வேள்வி-34

0
நம்ம திருச்சி-1

வசந்தி காலிங். போனை அப்படியே சைலென்டில் போட்டேன். எடுக்கவில்லை. ப்ளீஸ் கால் என்று எஸ்.எம்.எஸ் வந்தது. நான் அதையும் கண்டு கொள்ளவில்லை. அவள் செய்த துரோகம் மட்டுமே நினைவில் இருந்தது. எப்படிப்பட்ட ஒரு துரோகத்தைச் செய்து விட்டு எதற்காக என்னை அழைக்கிறாள்… ?

 

ரொம்பவும் கஷ்டப்பட்டு, தற்கொலை வரை சென்று மீண்டிருக்கிறேன்.. இப்போது எதற்காக மீண்டும் அழைக்கிறாள்.. உன்னை விட அவன் என்னை நன்றாக வைத்துக் கொள்கிறான்.. நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன் என்று குத்திக் காட்டவா… நீ மாத சம்பளம் வாங்கும் ஒரு பத்திரிக்கையாளன். என் கணவன் வெளிநாட்டில் ஆயிரக்கணக்கான டாலர்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறான் என்று என் காயத்தில் உப்பை அள்ளித் தேய்க்கவா…

 

அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன். நான் பேட்டியெடுக்க வேண்டிய மரண தண்டனைக் கைதியைப் பற்றி விபரங்களை கூகிளில் தேடிக்கொண்டிருந்தேன். அந்தக் கொலை வழக்கில் 400 பக்கங்கள் எழுதப்பட்டிருந்த அந்த வழக்கின் தீர்ப்பில், இவரது பங்கு குறித்து உச்ச நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது என்று படிக்கத் தொடங்கினேன். அந்தத் தீர்ப்பு படிக்கப் படிக்க சுவாராசியமாக இருந்தது. தடா என்ற தீவிரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ரகசியமாக, பொதுமக்கள் யாரும் பார்க்க முடியாத வண்ணம் நடந்த அந்த விசாரணையின் இறுதியில் அவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த 26 பேருக்குத் தூக்கு விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து அவர்கள் செய்த மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பு. மிக நீண்ட தீர்ப்பு.

 

படிக்க படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தியது. அந்தத் தலைவரின் கொலை, ஒரு தீவிரவாதச் செயல் அல்ல என்பதை அந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளுமே ஏகமனதாக ஒப்புக் கொண்டார்கள். தீவிரவாதச் செயல் அல்ல என்றால், தடா சட்டம் பொருந்தாது. தடா சட்டம் பொருந்தாது என்றால், அந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் அளித்திருந்த ஒப்புதல் வாக்குமூலம் எதுவுமே செல்லாது. தடா சட்டம் இல்லையென்றால், சாதாரண கொலை வழக்குகள் போல, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். ஆனால் தடா வழக்கின் கீழ் நேரடியாக உச்ச நீதிமன்றம்தான். தடா சட்டம் அத்தலைவரின் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்டது தவறு என்பதை ஒப்புக்கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பாமல் தாங்களே விசாரித்து தீர்ப்பளித்திருந்தனர்.

 

ஒரு வேளை உயர் நீதிமன்றத்துக்கு அவ்வழக்கு சென்றிருந்தால், இந்த தூக்குத்தண்டணைக் கைதியை பேட்டியெடுக்க வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காதோ… என்ன சட்டம்.. என்ன நீதிபதிகள்… 20 வருடமாக மரணத்தை எதிர்நோக்கி வாழ்வது என்ன சாதாரணமான விஷயமா ? நாகரீக சமுதாயம் என்று நம்மை நாமே அழைத்துக் கொண்டு, சட்டபூர்வமான கொலையை எவ்வளவு எளிதாகச் செய்கிறோம்… ?
அந்தத் தீர்ப்பு நீண்டு கொண்டே போனதால் சலிப்பாக இருந்தது. சட்டென்று ஃபேஸ் புக்கில் நுழைந்தேன். வசந்தி ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்திருந்தாள். அவள் திருமணம் நிச்சயமான ஒன்றிரண்டு நாளிலேயே அவளை அன்ஃப்ரெண்ட் செய்து விட்டேன். எப்போது பார்த்தாலும் அவள் பக்கத்தைச் சென்று பார்த்துக் கொண்டே இருப்பதே வேலையாக இருந்தது சில நாட்களுக்கு. இப்படியே போனால் இது சரி வராது என்று அன்ஃப்ரெண்ட் செய்திருந்தேன். ப்ரென்ட் ரெக்வெஸ்டை அக்செப்ட் செய்யவில்லை. அப்படியே விட்டு விட்டேன்.

 

ப்ரைவேட் மெசேஜ் அனுப்பியிருந்தாள். “வெங்கட்… உன் கோபம் புரிகிறது.. ஒரே ஒரு முறை உன்னைப் பார்க்க வேண்டும். ப்ளீஸ்” என்று அனுப்பியிருந்தாள்.
எப்படி அவளைப் பார்த்துக் கொண்டேன்.. !!!
எப்படிக் காதலித்திருப்பேன் !!! அவள் தேவைகளை நானே உணர்ந்து அவள் கேட்பதற்கு முன்பாகச் செய்ய வேண்டும் என்பதை ஒரு சாகசமாக அல்லவா செய்து கொண்டிருந்தேன்..
எத்தனை முறை ஆச்சர்யப்பட்டிருப்பாள்..
பிட்ச்.

எரிச்சலாக இருந்தது. வெளியே சென்று ஒரு தம் அடிக்கலாம் என்று அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். அவளிடமிருந்து மெசேஜ்.. “வெங்கட் ப்ளீஸ் கால்” இப்படித்தான் ஏதாவது சொல்லி ஏமாற்றுவாள்.. பெண் என்னும் மாயப்பிசாசு என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது. மாயப்பிசாசுதான்… பிசாசுதான்… ஆனால் அதில் அடங்கியிருக்கும் மாயம் மயங்க வைக்கிறது. போதை தருகிறது. அந்த போதை தீராத மயக்கத்தைத் தருகிறது. அந்த மயக்கத்தை இழக்கும் மனிதன் பைத்தியமாகிறான்.
கண்டு கொள்ளவேயில்லை.

 

அப்படியே விட்டு விட்டேன். நான்கு நாட்கள் ஓடி விட்டன. அதன் பிறகு அழைப்பும் இல்லை, மெசேஜும் இல்லை. ஒரு மெயில் அனுப்பியிருந்தாள். வெங்கட்.. நீ எவ்வளவு கோபமாக இருப்பாய் என்று எனக்குத் தெரியும்.. என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனக்கு ஒரே ஒரு முறை உன்னைப் பார்க்க வேண்டும்.. அவ்வளவுதான். இந்த மெயில்தான் கடைசி.. விருப்பமிருந்தால் பார்… இனி உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்.. என்று எழுதியிருந்தாள்.
அந்த மெயில் என்னை நிறைய்ய யோசிக்க வைத்தது. போகலாமா வேண்டாமா என்று ஏகப்பட்ட குழப்பம். அப்படியே யோசித்து மேலும் இரண்டு நாட்கள் கடந்து விட்டன. போக வேண்டாம் என்று முடிவே எடுத்து விட்டேன். அலுவலகம் சென்றதும் அவள் ஃபேஸ் புக் பக்கத்தைச் சென்று பார்த்தேன்..

 

விழிகளில் ஒரு வானவில் என்ற பாடலின் யுட்யூப் லிங்கைப் போட்டிருந்தாள். அந்தப் பாடல் சட்டென்று என்னைப் பழைய நினைவுகளுக்குள் மூழ்கடித்தது. நாங்கள் இருவரும் மிக மிக நெருக்கமாக இருந்த தருணத்தில் கேட்ட பாடல் அது. எப்போது அந்தப் பாடலைக் கேட்டாலும் இருவருமே நெகிழ்ச்சியடைவோம்.
அழைத்தேன்.

 

“வெங்கட்… இப்போ ஹாஸ்டல்ல இருக்கியா ?“
“ம்“
“வந்தா பாக்க முடியுமா ? “
“ம் வா. “
கிளம்பிச் சென்றேன். அவள் ஹாஸ்டலை அடைந்தேன். காத்திருக்கிறேன் என்று மெசேஜ் அனுப்பினேன். 5 மினிட்ஸ் என்று பதில் அனுப்பினாள். அந்த ப்ளாட்பாரத்தில்தான் எத்தனை குதூகலமாக காத்திருந்திருக்கிறேன்… அவள் வரவுக்காக.. இன்று அப்படிப்பட்ட இன்பங்களெல்லாம் இல்லை. அதே இடம். அதே நடைபாதை. அதே பைக்கில்தான் வந்திருக்கிறேன். காத்திருப்பதும் நான்தான்… ஆனால் என் மனதில்தான் எப்படி ஒரு மாற்றம்… ? சாதாரணமாக ஏதோ ஒரு நண்பரையோ, அல்லது ஒரு சோர்ஸையோ பார்ப்பது போல எவ்வித எக்சைட்மென்டும் இல்லாமல்… ? காலம் எப்படியெல்லாம் நம் மனதை மாற்றுகிறது என்பதை நினைத்தால் ஆச்சர்யமாக இருந்தது.

 

வந்தாள்.. புடவை உடுத்துவதே பிடிக்காது என்று சொல்லிக் கொண்டிருந்தவள், புடவையில் வந்தாள். கல்யாணம்தான் பெண்களை எப்படி மாற்றி விடுகிறது ?. முகத்தில் உற்சாகம் இல்லை. என்ன ஆச்சு இவளுக்கு… ஏன் இப்படி களையிழந்து காணப்படுகிறாள்… எப்படி துள்ளிக் கொண்டு வருவாள்… வரும்போதே முகத்தில் ஒரு குறும்பு இருக்குமே…

 

வந்ததும் “போலாமா..” என்றாள். எங்கே என்று கூட கேட்காமல் போலாம் என்றேன். அவளும் எங்கே என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. நானாக எங்கள் ஃபேவரைட் இடமான அந்த காஃபி ஷாப்புக்குச் சென்றேன்.
அங்கே சென்று அமரும் வரை எதுவுமே பேசவில்லை. வழக்கமாக எங்கள் டேபிளுக்கு வந்து செர்வ் செய்பவன், எங்களைப் பார்த்தவுடன், “என்ன சார் ரொம்பா நாளா ஆளக் காணோம்…” என்று இயல்பாகக் கேட்டான்.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு புன்னகைத்தோம்.

 

”ஊருக்குப் போயிருந்தோம்…” என்று மையமாக ஒரு பதிலைச் சொன்னேன்.
ஆர்டர் எடுத்துக் கொண்டு சென்றான்.
”எப்ப வசந்தி வந்த ஊர்லேர்ந்து… ப்ரேசில்லேர்ந்து ரெண்டு வாரம் முன்னாடியே வந்துட்டேன். நேரா மதுரைக்குப் போயிட்டேன். மெட்ராசுக்கு போன வாரம்தான் வந்தேன்.”
”அம்மா அப்பா நல்லா இருக்காங்களா..? ”
”ம்”
”எப்படி இருக்க வசந்தி… நல்லா இருக்கியா… உங்க வீட்டுக்காரர் நல்லா இருக்காரா” என்று வீட்டுக்காரரில் ஒரு அழுத்தத்தோடு சொன்னேன்.
”ம்.. ”
அவளின் அழுத்தமான மவுனம் என்னை ஏதோ செய்தது. ஏதோ பிரச்சினை என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது.

 

எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை. இப்படியெல்லாம் இவள் இருந்ததே கிடையாது. ஐந்து நிமிடத்துக்கு மேல் சோகமாக இருக்க இவளால் முடியவே முடியாது. ஏதாவது திட்டினால் கூட ஐந்து நிமிடம் முகத்தை உர்ரென்று வைத்திருப்பாள்.. பிறகு இவளே ஏதாவது ஆரம்பித்து கலகலவென்று ஆகிவிடுவாள். இப்படி மாறி விட்டாளே…
”வசந்தி.. என்ன ஆச்சு… சொல்லு… எதுவா இருந்தாலும் சொல்லு…”
அமைதியாகவே இருந்தாள்.
”என்ன வசந்தி ஆச்சு…. எதுவா இருந்தாலும் சொல்லுப்பா..”
“கல்யாணம் ஆகி என்னை பிரேசிலுக்கு கூட்டிட்டுப் போனதுல இருந்தே விட்டேத்தியாதான் இருந்தான். செக்ஸ் மெக்கானிக்கலா இருக்கும். என்னை ஒரு நாள் கூட வெளியில கூட்டிட்டு போனதில்ல. நானே ஒரு நாள் வாயை விட்டு, என்னை இந்த ஊரை சுத்திக் காட்டுன்னு கேட்டேன். ஆபீஸ்ல நெறைய்ய வொர்க்குன்னு சொன்னான். அடிக்கடி ஆபீஸ் வேலையா வெளியூர் போயிடுவான். ரெண்டு மூணு நாள் கழிச்சி வருவான். வந்ததும் அன்னைக்கு பூரா தூங்குவான். எனக்கு பெரிசா சந்தேகம் எதுவும் வரலை.

 

இப்படியே போனதும், நான் தங்கியிருந்த பக்கத்து ஊர்ல இருக்குற ஒரு ஸ்கூல்ல வேலைக்கு அப்ளை பண்ணேன். திடீர்னு வரச்சொல்லி மெயில் வந்துருந்துச்சி. இவன் அப்போ வெளியூர் போயிருந்தான். போன் பண்ணி தகவல் சொல்லாம்னு பாத்தா வாய்ஸ் மெயில் போச்சு. அவனுக்கு மெஸெஜ் போட்டுட்டு, கௌம்பி அந்த ஸ்கூலுக்கு போனேன். இன்டர்வியூ முடிச்சிட்டு, ஸ்கூல் எதிரே இருந்த காபி ஷாப்புக்கு போனேன். அங்க ஒரு பொண்ணோட பேசிக்கிட்டிருந்தான்.
அந்தப் பொண்ணு அழுதுக்கிட்டிருந்தா… இவன் அவகிட்ட கெஞ்சிக்கிட்டு இருந்தான்.. நான் உடனே அவனுக்கு போன் அடிச்சேன்.. கட் பண்ணான்..
நான் அவங்க போற வரைக்கும் ஒளிஞ்சிருந்து பாத்தேன்.. அவ ரொம்ப நேரமா அழுதுக்கிட்டிருந்தா… இவன் அவ கண்ணத் தொடச்சு விட்டு, கட்டிப் புடிச்சு முத்தம் குடுத்தான்.. அவ அழுதுக்கிட்டே போயிட்டா…

 

வீட்டுக்கு வந்து திரும்பி போன் பண்ணி எங்க இருக்கன்னு கேட்டா, மீட்டிங்ல இருக்கேன்.. வீட்டுக்கு வர இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு சொன்னான்… நான் நீ இருக்கற இடத்துக்கு வர்றேன்னு சொன்னா… அங்க ட்ராவல் பண்றதுக்கே 12 மணி நேரம் ஆகும்னான்..
ரெண்டு நாள் கழிச்சு அவன் வந்ததும், நேரா கேட்டுட்டேன்.. ஆமாம்… அவதான் எனக்கு முக்கியம்… அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கறதானா இரு… இல்லன்னா கௌம்பிப் போன்னு ஸ்ட்ரெயிட்டா சொல்லிட்டான்.
டெய்லி சண்டை… அந்த ஊரு பாஷையிலே அவகிட்ட எப்பப் பாத்தாலும் போன்ல பேசிக்கிட்டிருந்தான். என் கிட்ட பேசறத விட போன்லதான் ரொம்ப நேரம் பேசிட்டிருப்பான். எனக்குப் புரியாததுனால என்ன பேசறான்னு தெரியல.. இதனாலயே டெய்லி சண்டை நடந்துச்சு… நெறய்ய வாட்டி அடிச்சுட்டான் வெங்கட்….” என்று சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள்.

 

“இத்தனை வருஷத்துல எங்க அப்பா ஒரு வாட்டி கூட என்னை அடிச்சதுல்ல வெங்கட்… நீ என்னை எத்தனையோ வாட்டி திட்டியிருக்க… ஒரு வாட்டி கூட கை நீட்னதுல்ல… பேசிப் பொலம்பறதுக்குக் கூட யாரும் இல்லாம தனியாவே அழுதுக்கிட்டிருந்தேன் வெங்கட்…. அவள விட்டுடுன்னு கெஞ்சிப் பாத்துட்டேன்.. முடியவே முடியாதுன்னுட்டான்… அவன் விட்டாலும் அந்தப் பொண்ணு அவனை விட மாட்டா போல இருக்கு… நான் கௌம்பறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி வீட்டுக்கே வந்துட்டா… இனிமே இங்க இருக்கறது வேஸ்டுன்னுதான் கௌம்பிட்டேன்.”
கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

 

“நான் உனக்குப் பண்ண அத்தனை பாவத்துக்கும் சேத்துதான் அனுபவிக்கிறேன் வெங்கட்…”
கண்களைத் துடைத்துக் கொண்டு டக்கென்று எழுந்து “நான் வர்றேன் வெங்கட்“ என்றாள். அவள் காபியைத் தொடவே இல்லை.
நான் அவளுக்கு ஏதாவது ஆதரவு சொல்கிறேனா என்றெல்லாம் எதிர்ப்பார்த்தது போல தெரியவில்லை. அவள் பாட்டுக்கு கட கடவென்று கொட்டித் தீர்த்து விட்டு எழுந்து விட்டாள். எனக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை.
காப்பி கோப்பையின் அடியில், காபிக்கான பணத்தை சொருகி விட்டு, கிளம்பினேன்.

 

படி இறங்கினோம். “அடுத்து என்னப் பண்ணப்போற வசந்தி ? “
“தெரியல வெங்கட்.. இன்னும் டிசைட் பண்ணல.. தனியா ப்ராக்டிஸ் பண்றதா, இல்ல யார்கிட்டயாவது ஜுனியரா சேர்றதான்னு இன்னும் முடிவு பண்ணல…“
அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவளை ஹாஸ்டலில் இறக்கி விட்டேன். எதுவும் பேசாமல், வர்றேன் என்று மட்டும் சொல்லி விட்டு கிளம்பினேன்.
திரும்பி வருகையில், அவள் திருமணம் உடைந்து போனது குறித்து அவள் அழுதது எல்லாம் மறந்து ஒரு குரூர சந்தோஷம் தோன்றியது… ‘எனக்கு துரோகம் பண்ணிட்டுப் போனில்ல… இப்போ என்ன ஆச்சு பாத்தியா ?’ என்று தோன்றிய எண்ணம், என்னையே அவமானப்பட வைத்தது.

 

என்ன எண்ணம் இது…. பாவம் எவ்வளவு வேதனையில் வந்திருக்கிறாள்… இந்த நேரத்தில் என் ஈகோ இப்படியா வேலை செய்யும்…
வீட்டுக்குள் நுழைந்ததும், அம்மா ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். வசந்தியின் நிலைமையை யாரிடமாவது சொல்ல வேண்டும் போலிருந்தது.
“அம்மா… வசந்திக்கு கல்யாணம் ஆச்சுல்ல…”
“ஆமாடா.. அவதான் வெளிநாட்டுக்குப் போயிட்டான்னு சொன்னியே…“
“ஆமாம்மா.. அவன் வீட்டுக்காரனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருந்துச்சாம்.. அந்த ஊர்லயே ஒரு பொண்ணு கூட இருக்கானாம். அவன் வேண்டாம்னு வசந்தி திரும்பி வந்துட்டா“ என்றேன்.

 

“அடப்பாவி… இதுக்காடா அந்தப் பொண்ணு அவசர அவசரமா கல்யாணம் பண்ணுச்சு…. எங்கடா இருக்கா அவ ?”
“ஹாஸ்டல்ல தங்கியிருக்காம்மா…”
“வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டியதானேடா… ஏன் அப்படியே விட்டுட்டு வந்த… என்னா புள்ளைடா நீ….“
அம்மா இப்படி உடனே அவளை வீட்டுக்கு அழைத்து வரச் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது.

 

“காலையில கூட்டிட்டு வரட்டுமாம்மா….. ? “
“காலையில மொத வேலையா போயி அவளைக் கூட்டிக்கிட்டு வா… வேணாம்.. ரெண்டு பேருமே போவோம். கால் டாக்சிக்கு சொல்லிடு…. நேரா கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போயி ரெண்டு பேருக்கும் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்துடுவோம்… எனக்கு அப்பவே மனசுல தோணுச்சு… என்னடா இந்தப் புள்ளை இப்படி அவசரமா கல்யாணம் பண்றாளேன்னு… கடவுளே…. இப்படியா இருப்பானுங்க… அவங்க அப்பனுக்காவது அறிவு வேணாம்… சரி.. நீ கால் டாக்சிக்கு சொல்லிடு… காலையில ஆறு மணிக்கெல்லாம் வரச் சொல்லிடு… நான் மாத்திரை போட்டுட்டேன்.. உனக்காகத்தான் உக்காந்திருந்தேன்… காலையில நீயும் சீக்கிரம் எந்திருச்சுரு…“ என்று படுக்கச் சென்றாள்.

 

அம்மா இப்படி பதற்றமடைவாள் என்று எதிர்ப்பார்க்கவே முடியவில்லை. அவளின் பதற்றத்தைப் பார்த்து, அவளுக்கு வசந்தியை எந்த அளவுக்குப் பிடித்துப் போயிருக்கிறது என்று தெரிந்தது.
வசந்தியை இப்போதே அழைத்து அம்மா சொன்னதை சொல்லலாமா… ? வேண்டாம்… சர்ப்ரைஸாக இருக்கட்டும். காலையில் 8 மணிக்கெல்லாம் ஹாஸ்டல் வாசலில் திடீரென்று அம்மாவோடு போய் நின்றால்… கண்களெல்லாம் விரிய ஆச்சயர்யப்படுவாள்.. வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. இதமான குளிர் நிலவியது. இதே படுக்கையில் அவளை அணைத்துக் கொண்டு, அவள் தலையைத் தடவிக் கொண்டே அவள் பட்ட கஷ்டங்களைக் கேட்டு அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். அவள் வலிகளை மறக்க வைப்பது மட்டுமே இனி எனது ஒரே லட்சியம்…. இப்படி வேதனையை அனுபவிக்கவா அவசரமாக கல்யாணம் செய்தாள் ?

 

அவள் வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக அவளுக்கென்று ஒரு அறையை ஒதுக்கித் தர வேண்டும். முடிந்தால் முன் அறையையே அவள் க்ளையன்டுகளை மீட் பண்ணுவதற்கென்று ஒதுக்கித் தந்து விட வேண்டும். இங்கேயே இரு… ஹாஸ்டலெல்லாம் வேண்டாம் என்று அம்மாவை வைத்து சொல்லச் சொல்ல வேண்டும். அப்போதுதான் கேட்பாள். அச்சச்சோ.. எனக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைத்தது பற்றிச் சொல்ல மறந்து விட்டேனே… ச்சை.. அவள் இருந்த நிலையில் இதையெல்லாமா கேட்டுக் கொண்டிருப்பாள்… பாவம்…

 

அவள் அப்பா அம்மாவிடம், அம்மாவை வைத்துப் பேசச் சொல்ல வேண்டும்… திரும்பவும் அவள் அப்பன் திமிராக ஏதாவது பேசினால் போய்யா என்று சொல்லி விட வேண்டியதுதான்…. அவன் இன்னமும் அப்படித்தான் பேசுவான்……
கையோடு டைவர்ஸ் பைல் பண்ண வேண்டும். அந்தப் பொறுக்கி ம்யூச்சுவல் கன்சென்டுக்கு ஒத்துக் கொள்ள மாட்டான்… நோட்டீஸ் ப்ரேசிலுக்கு அனுப்ப வேண்டும்… வெளிநாட்டில் இருப்பதால் சாமான்யத்தில் டைவர்ஸ் கிடைக்காது…. டைவர்ஸ் கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன… இவள் என் மனைவி… என்னோடுதான் இருப்பாள்… ரெண்டு பேர் சேர்ந்து வாழ்வதற்கு சட்டத்தின் அங்கீகாரம் கட்டாயமா என்ன ? யார் தடுக்க முடியும்…

 

அவன்தான் கேட்க முடியும்… கேட்பானா என்ன…. ராஸ்கல்… இப்படி நாசம் பண்ணி விட்டானே இவளை… அதெல்லாம் எதற்கு இப்போது… என்னிடம் வந்து விட்டாள்… நான் இறக்கும் வரை அவள் கண்களில் கண்ணீரே வராமல் பார்த்துக் கொள்வேன். நாங்கள் சேர்ந்து வாழ்வதை இனி யாரால் தடுத்துவிட முடியும் என்று யோசித்துக் கொண்டே எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.
திடீரென்று அழைப்பு மணி அடித்தது. செல்போனை எடுத்து மணியைப் பார்த்தேன். இரவு மணி 11.30 இந்த நேரத்தில் யார்…
கதவைத் திறந்தேன்.

 

”சார்.. நாங்க சிபிஐ ஆபிசர்ஸ்… நீங்க கொஞ்சம் எங்க கூட வரணும் …”
டக்கென்று சிங்காரவேலு நினைவு வந்தது. தன் வாழ்க்கையையே என்னால் தொலைத்து விட்டான். சும்மாவா இருப்பான் ?.
”வர்றேன் சார்…” என்று சொல்லி விட்டு, ஜெயிலுக்குப் போகப் போகிறோம் என்று உறுதியாகத் தெரிந்ததால், பேஸ்ட். ப்ரஷ், இரண்டு செட் துணிமணிகள் எடுத்து வைத்துக் கொண்டேன்.

 

சிங்காரவேலு இத்தனை நாள் எப்படிச் சும்மா இருந்தான் ? இது எப்போதோ நடந்திருக்க வேண்டும். இரண்டு மாதம் ஏன் காத்திருந்தான் என்பதுதான் தெரியவில்லை. சிங்காரவேலு பத்தாது என்று இப்போது ஒரு நீதிபதி வேறு சேர்ந்து கொண்டிருப்பான். வாழ்க்கையைத் தொலைத்த இரண்டு பேரும் கூட்டணி சேர்ந்திருப்பார்கள்… சும்மாவா விடுவார்கள்.. இந்த முறை இரண்டு மாதமா, நான்கு மாதமா என்று தெரியவில்லை…

 

வசந்தியைப் பார்க்கப் போகையில் அழைத்துச் செல்கிறார்களே… நாளை வருகிறேன் என்று இவர்களிடத்தில் கேட்டுப் பார்ப்போமா.. ?
ச்சீ. என்ன புத்தி இது. இப்படி பேசுவதற்கு செத்துப் போய் விடலாம். பிச்சைக்காரப் பயல்கள். இவர்களிடம் போய் கெஞ்சுவதா ? இத்தனை நாள் பொறுத்தாகி விட்டது. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து அதன் பிறகு வசந்தியை அழைத்து வரலாம். அவளும் வக்கீல்தானே… தகவல் தெரிந்தால் எங்கு வேண்டுமானாலும் வந்து பார்ப்பாள். அவளே எனக்காக பெயில் போடுவாள். வாதாடுவாள். நீதிபதியிடம் சண்டை போடுவாள். நளாயிணி போல் என்னை மீட்டெடுப்பாள்.
பிறகென்ன….. சிறை வாசலிலேயே அவளை கட்டியணைப்பேன்.
அம்மாவை எழுப்பாமல், ஒரு துண்டுச் சீட்டில், காலை வழக்கறிஞரை தொடர்பு கொள்ளுமாறு சொல்லி கைதான விபரத்தை எழுதி, அவள் பார்வையில் படும்படி வைத்தேன்.

 

செல்போனை எடுத்து, என்னைக் கைது செய்து விட்டார்கள். காலை 10 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் வந்து பார்க்கவும். வரும்போது நான் வாங்கி தந்த பச்சை நிற டிசைனர் புடவை கட்டி அம்மாவோடு வரவும் என்று அவசர அவசரமாக மெசேஜ் அடித்தேன்.
சிபிஐ அதிகாரிகள் காத்துக் கொண்டே இருந்தார்கள். வசந்திக்கு மெசேஜ் அனுப்பி விட்டு அவர்களோடு கிளம்பினேன்.
வழக்கம் போல வரும் வாகனத்தில் இல்லாமல் ஒரு பெரிய வேனில் ஏற்றினார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.