அறிவோம் தொல்லியல்-5 பயணங்கள் முடிவதில்லை…

0
நம்ம திருச்சி-1

கொடுமணலில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டபின் அதன் காலகட்டத்தை இருவேறு காலமாய் வகைப்படுத்தியுள்ளனர். கி.மு 300 முதல் கி.பி 100 வரை பெருங்கற்கால காலம் எனவும், அதற்கடுத்து கி.பி100 முதல் கி.பி.300 வரை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் எனவும் பிரிக்கப்படுகிறது.

 

2011ம் ஆண்டு வரையில் நடந்த அகழாய்வு வரை, மொத்தம் 15 அகழாய்வு குழிகள் மற்றும் மூன்று பெருங்கற்கால சின்னங்கள் முழுதாய் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. லெசனக்காடு, தோரணக்காடு ஆகிய இரு இடங்களில் இக்குழிகள் அமைக்கப்பட்டது.(இப்போது வரை 48 குழிகள் தோண்டப்பட்டுள்ளது)

பெருங்கற்கால எச்சங்கள்:

 

இக்குழிகள் அனைத்திலும் கீழ்ப்பகுதியின் மூன்றாவது அடுக்கில் சுமார் 30 செ.மீ தடிமனில் பெருங்கற்கால காலத்தைச்சேர்ந்த பொருட்கள் கிடைத்தன. இரும்பை உருக்கிய உலையின் சிதைவுகள் காணப்படுகிறது! இரும்புவாள், அம்பின்முனைகள், இருபுறமும் கூரான ஈட்டி ஆகியன குறிப்பிடத்தக்கது. இங்கு கிடைத்துள்ள பானைகள் பளபளப்பாக செப்பனிட்டு சிறந்தமுறையில் செய்துள்ளனர், பானையை வார்த்து, தீயில்சுட்டு அதன்பின் வண்ணப்பூச்சால் அலங்கரித்துள்ளனர். பானையின் கழுத்துப்பகுதியில் கீறல்கள், பிராமி எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகிறது! அரியவகை கல்மணிகள்(Crystals), சூதுபவளம்(Carnelian beads) செய்யும் நுட்பத்தினை அறிந்து வைத்துள்ளனர். ஒரு மட்கலத்தின் மேற்புறமூடியில் ஒரு பறவையின் உருவம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது, இது பெருங்கற்கால நினைவு சின்னத்தில் கிடைத்தது.

வரலாற்று முற்காலம்:

ஆய்வுக்குழிகளின் முதல் மற்றும் இரண்டாவது அடுக்கில் வரலாற்று முற்கால மக்கள் உபயோகப்படுத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. மான்கொம்பு, சங்கு வளையல்கள், கண்ணாடி வளையல்கள், எலும்புகள், சுடுமண் பொருட்கள், அறுக்கப்பட்ட சங்குகள், கிடைத்தது.

கொடுமணல் பகுதியில் மக்களின் வாழ்வியலை விளக்கும் சான்றுகள்.

கீழடியில் இவ்வகை மணிகள், வளையல்கள் கிடைத்தன. ஆனால், அங்கு மக்கள் பயன்படுத்திய எச்சங்களே கிடைத்தது. கொடுமணலில் இப்பொருட்கள் தயாரித்த உலைகள், அறுத்த பொருட்களின் குப்பைகளும் கிடைத்தது. மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யும் உலைகள் இருந்தது தெரிய வருகிறது! இங்கும் மட்கலங்களில் பிராமி எழுத்துக்கள் நிறைய கிடைத்தது. ரோமானிய மட்கலங்கள் கண்டெடுக்கப்பட்டது, இம்மக்கள் அயலகத்துடன் வாணிகத்தொடர்பு கொண்டிருந்ததும் தெரிய வருகிறது! தானியக்குழியும் கிடைத்ததிலிருந்து இம்மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு, உபரியாய் சேமித்து வைத்துமுள்ளனர். மேலும் குவியல் குவியலாய் கூரைஓடுகள் கிடைத்தது, இம்மக்கள் ஓட்டினால் கூரைவேய்ந்து அங்கே வசித்ததை அறியலாம்.

 

பொதுவாக அகழாய்வுக்குழிகள் இங்கு 4×4 மீட்டர் அகலமும் 2.1 மீட்டர் ஆழத்திலும் தோண்டப்பட்டது. சில இடங்களில் கிடைக்கும் பொருட்களின் தன்மைக்கேற்றவாறு அகலம், ஆழங்கள் அதிகரிக்க மற்றும் குறைக்கப்பட்டது. அதிகபட்சமாய் 12 வது குழி 5×5 மீட்டர் அகலமும், 2.50 மீட்டர் ஆழமும் கொண்டது.

பெருங்கற்கால சின்னங்கள்:

கொடுமணலின் வடக்கிலும், வடகிழக்கிலும் சுமார் 150 ற்கு மேற்பட்ட பெருங்கற்கால சின்னங்களான கல்வட்டங்களும், குத்துக்கல்லும் உள்ளன. இச்சின்னங்கள் இருபிரிவுகளாக காணமுடிகிறது.

முதல்வகை:
கற்பதுக்கை அமைத்து அதனைச்சுற்றிலும் உருண்டையான கற்களை கொண்டுவந்து வட்டவடிவமாக அமைக்கப்பட்டது. இதனை உள்வட்டம் எனலாம். இதன் வெளிப்புறம் சமமாக இடைவெளிவிட்டு குத்துக்கல்பலகைகளால் ஆன கல்வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அவை, முதன்மை பகுதி(Main cist), வாயில் பகுதி(Passage), துணைக்குழிகள்(subsidiary cist), தாழி(Urn), தாங்குசுவர்(Butterss wall), உள்பக்க கல்வட்டம்(Inner circle), வெளிப்பக்க கல்வட்டம்(Butter circle), பலகைக் கற்களின் வட்டம்( Sub circle) வகைப்படுத்தப்பட்டுள்ளது. பெரிய செவ்வக வடிவ குழி அமைப்பில் வெட்டப்பட்டுள்ளது. இதில் இயற்கையான கெட்டிமண் காணப்படுகிறது. முதன்மைக்குழி செவ்வகவடிவாகவும் இரு பகுதிகளாகவும் வெட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்பகுதியில் பெரிய கற்பலகையும் அதனைச்சுற்றி செவ்வகவடிவில் கற்பலகையும் அமைத்துள்ளனர். மேலும் இக்கல்லறையில் இடுதுளை எனும் துவாரம் உள்ளது, இதில் இறந்தவருக்கு படையல் வைப்பர் என்ற ஒரு கருத்துள்ளது.
துணைக்கல்லறை அமைப்பில் ஒரு கல்லறையும், சில இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்டதும் கிடைக்கிறது.

இங்கு கிடைத்த தாழியொன்று 95செ.மீ உயரமும் வாய்ப்பகுதி உருண்டையாகவும் தடித்துமுள்ளது. உட்பகுதியில் எலும்புகள், அரியவகை மணிகளும் கிடைத்துள்ளது. இங்குள்ள தாழியில் மானின் எலும்புகள் அதிகமுள்ளது. ஆகவே இதனை படையல் பொருளாய் கருதலாம், நீண்ட வாள் நிறுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டதால் உயிர்ப்பலியாய் கொள்ளலாம். படையல் பொருட்கள் குழியைச்சுற்றிலும் காணப்படுகிறது, கிண்ணங்கள், சிறிய பானைகள், ஜாடிகள், சிறியவகை ஈட்டிகள், கத்திகள் கிடைக்கிறது, கல்வட்டத்தின் இடைப்பட்ட வெளியில் சுவர்போன்ற அமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர், சுண்ணாம்பு கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் வகை:
முதல்வகையை போன்ற அமைப்புதான் இது, எனினும் உள்வட்டத்தில் முக்கோண வடிவ கல்பலகைகளான கல்வட்டம் காணப்படுகிறது! இதனால் இவ்வகை கல்வட்டம் மட்டும் 50-100செ.மீ உயரம் உடையதாய் உள்ளது. இவ்வகை தவிர்த்து சிறிய அளவிலான கல்வட்டம் சில காணப்படுகிறது!

இதிலுள்ள முதன்மைக்குழியும் செவ்வக வடிவிலுள்ளது, இணையே ஒரு பலகையை வைத்து இரு பகுதிகளாய் பிரித்துள்ளனர். இதிலும் முற்றம், துணைக்கல்லறை அமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர், வெளிப்புற கல்வட்டம் 23 ஒழுங்கற்ற கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கற்கள் 80-100 செ.மீ இடைவெளியிலுள்ளது. இதில் கிடைத்த படையல் பொருட்களில் இரும்பு பொருட்கள், ஆணிகள் அதிகம் கிடைத்தது.

வரும் வாரங்களில் மேலும் தொடர்வோம்…

Leave A Reply

Your email address will not be published.