வாடகை கட்டண உயர்வை குறைக்காவிட்டால் போரட்டம் -பொன்மலை வாரச்சந்தை வியாபாரிகள் 

0
ntrichy

வாடகை கட்டண உயர்வை குறைக்காவிட்டால் போரட்டம் -பொன்மலை வாரச்சந்தை வியாபாரிகள்

 

 

திருச்சி அருகே உள்ள பொன்மலை ரெயில்வே காலனியில் வாரச்சந்தை ஞாயிற்றுகிழமை தோறும் நடைபெறும். இந்த சந்தை திருச்சி மாவட்டத்திலேயே மிக பெரிய சந்தையாகும். சிலர் பொழுதுபோக்குக்காகவே இந்த சந்தைக்கு வந்து செல்வது வழக்கம். இந்த சந்தை ரெயில்வே ஊழியர்களுக்கு என்று ஆரம்பித்த சந்தையாகும். இது காலப்போக்கில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும்படியான சந்தையாக மாறியது.

இந்த சந்தையில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, பக்கத்து ஊர்களில் இருந்தும் வியாபரிகள் வந்து கடை போடுவது வழக்கம். இந்த சந்தையில் சிறு சிறு தரைக்கடை வியாபாரிகளே அதிகமாக கடை போடுவார்கள். சந்தையில் காய்கள், பழங்கள், மீன் வகைகள், சமையல் பொருட் கள், பிளாஸ்டிக் சாமான்கள், குளிர்பான கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், கலர் மீன் கடைகள் உள்ளிட்ட இன்னும் ஏராளமான கடைகள் உள்ளன.

இந்த சந்தையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து கடைகளுக்கும் வாடகை வசூல் செய்யப்பட்டது. ஆனால் அப்போது குறைந்த அளவு கட்டணமே இருந்தது. காலப்போக்கில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் சந்தையின் வளர்ச்சி குறைந்து வந்தது. மறுபடியும் சில மாதங்களுக்கு பின்பு வளர்ப்பு பிராணிகளான நாய், கோழி, விதவிதமான பறவைகள், கலர் மீன் கடைகள் வர தொடங்கின. அதனால் மீண்டும் சந்தை களை கட்ட தொடங்கியது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தென்னக ரெயில்வே தனியார் நிறுவனத்திடம் சந்தையை குத்தகைக்கு விட்டது. அவர்களும் சந்தையை சுற்றிலும் பேரி கார்டுகள் அமைத்தனர். ஆனால் கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. நேற்று காலை சந்தையில் உள்ள அனைத்து வியாபாரிகளிடமும் கடைகளுக் கான வாடகை கட்டணங்கள் அடங்கிய நோட்டீசை வழங்கினர்.

கட்டண விவரங்கள் அடங்கிய பதாகைகளையும் சந்தையில் வைத்து இருந்தனர். இந்த வாடகை கட்டணங்கள் கூடுதலாக இருந்தது. இதே போல் பொன்மலை அருகே உள்ள கம்பிகேட் என்ற இடத்தில் தின சந்தை நடந்து வருகிறது. அவர்களுக்கும் இதே கட்டண தொகையை அறிவித்துள்ளனர். இதனால் அவர்கள் நாங்கள் தினமும் கடை நடத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு ரூ.200 வீதம் மாதத்திற்கு ரூ.6 ஆயிரம் எப்படி கட்டணம் செலுத்த முடியும் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர். இது குறித்து சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தனர்.

புதிதாக வழங்கப்பட்ட கட்டண விவர நோட்டீசில் தலை சுமை வியாபாரிகளுக்கு ரூ.20-ம், இரு சக்கர வாகன வியாபாரிகளுக்கு ரூ.30-ம், மூன்று சக்கர வாகன வியாபாரிகளுக்கு ரூ.40-ம், அனைத்து வகையான வண்டிகளுக்கு ரூ.50-ம், நான்கு சக்கர வாகன வியாபாரிகளுக்கு ரூ.150-ம், தரைக்கடை வியாபாரிகளுக்கு ரூ.200-ம், பிரசார வாகனங்களுக்கு ரூ.200-ம், கனரக வாகனங்களுக்கு ரூ.300-ம், வங்கி மொபைல் ஏ.டி.எம். வாகனத்துக்கு ரூ.1000-ம் கட்டண நிர்ணயம் செய்துள்ளனர். (தினத்தந்தி)

Leave A Reply

Your email address will not be published.