வளர்த்துத்தான் விடும்.”
“எஸ் ஐ வேல கொடுத்தா என்னா செய்வே?”
“இ… இது மாரித் தப்பு பண்ணுறவன எல்லாம் சு… சுட்டுத்தள்ளிடுவேன்”
சிவராமன் பேசியதைக் கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

 

ஆனால் சீனிவாசராவ் மட்டும் சிரிக்கவில்லை. இவன்மனத்திற்குள் ஆழமாகப் பதிந்து கிடக்கின்ற நாட்டு நலத்தை மனித நேயத்தை எண்ணிப் பார்த்தார். இரண்டு கால் இருந்தும் தத்தி தத்தி நடக்கும் தவிட்டு குருவியைப் போல நடக்கத் தெரியாத சேரி மக்களுக்காக குரல் கொடுக்க வீறு நடை போடும் இவனை இதயத்தால் ஆரத்தழுவினார்.

 

சிவராமன் கீழத் தஞ்சையின் மூலை முடுக்குகள் எங்கும் சுற்றிப் பார்த்தான். இவனுக்குக் கட்சி விவசாயச் சங்கத்தின் பொறுப்பாளர் என்ற பதவியும் கொடுத்து இருந்தது. ஆங்கிலேய அரசாங்கம் கம்யூனிஸ்டுக் கட்சியின் தடையை நீக்கி இருந்தாலும் அந்தக் கட்சியில் சேரி மக்களை சேர விடாமல் தடுக்க பெரும் முயற்சி எடுத்துக் கொண்டது. இந்தப் பகுதிகளைச் சுற்றிப் பார்க்கும் போது கட்டை நாராயணசாமி சொன்னது உண்மையாகவே இருந்தது.
மூன்று வருஷங்களுக்கு முன்னால் தென்பறையில் ஆரம்பிக்கப்பட்ட விவசாயிகள் சங்கம் சேரி மக்களிடையேயும் பண்ணை நிலத்தைச் சாகுபடி செய்வோரிடையேயும் ஒரு புது எழுச்சியை உண்டாக்கியது. மன்னார்குடிப் பகுதியில் வெங்கடேசன் இராமானுஜம், அமிர்தலிங்கம் போன்ற துணிச்சல் மிக்க தோழர்களைச் சந்தித்தான்.

 

இனிமேல் சங்கம் கட்டி வாழவில்லை என்றால் நிம்மதியாக வாழ முடியாது என்பதை சேரி மக்கள் புரியும்படி செய்து விட்டார்கள். அந்த முயற்சியில் பெரும்பாலானவர்கள் அகம்படியவர்களாகவும், கள்ளர்களாகவும் இருந்தனர்.
உழைப்பிற்கு ஏற்ற கூலி கொடுக்க வேண்டும். சாட்டை அடியும் சாணிப்பால் கொடுப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்பவை முக்கியமான கோரிக்கைகளாக இருந்தன.
கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் வளர்ச்சியைக் கண்டு பெரும்பாலான பண்ணையார்கள் கொதித்து எழுந்தார்கள். போலீஸ் அடக்குமுறை அதிகமாக இருந்தது. பல பகுதிகளில் போலீஸ் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இதற்கு முன் இந்தப் பகுதிகளைப் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் சிவராமனுக்கு நிறைய வேறுபாடுகள் இருந்தன. இவனுடைய மனதிற்குள் கடவுள் நம்பிக்கை சிறகடித்துப் பறந்து விட்டது. இதற்காக காரல் மார்க்சைப் பெருமையோடு நினைத்துப் பார்த்தான்.

 

வானம்பாடியைப் போல கட்டுப்பாடில்லாமல் கீழத் தஞ்சை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு முத்துப்பேட்டைக்கு வந்தான். பதினைந்து நாட்களுக்கு மேல் சுற்றிவிட்டு இந்தப் பகுதிக்கு வருவது கூண்டுக்குள் அடைபட வருதைப் போல இருந்தது.

 

சிவராமன் எங்கு இருக்கிறான் என்பதை அறிந்து கொள்வதற்காக ஆயா பல முறை சுந்தரராசு கடைக்கு வந்து போய்விட்டாளாம். அவள் சொல்லிச் சென்ற செய்தியை அறிந்து இவன் முகம் சுருங்கிக் போய்விட்டது.

 

கடலைப் போல விரிந்து கிடந்த மனம் குட்டையைப் போல குறுகிவிட்டது. தான் கொண்டுள்ள நீண்ட பயணத்திற்குக் கல்யாணம் தேவைதானா? என்று எண்ணிப் பார்த்தான். அக்கா வீட்டுப் பெண்ணிற்கு வயது ஆகிவிட்டது என்று கல்யாணத்தைச் செய்து விட வேண்டும் என்று துடிக்கின்றார்களாம்.
ஆயாவைப் போய் வீட்டில் பார்த்தான். ‘ அவ கெடக்குறா வத்தலா அவ வீடு கெடக்கு பொத்தலான்னு மட்டும் நெனச்சுடாதிய. என் தம்பிக்குப் பொண்ணக் கட்டாட்டி ஙப்பன் வீட்டுத் தூணுக்குக் கொண்டாந்து கட்டி வச்சுடுவேன் என்று ஒரு அக்கா ஒற்றைக் காலில் நிக்கிறாளாம். பாசம் இவன் கோட்டையில் பாதியைச் சிதைத்து விட்டது.

 

“இந்த எடத்துக்கு மேல ஒரு அடி முன்னால எடுத்து வச்சா ஒங்க மேல அடி தான் விழும்”
சங்கம் அமைத்த வடபாதி மங்கலத்திற்குள் கொடியேற்றச் செல்லும் கூட்டத்தை மறைத்துக் கொண்டு போலீஸ் அதிகாரி பயங்கரமாகக் கத்துகின்றார். நூற்றுக்கு மேற்பட்ட போலீஸ்காரர்கள் சாலையை மறித்துக் கொண்டு அணிவகுத்து நல்ல பாம்புகள் படம் எடுப்பதைப் போல முன்னால் நிற்கின்றனர்.

 

திருவிழாவிற்கு வரும் கூட்டத்தைப் போல நாலா பக்கங்களில் இருந்தும் சேரி மக்கள் வந்து குவிகின்றனர். அவர்கள் சாரில் வந்து குவியும் மீனாக இல்லை. இப்போது தெரிந்தே வருகின்றார்கள். வடபாதி மங்கலத்தில் கட்டப்படும் பண்ணையாரின் பங்களா வானளவு உயர்ந்து பாட்டாளி மக்களின் வயிற்றெரிச்சலின் சின்னமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது. தொடரும்

Leave A Reply

Your email address will not be published.