இடம் மாறும் திருச்சி வெங்காயமண்டி

0
ntrichy

இடம் மாறும் திருச்சி வெங்காயமண்டி

திருச்சி காந்திமார்க்கெட்டில் செயல்பட்டு வந்த வெங்காய மண்டி இடப்பற்றாக்குறை காரணமாகவும், பொதுமக்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்களை போக்கும்விதமாகவும், மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பால்பண்ணை அருகில், செந்தண்ணீர்புரம் சர்வீஸ் ரோடுக்கு மாற்றப்படுகிறது.
80ஆண்டுகளாக திருச்சி, காந்தி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த வெங்காயமண்டி தென்மாவட்டங்களில் பெரும்பாலான வியாபாரிகளால் நன்கு அறியப்பட்டது. பெரம்பலூர், அரியலூர், கரூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்சிக்கு வரும் வெங்காயம். மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரமாக தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறது. தமிழகத்தின் மையப்பகுதியாக இருக்கும் திருச்சி இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்நிலையில், இடப்பற்றாக்குறை, பொதுமக்களுக்கு ஏற்படும் இடைஞ்சல் உள்ளிட்ட காரணங்களால் காந்திமார்க்கெட் வெங்காயமண்டி இடமாற்றம் செய்யப்படுகிறது. மேலும், பகல் நேரங்களில் 2மணிநேரம் மட்டுமே லாரிகளில் லோடு ஏற்ற மாநகரகாவல் துறையினர் அனுமதிப்பதால், பல வியாபாரங்கள் தடைபடுகிறது. இதனை கருத்தில் கொண்டும் இடம் மாற்றப்படுகிறது.

 

இது குறித்து காந்தி மார்க்கெட் உள்ள திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்கத்தின் செயலாளர் தங்கராஜ் கூறுகையில், மாநகராட்சி மற்றும் மாநகரப்போக்குவரத்துக்கு ஒத்துழைப்புகொடுக்கும் வகையில், வெங்காய மண்டியை இடம் மாற்றலாம் என முடிவு செய்தோம். எனவே, திருச்சி புதிய மார்க்கெட் கள்ளக்குடிக்கு மாற்றப்படுவதற்கு முன்பு, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் நாங்கள் புதிய மார்க்கெட்டில் வெங்காயமண்டிக்கு 78கடைகளுக்கு 2500ச.அ இடம் தேவைப்படுகிறது, அந்த அளவிற்கு இடம் உள்ளதா? இருந்தால் வாடகை அட்வான்ஸ் எவ்வளவு அதுமட்டுமின்றி வெங்காயமண்டிக்கு தரைத்தளம் மட்டுமே தேவை அது ஒதுக்கப்பட்டுள்ளதா என கேட்டோம். நீங்கள் கேட்கும் தகவல் தற்போது இல்லை. மார்க்கெட் கட்டிமுடித்தவுடன் தருகிறோம் என்று பதில் வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், அப்போதைய அரசு கொறடா மனோகரன் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் நீங்கள் கேட்கும் படியாக இடம் அங்கு இல்லை. உங்களுக்கான இடத்தில் நீங்கள் வெங்காயமண்டியை ஏற்படுத்திகொள்ளலாம் அரசு அதற்கு உதவிசெய்யும் என்றார்.

அதன்படி 1992ம் ஆண்டு செந்தண்ணீர்புரம் சர்வீஸ் ரோட்டில் எங்கள் சங்கத்தின் சார்பில் நாங்கள் வாங்கிய இடத்தில், திருச்சி அனைத்து அழுகும் பொருள் கமிஷன் மண்டிகள் வணிக வளாகம் என்ற பெயரில் வெங்காயமண்டியை தொடங்க திட்டமிட்டோம். கடந்த 5 ஆண்டுகளாகவே இங்கு தான் வெங்காயம் ஏற்றிவரும் லாரிகளுக்கான லோடிங் அன்லோடிங் நடைபெற்று வருகிறது. தற்போது, மார்க்கெட்டில் உள்ள சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் வேறு எங்கும் பணிக்கு செல்லமாட்டோம் என்று கூறிய காரணத்தினால், திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலித்தொழிலாளர்கள் சங்கம் என்ற அரசு அங்கீகாரம் பெற்ற சங்கத்தின் கீழ் திருச்சி மாநகரம் பகுதியைச்சேர்ந்த 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர்.

நாங்கள் இடம் வாங்கும் போது சங்கத்தில் இருந்த 65 உறுப்பினர்கள் சேர்ந்துவாங்கினோம். ஆனால், தற்போது, 78பேர் உள்ளனர். ஒரு சிலருக்கு 2 முதல் 3 கடைகள் வரை உள்ளதால் இடம்இல்லாதவர்களுக்கு வாடகைக்கு இடம் தரலாம் எனவும் முடிவுசெய்துகொண்டோம். இவர்களில், 40பேர் மாநகராட்சி கடைகளிலும், 38 சொந்தகடைகளிலும் காந்திமார்க்கெட்டில் வியாபாரம் செய்கின்றனர். இதற்காக, 18மாதத்திற்கு டெபாசிட்டும் மாநகராட்சிக்கு அளித்துள்ளோம். இனி அந்த இடங்களில் வெங்காயம் சில்லரை வியாபாரமாக மட்டுமே நடைபெறும். இந்த வணிகவளாகம் கட்டுவதற்கு அரசு சார்பில் பண உதவி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. சங்கத்தின் சார்பில் நாங்களே சிண்டிகேட் வங்கியில் 3கோடிவரையில் லோன் ஏற்பாடு செய்து 50 பேருக்கு வாங்கிக்கொடுத்துள்ளோம்.
இந்த வெங்காயமண்டி முழுவதிலும் 40அடிக்கு ரோடு அமைக்கப்பட்டு லாரிகள் எந்த இடையூறும் இல்லாத வண்ணம் செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. 200சிப்பங்கள் ஏற்றிவரும் வாகனம் முதல் 400சிப்பங்கள் வரையில் ஏற்றிவரும் பெரிய லாரிகள் வரையில் சிரமமின்றி திருப்பி செல்லமுடியும். அதுமட்டுமின்றி, காந்தி மார்க்கெட்டில் காலை 7மணி முதல் இரவு 10மணி வரையில், மதியம் 1 முதல் 3மணி வரை மட்டுமே லோடு ஏற்றமுடியும். ஆனால், இங்கு அந்த பிரச்சனை இல்லை. எனவே, எங்களுக்கு வியாபாரம் தடையின்றி நடைபெறும். தற்போது, கடைவேலைகள் முடிவடைந்துவிட்டன, கோவில் கட்டும் பணிமட்டும் சிறிதளவு உள்ளது. எப்படியும் இன்னும் 20 நாட்களுக்குள் திருச்சிக்கான புதிய வெங்காயமண்டி தயாராக இருக்கும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.