திருவெறும்பூர் மக்களை விரட்டியே தீருவோம் எனும் இரயில்வே நிர்வாகம்; பரிதவிப்பில் நகர்வாசிகள்

0
ntrichy

திருச்சி, திருவெறும்பூரில் புதிய இரயில் நிலையம் அருகில் உள்ள திருவெறும்பூர் வட்டம் (சர்வே எண் 341, 342) மற்றும் கூத்தைப்பார் கிராமம்(சர்வே எண் 181, 182) உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடந்த இரு மாதத்திற்கு முன்னதாக ரயில்வே துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது.

அதில், இந்த பகுதி ரயில்வே துறைக்கு சொந்தமான பகுதி என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. இதனால், அப்பகுதியில் கடந்த 60 வருடங்களாக வசிக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர் எனவும். இதை எதிர்த்து அவர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்டு தங்கள் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துக்கூறி வருகின்றனர் என்றும் கடந்த ஏப்ரல் இரண்டாவது வாரம் வெளிவந்த ‘நம்ம திருச்சி’ இதழில் தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி இரயில்வே மண்டல அதிகாரியை சந்தித்து மனு அளித்த பாதிக்கப்பட்ட மக்கள், மனுவில், திருவெறும்பூர் வட்டம் (சர்வே எண் 341, 342) மற்றும் கூத்தைப்பார் கிராமம்(சர்வே எண் 181, 182) உள்ளிட்ட பகுதி ஆதியிலிருந்து வருவாய்த்துறை ஆவணங்களின்படி கூத்தைப்பார் கிராமத்திற்கும், திருவெறும்பூர் கிராமத்திற்கும் கட்டுப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடைய முன்னோர்கள் ஆண்டனுபவித்து வந்து நாங்கள் சந்ததியினராக எவ்வித இடைஞ்சல்களும், இடையூறுமின்றி ஆண்டனுபவித்து வருகிறோம்.

மேலும், அரசின் அனுமதி பெற்று வீடு கட்டி வீட்டிற்குண்டான சொத்துவரி, குடிநீர் வரி, மின் இணைப்பு பெற்று வசித்து வருகிறோம். இந்நிலையில், இது போன்று நோட்டீஸ் கொடுப்பது சட்டத்திற்கு புறம்பானது. இந்த இடம் 1927ம் ஆண்டு ரீசெட்டில்மெண்ட் ஆவணத்தின்படி கூத்தைப்பார் சமுதாய மக்களுக்கு சொந்தமானதாகும்.

இந்த நிலம் இரயில்வே துறைக்கு எவ்வாறு பாத்தியப்பட்டது என கடந்த 27.5.13ம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். இந்த மனு அப்போதைய திருவெறும்பூர் வட்டாசியர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.பின்னர், இந்த மனுவிற்கான ஆவணம் உங்களிடம் உள்ளதா என அவரால் கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால், அதற்கு இரயில்வே நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. இது குறித்து ஆர்.டி.ஐ.யில் எங்கள் வழக்கறிஞர் ஆதிநாராயணமூர்த்தி கேட்டதற்கு, நீங்கள் முழுமையான பதில் அளிக்கவில்லை. எனவே, மாநில அரசிடம் இருந்து முறைப்படி நிலத்தை கையகப்படுத்தாமல் எங்களை வெளியேற்றும் முயற்சியில் இறங்குவது சட்டப்படி குற்றமாகும். என குறிப்பிட்டிருந்தனர்.

அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் 16ம் தேதி பாதிக்கப்பட்ட 300பேரும் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தையும், ஆவணங்களையும் தனித்தனியே கொரியரில் அனுப்பியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தற்போது இவர்கள் அனைவரையும் கண்டிப்பாக அந்த இடத்தை விட்டு காலி செய்யவேண்டும் என இரயில்வே நிர்வாகத்திடம் இருந்து பார்ம் பி நோட்டீஸ் வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, வருவாய்த்துறை ஆவணங்களின்படி சர்வே எண் 343 அரசுப்புறம்போக்கு என இருப்பதால், சர்வே எண் 343ல் வசிக்கும் மக்கள். சர்வே எண் 342ல் வசிப்பதாகவும், இது இரயில் துறைக்கு சொந்தமான இடம் என்பதால் காலி செய்யுங்கள் என்றும் நோட்டீஸ் வந்துள்ளது. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அப்பகுதிமக்கள் அனைவரும் வேதனையில் உள்ளனர்.

இது குறித்து அப்பகுதிமக்களின் வழக்கறிஞர் ஆதிநாராயணமூர்த்தி கூறுகையில், இரயில்வே மண்டல அலுவலகத்தில் நாங்கள் நடத்திய பேச்சுவார்தையை அவர்கள் மறைக்கப்பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி, பார்ம் பி யில் 16.5.18ம் தேதி வெளியிட்டது மாதிரியும், அந்த தேதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் காலி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அந்த நோட்டீஸ்சை கடந்த 13ம் தேதி முதலே எங்கள் பகுதி மக்களுக்கு வழங்கினார்.

இன்னும் 50சதவீதம் பேருக்கு மேலாக அதுவும் கிடைக்காமலேயே உள்ளது. இது குறித்து திருவெறும்பூர் தாசில்தார் சோபாவிடம் நாங்கள் கேட்டதற்கு, அவரோ, உங்களுக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு தருகிறோம். அது இரயில்வேக்கு சொந்தமான இடம் என்று கூறி எங்களை அந்த இடத்்தை விட்டு வெளியேற்றுவதில் தான் குறிகோளாக இருக்கிறாரே தவிர எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை கேட்க மறுக்கிறார். மாவட்ட ஆட்சியரின் தலைமையில் உங்களுக்கும் இரயில்வே நிர்வாகத்திற்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் சட்டப்படி இப்பிரச்சனையை எதிர்கொள்வோம் என்றார்.

மேலும், இது குறித்து இதனால் பாதிக்கப்பட்ட தினேஷ் கூறுகையில், நான் வருவாய்த்துறை ஆவணங்களின்படி சர்வே எண். 343ல் வசிக்கிறேன். அவ்வாறே வீடு கட்டுவதற்கும் அனுமதிவாங்கியுள்ளேன்.
ஆனால், இரயில்வே நிர்வாகத்திடம் இருந்து என்னுடைய வீடு சர்வே எண் 342 சர்வே எண்ணில் இருப்பதாகவும், அது இரயில்வேக்கு சொந்தமானது நீங்கள் விரைவில் காலி செய்யுங்கள் என்றும் நோட்டீஸ் வந்துள்ளது. இத்தனைக்கும் எனக்கு பார்ம் ஏ நோட்டீஸ் வரவில்லை.

இது குறித்து தாசில்தாரிடம் கேட்டபோது, இது போலி ஆவணங்கள் என்பது போல் கூறுகிறார். பதிவுத்துறை பதிவாளரே இவ்வாறு ஆவணங்கள் அனைத்தும் பொய்யானது என கூறுவது எங்களுக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இது குறித்த முழு விவரங்களும் எங்கள் பகுதியில் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. நாங்கள் இதைப்பற்றி தெரிந்ததிலிருந்து தூக்கம் இல்லாமலும், என்ன செய்வதென்று தெரியாமலும் இருக்கிறோம். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.