மேன்மையான பண்பை வளர்த்திடு… உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்திடு…

0
நம்ம திருச்சி-1

ஐம்பது கோடி மக்களுக்கு தலைவரான காந்தியை மக்கள் “மகாத்மா” என்று அழைத்தனர். மகாத்மா என்றால் “சிறந்த மனிதர்” என்று பொருள்.
சுதந்திரத்திற்காக போராடி இந்திய நாட்டின் தந்தை என்றழைக்கப்படுவதற்கு முன்பாக அவர் ஒரு வெட்கப்படும் சாதாரண சிறுவனாக இருந்தார். “நான் ஒரு சராசரி பண்புகளை கொண்ட மனிதனை விட பெரியவன் இல்லை. நான் செய்த முயற்சியையே செய்து, நான் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை உருவாக்கிக் கொண்டால் நான் சாதித்ததை எந்தவொரு ஆணோ அல்லது பெண்ணோ சாதிக்கலாம் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் கிடையாது” என்று காந்தி கூறினார்.

மேலாண்மை பண்பு என்பது மிக மிக முக்கியமான ஒரு பண்பு என்பதை மாணவச் செல்வங்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் உணர்ச்சிப்பிழம்பாக நடந்து கொள்ளக் கூடாது. முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் நன்கு தீர்மானிக்க வேண்டும். பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, உடன் பயில்வோரோ சொல்லும் ஆலோசனைகளைப் புறந்தள்ளக் கூடாது. அவற்றில் ஏதாவதொரு பயன் கண்டிப்பாக இருக்கும் என்பதை உணருங்கள்.
எந்த சூழ்நிலையில் எப்படி நடத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து செயல்படுங்கள்.

மன்னர் – நாட்டின் நிலை அறிய நகர்வலம் வர வேண்டியது தான்; அதுவும் மந்திரி பிரதானிகள் உடன்வர! ஆனால், அக்பருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. நடுப்பகலில் ஆக்ராவின் தெருக்களில் தான் மட்டும் தனியே நகர்வலம் வருவது என்று அதுவும் மாறுவேடத்தில். ஆனால், அக்பரின் இந்த முடிவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார், பீர்பால்.

‘அரசே, ஒரு நாட்டை ஆள்பவரின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். இந்த முடிவைக் கைவிடுங்கள் என்று கூறினார். மற்ற அமைச்சர்களும் இதே கருத்தைக் கூறினர். ஆனால் அக்பர் கேட்பதாக இல்லை. வழிப்போக்கன் போல் மாறுவேடம் பூண்டு ஒரு தெரு வழியே சென்றார். அப்போது தன்னை ஒருவன் பின்தொடர்வதைப் போன்று உணர்ந்தார். பின்னால் திரும்பிப் பார்த்தால் அவன் வேறு ஏதோ செய்தான். அவன் அருகில் சென்ற அக்பர்,
“உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.
“நான் வழிப் போக்கன்”
“வாழ்வதற்கு என்ன செய்கிறாய்?”
“ஏதோ செய்கிறேன்”
“நீ வசிக்கும் இடம் எங்கே?”
“எல்லா இடத்திலும் தான்!”
“அப்படியா, நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் தெரியுமா?”
ஓ தெரியுமே! ஒரு மனிதனிடம் தான்!”

 

சாதாரண மனிதனில்லை, நாட்டின் சக்கரவத்தியிடம் சந்தேகம் இருந்தால் இதோ என் முத்திரையைப் பார்”…… அக்பர் தனது அரச முத்திரையை எடுத்து காட்டினார். அவனோ, அதை உடனே பிடுங்கி தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஓட்டமெடுத்தான். வேறு வழி? அக்பர் “திருடன் திருடன் என்று கூவினார். சுற்றிலும் இருந்த ஆட்கள் திரண்டார்கள். ஓடி வந்தவனைப் பிடித்துக் கொண்டார்கள். பிடிப்பட்டவன் சொன்னான்….. நான் நாட்டின் சக்ரவர்த்தி, இதோ பாருங்கள் என் முத்திரை. நான் நகர்வலம் வந்தேன்…. என்று சொல்ல வந்தவர்கள் பெரிய ‘சலாம்’ போட்டு ஒதுங்கிக் கொண்டார்கள். மக்கள் தன்னைத் தாக்குவதற்குள் அரண்மனையில் சரண்புக அரண்மனையை நோக்கி ஓட்டமெடுத்தார் அக்பர்.
பீர்பால் சொல்லச் சொல்லக் கேட்காமல் இப்படி வந்துவிட்டோமே! எப்படி அவர் முகத்தில் விழிப்பது என்று குற்றவுணர்ச்சி மேலோங்க தலை குனிந்தபடி வந்தார் அக்பர். தன் அறையில் ஒரு மேஜையில் ஒரு பார்சல் இருப்பதைக் கண்ட அக்பருக்கு திடீர் அதிர்ச்சி. அதைப் பிரித்துப் பார்த்த போது ஒரு கடிதமும், அரசு முத்திரையும் இருந்தது. “மக்களோடு சரிசமமாக இருந்து, நாட்டின் நாடிப் பிடித்து பார்க்க தனியே போகிறேன் என்றீர்களே….

 

இப்போது ஒரு முத்திரையை மட்டும் தான் இழந்தீர்கள். இனி, மோசமான எதுவும் நடக்கலாம் என்பதைப் புரிந்துக் கொண்டிருப்பீர்கள்”….. என்றது கடிதம் அக்பருக்கு பீர்பால் சொன்னதன் பொருள் நன்கு புரிந்தது.
மாணவச் செல்வங்களே! பாடங்கள் மட்டுமின்றி, பிற திறன்களையும் கற்றுக் கொள்ளுங்கள். பண்பு, அறம், நெறி சார்ந்த கல்வியை புரிந்துக் கொள்ளுங்கள். இயல்பிலேயே இருக்க வேண்டிய பணிவு, விட்டுக்கொடுத்தல், பிறரை மதித்தல், உதவி செய்தல் போன்ற முக்கியப் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
நற்பண்புகள் மட்டும் தான் ஒருவனை நல்ல வழியில் கொண்டு செல்லும். எனவே மாணவக் கண்மணிகளே உங்களின் மேலான பண்புகளை இப்புதிய புத்தாண்டிலிருந்து கடைப்பிடியுங்கள், சிறப்பான வாழ்க்கை வாழ உயருங்கள்.
வெற்றிப் பயணம் தொடரும்…

Leave A Reply

Your email address will not be published.