‘பொன்மலை சந்தை’யும் தனியார் மயமா?

0
ntrichy

1926ல் நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த ரயில்வே பணிமனை திருச்சி பொன்மலைக்கு மாற்றப்பட்டது.

இங்கு 11 லட்சத்து 12 ஆயிரத்து 460 சதுர அடியில், ரயில்வே பணியாளர் குடியிருப்பு ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய 4,000 வீடுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த கட்டமைப்பில், பணியாளர்களின் பதவிக்கேற்ப வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதற்காக 8 வகையான வீடுகள் இங்கு கட்டப்பட்டன.
ஒவ்வொரு வகை வீடுகளுக்கும் புதைச் சாக்கடை, குடிநீர் குழாய் வசதிகளுடன் பூமிக்கடியில் செல்லும் கம்பி வழியாக மின்சாரமும் வழங்கப்பட்டது. 8 வகையான குடியிருப்புக்கும் தனித்தனியாக பூங்கா, சிறிய விளையாட்டு திடல், தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்பட்டன.

தொடக்கப் பள்ளிகள் தவிர, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் படிக்க இந்தக் குடியிருப்புக்குள் இரண்டு மேல்நிலைப் பள்ளிகளும் அமைக்கப்பட்டன.
குடியிருப்பின் நடுவில் வாரச்சந்தை நடத்த இடம் விடப்பட்டு, ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தை கூடியது. அதுவே பிறகு ‘பொன்மலை சந்தை’ யானது. ரயில்வே பணியாளர் குடியிருப்பில் இருப்பவர்களுக்கு அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

காலப்போக்கில் பிராணிகள் வாங்க, விற்க திருச்சியில் ஒரு இடமாக பொன்மலை மாறியது. இங்கு அறிய வகை நாய்கள், கிளிகள், எலிகள், கோழிகள் என எல்லா வகையான வளர்ப்பு பிராணிகளும் கிடைப்பதால் திருச்சி மக்களின் நல்வரவேற்பை பெற்றது.
தற்போது பொன்மலை ரயில்வே இடத்தில் இருக்கும் இந்த சந்தையும் பக்கத்திலேயே தினமும் செயல்படும் கர்மவீரர் காமராஜர் மார்க்கெட்டுக்கும் கடந்த (மே 2018) 8-ம் தேதியிலிருந்து தலை சுமை வியாபாரிகளுக்கு ரூ.20, தரைக்கடை வியாபாரிகளுக்கு ரூ.200, இரு சக்கர வாகன வியாபாரிகளுக்கு ரூ.40, அனைத்து வகையான வண்டிகளுக்கு ரூ.50, 4 சக்கர விற்பனையாளர்களுக்கு ரூ.150, பிரசார வாகனங்களுக்கு ரூ.200, கனரக வாகனங்களுக்கு ரூ.300, டிரைலர் வாகனத்துக்கு ரூ.500, மொபைல் ஏடிஎம்மிற்கு ரூ.1,000, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5, 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.10 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது குறித்து கர்மவீரர் காமராஜர் தினசரி மார்க்கெட் (கம்பிகேட்) வியாபாரிகள் கூறியதாவது, “நாங்க இங்க 40, 50 வருசத்துக்கு மேல கடை நடத்தி வரோம். ஏற்கனவே இது மாதிரி பிரைவேட் காரங்க ஏலம் எடுத்து காசு வசூல் செஞ்சிட்டு இருந்தாங்க. அதுக்கபறம் மறுபடியும் பாவம் நீங்க, ஏழை பாழை என்ன செய்விங்கனு,
c.w. ராஜீ அதை ரத்து செஞ்சாரு. இப்போ மறுபடியும் இப்படி தனியார் ஆளுங்களுக்கு சந்தையை குத்தகைக்கு கொடுத்தருக்காங்க. தினமும் இங்கே 6 மணிக்கு ஆரமிச்சு 12 மணிக்கெல்லாம் கடை சாத்திருவாங்க.

 

காலனியெல்லாம் காலி பண்ணிட்டு போயிட்டதால 20, 30 ரூபாய்க்கு கூட சில நாளு வியாபாரம் நடக்கமாட்டேங்குது.
இப்பிடி இருக்க எங்க கிட்ட தினமும் 200 ரூபாய்னு வசூல் பண்ணா மாசம் 6 ஆயிரத்து நாங்க எங்க போறது. இது தொடர்பா சம்பந்தப்பட்ட அதிகாரிங்க, இதை மறு பரிசீலனை செஞ்சு எங்களுக்கு நல்லது பண்ணனும்” என்றனர்.
டிரைவர் வாசக ராஜன் “கம்பிகேட்டு மார்கேடுல தான் டிரைவரா வேலை பாக்குறேன். கலெக்சன் 400, 500 ரூபா தான் வரும், இதுல பெட்ரோல், டீசல் வேற. வண்டிக்கு சீட்டு 150 ரூபான்னா. எங்களுக்கு என்ன கிடைக்கும். வியாபாரமே நடக்கல, கடை வாடகை குடுக்க முடியலன்னா நாங்க என்ன பன்றது” என்றார்.

 

வாழை இலை விற்கும் மூக்காயி “இந்த வாழை இலையும், பழமும் 2 நாள்ல அழுகிபோற பொருளு, வயித்து பொழப்புக்கு தான் இங்கே வந்து வியாபாரம் பன்றோம். 30 ரூபாய்க்கு தான் இன்னிக்கி வியாபாரம் நடந்திருக்கு எங்ககிட்ட 200 ரூபா வசூல் பண்ணா அது நியாயமா. இரக்கப்பட்டு எங்களுக்கு ஒரு நல்ல வழிய காட்டுங்க, நாங்களாம் வசதி உள்ளவங்க இல்ல.” என்றார்.

இது குறித்து பொன்மலையை சேர்ந்த, தண்ணீர்அமைப்பின் செயலாளர் நீலமேகத்திடம் நாம் பேசும்போது, “பொன்மலை சந்தை திருச்சியிலே பெரிய சந்தை. முன்பெல்லாம் மதியத்துடன் சந்தை முடிந்துவிடும். ஆனால், தற்போது பொன்மலை சந்தை ஒரு திருவிழா போல் முதல் நாள் இரவே சரக்குகள் இறக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வரை சந்தை தொடர்கிறது. முன்னாடியெல்லாம் சந்தை குத்தகைக்கு விட்டிருக்கின்றனர். ஆனால் 10, 15 ரூ மட்டுமே அதிகபட்சமாக வசூலிக்கப்படும். இப்போது தரை வாடகை ரூ.200. கிராமத்திலிருந்து வந்து கடைபோடும் விவசாயிகள், தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்படுவர்.

இதேபோல மக்கள் அதிகமாக வந்து செல்வதால் மொபைல் ஏ.டி.எம்கள், இங்கு ஞாயிற்றுகிழமைகள் மட்டும் செயல்படும். ரூ.1000 வசூலிக்கப்படுவதால் இனி மொபைல் ஏ.டி.எம் இங்கு வருவது கடினம் தான். பொதுவாக குத்தகைதாரர்கள் வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், கழிவறை ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும், இதில் எந்த வசதியையுமே செய்து தராமலும், கடை வசதியை கூட சரி செய்யாமல் ஏழை வியாபாரிகளிடம் வசூல் செய்வது சரியான முறையல்ல. ரயில்வே நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்குள்ள வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது” என்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.