உயிரை காக்கும் பேருதவியில் திருச்சி அப்துல் கபூர் !

0
ntrichy

உயிரை காக்கும் பேருதவியில் திருச்சி அப்துல் கபூர்

 

 

திருச்சி மாநகராட்சி பகுதியில் 15 கி.மீ. சுற்றளவிற்கு வாகன விபத்து ஏற்பட்டால் விபத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் பணியினை செய்துவருகிறார் அப்துல்கபூர். இது குறித்து அப்துல்கபூரிடம் பேசுகையில்,

எனது உறவினர் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு இருக்கையில் அவருக்கு முன்வந்து உதவிட யாருமில்லை. ஏனென்றால் விபத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் போது பொதுமக்களுக்கு பெரும் அச்ச உணர்வு இருக்கின்றது. என்னவென்றால் காவல் நிலையம் செல்ல வேண்டும். நீதிமன்றத்திற்கு சென்று சாட்சி கூற வேண்டும். வழக்கு முடியும் வரை வாய்தாவிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

விபத்தை பொறுத்தவரை பாதித்தவரை விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதை பொன்னான நேரம் என்பர். அப்போது எங்களது உறவினர் அடைந்த துன்பம் அளப்பறியது. இப்பாதிப்பானது எனது நெஞ்சில் நீங்காத பதிவை ஏற்படுத்தியது. அப்போதிருந்தே விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விபத்துக்குள்ளானவர்களை காப்பாற்ற ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ஒவ்வொரு செயலுமே சவாலாகவும், பல்வேறு புரிதலையும் ஏற்படுத்தியது. அதற்காக நாமக்கல்லில் அசோக்லேலாண்ட் நிறுவனம் நடத்திய முதலுதவி பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்றேன். பிறகு முதலுதவி, தீ விபத்தில் முதலுதவி, கனரக வாகன விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் பயிற்சி பெற்றேன். அதிலும் பெட்ரோல் மற்றும் கேஸ் கசிவு விபத்தில் எப்படி செயல்படுவது என்பதெல்லாம் படிப்படியாக தெரிந்து கொண்டேன்.

விபத்து ஏற்பட்டவுடன் முதலில், அவசர போலீஸ் 100க்கு தகவல் கொடுத்தும், பாதிக்கப்பட்டோரை மீட்டெடுக்க 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் தெரிவிப்பேன்.
விபத்து ஏற்பட்ட இடத்திற்கு செல்லும்போது விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் வந்தவர்கள் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துவர், அதுமட்டுமின்றி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பித்தும் விடுவர். தகவலறிந்து கஷ்டப்பட்டு விபத்தை ஏற்படுத்தியவரிடம் போய் கேட்கையில் எதுவுமே நடக்காதவாறே பேசுவார்கள். சமயத்தில் வாய்வார்த்தை முற்றி தகராறிலும் முடிவதுண்டு. இப்பிரச்னையெல்லாம் முடித்துவிட்டு அரசு மருத்துவமனை சென்றால் விபத்தில் சிக்கியவர்க்கு உதவுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். விபத்திலிருந்து மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கு தகவல் சொல்லி அவர்கள் மருத்துவமனைக்கு வரும் வரை எனது பணியினை செய்து வருகின்றேன்.

 

இதற்காகவே உயிர்காக்கும் கரங்கள் அறக்கட்டளையினை அக்டோபர் 2017-ம் ஆண்டு அமைத்து, நடத்தி வருகின்றேன். இந்நாள் வரை 70 விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். அதில் 20 நபர்கள் விபத்தால் உயிரிழந்து உள்ளனர்.

அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை எடுப்பதற்கு உள்ள கட்டணங்களையும் கட்டி விடுவோம். அதனை விபத்தில் சிக்கியவரிடம் கட்டணத்தை பெறாமல் இலவசமாக செய்து வருகிறேன்.

இப்படிப்பட்ட விபத்தில் சிக்கியவர்களின் சூழல் பெரும் துயரத்திற்குள்ளானது. ஏனெனில் கை,கால் முறிவு, தலைக்காயம், கொடுங்காயங்களுடன் குற்றுயிருடன் போராடுபவர்களுக்கு உதவி செய்வது சவாலானதாக இருந்தாலும், அவ்வுதவி அந்நேரத்தில் உயிரைக்காக்கும் பேருதவியாக அமைகிறது. சமயத்தில் சுயநினைவை இழந்திருப்பவர்களின் உறவினர்களிடம் தகவலை கொண்டு சேர்ப்பது பெரும் சவாலாக அமைகிறது. அதுமட்டுமின்றி அரசு மருத்துவமனையிலேயே விபத்து இழப்பீடு வழக்கிற்காக இடைத்தரகர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதும் உண்டு.

மேலும் உயர் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடிய சூழலும் உள்ளது.

 

மருத்துவமனையில் சிகிச்சையளிக்காமல் இருந்தால் ஏன் சிகிச்சையளிக்கவில்லை என்று கேட்கும் உரிமையும் நமக்கு உள்ளது. ஆனால் விபத்து என்பது திடீரென்று ஏற்படும் நிகழ்வாகும். பலருக்கு மருத்துவமனை சூழலும் புதிதாகவே இருக்கும். ஆனால் சேவையாக மேற்கொண்ட எங்களது பணியில் பல்வேறு உயிரை காப்பாற்றி உள்ளதால் இன்று பல்வேறு வீட்டில் நான் ஒரு குடும்ப உறுப்பினராகவே பாவிக்கப்படுகிறேன்.
இப்படி பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணம், பெரும்பாலும் வாகன ஓட்டுனரின் கவனக்குறைவுதான்.
போக்குவரத்து என்பது நடைபயணம், மாட்டுவண்டி, சைக்கிள், இரண்டு மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனத்தில் செல்வதை குறிக்கும். அதுமட்டுமின்றி கனரக வாகனங்களும், சாலையில் செல்கின்றன. முதன்முதலில் நியூயார்க் நகரில் சைக்கிள் மீது கார் மோதி சாலை விபத்து ஏற்படுகிறது. அதன் பிறகு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களை கருத்தில் கொண்டு சாலை விதிகள் உருவானது. எச்சரிக்கை, உத்தரவு, தகவல் சின்னங்கள் சாலை ஓரத்தில் அறிவிப்பு செய்யப்பட்டன.
மேலும், சாலையிலே இருவழி, நான்கு வழி, ஆறுவழிச்சாலையாகவோ, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவலை சாலை விபத்து மீட்பு அமைப்பு மூலம் கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றேன். ROAD SAFETY PATROL (RSP) குழுவினரை ஏற்படுத்தி பல்வேறு பொதுசேவைகளை செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றேன். பல்வேறு வேகத்தடைகளில் ஒளிரும் வண்ணம் பராமரிப்பின்றி இருப்பதும் பாதசாரிகளின் நடைபாதையில் ஸீப்ரா லைன் இல்லாததும் விபத்துக்கு ஒரு காரணமாக அமைகிறது. அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். மேலும் விபத்தால் பாதிக்கப்பட்டவர்க்கு காயத்தன்மைக்கேற்பவும், உயிரிழந்தோருக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண உதவித்தொகையினை பெறுவதற்கும் வழிகாட்டி வருகின்றேன்.
தற்போது இலவச ஆம்புலன்ஸ் சேவையினையும் துவக்கியுள்ளேன். எனது பணிக்காக திருச்சி, அரியமங்கலத்திலிருந்து வாழவந்தான்கோட்டை வரை உள்ள பகுதியை தத்தெடுத்து விபத்தில் பாதிக்கப்பட்டோரை மீட்டு வருகிறேன் என்று கூறும்பொழுதே, அலைபேசியில் அவசர அழைப்பு வர உயிர்காக்க உடன் புறப்பட்டவர் நம்மிடம் “தொங்கி செல்வதும், துரத்தி செல்வதும், குருதியின் வேகமாக இருக்கலாம். முந்தி செல்லும் முன்னோடிக்கு தெரியுமா நீதான் வீட்டின் முகவரி என்று, சாலைக்கு தெரியாது சகோதரா, சாதிக்கப்பிறந்தவன் நீதான்” என்று விடைபெற்றார்.
இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு 9688238886 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளக்கூறி சேவையை தொடர்ந்தார்.
– வெற்றிச் செல்வன்

Leave A Reply

Your email address will not be published.