திருச்சியில் மழையில் சிக்கிய மணமகன் மற்றும் பெண் வீட்டாரின் உறவினர்கள்

0
ntrichy

திருச்சியில் மழையில் சிக்கிய மணமகன் மற்றும் பெண் வீட்டாரின் உறவினர்கள்

 

 

திருச்சி மாநகரில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் கோடைமழை கொட்டி தீர்த்தது. இதனால், மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், மழைநீர் செல்ல வழியின்றி, கழிவுநீருடன் ரோட்டில் பெருக்கெடுத்தது.

 

பலத்த மழையால் திருச்சி மேலப்புதூர் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்க தொடங்கியது. சுமார் 1½ மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையால் சுரங்கப்பாதையில் 5 அடிக்கும் மேலாக தண்ணீர் நின்றது. அப்போது சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பாலக்கரை, ஜங்ஷன் ரெயில் நிலையம், மத்திய பஸ் நிலையம் வழியாக எரங்குடி செல்லும் அரசு டவுன் பஸ் வந்தது. பஸ்சில் 40 பயணிகள் வரை பயணம் செய்தனர். சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சென்ற போது பஸ் திடீரென பழுதாகி நின்று விட்டது. இதனால், டிரைவர் செய்வதறியாது திகைத்தார். உடனடியாக பயணிகளை பஸ்சில் இருந்து பத்திரமாக வெளியேறிட அறிவுறுத்தினார். பின்னர் பயணிகள் அனைவரும் அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பாக தண்ணீரை கடந்து சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறி வந்தனர்.

 

அதைத்தொடர்ந்து திருச்சி மாநகர போலீசார், மேலப்புதூர் சுரங்கப்பாதை வழியாக செல்லும் இருசக்கர வாகனம் உள்பட அனைத்து வாகனங்களையும் மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர். பாலக்கரையில் இருந்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம், மத்திய பஸ் நிலையம் வரும் அனைத்து வாகனங்களும் காஜா பேட்டை, தலைமை தபால் நிலையம் வழியாக மீண்டும் ஜங்ஷன், மத்திய பஸ் நிலையம் வந்தன.

 

அதே வேளையில் சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய பஸ்சை மீட்பதற்காக, அரசு போக்குவரத்து கழகத்தின் மீட்பு வாகனம் வந்தது. திருச்சி மாநகராட்சி ஊழியர்கள், மோட்டார் மூலம் தண்ணீரை வெளி யேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். தண்ணீர் ஓரளவு வெளியேற்றிய பின்னர், பஸ்சை மீட்கும் பணி நடந்தது.

 

ஜங்ஷன் ரெயில்வே திருமண மண்டபத்தில் நேற்று பகல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதற்காக மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள், தொழில் அதிபர்கள் என பலர் வந்திருந் தனர். மாலை 4 மணிக்கு பெய்ய தொடங்கிய மழையால், அவர்கள் மண்டபத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.

 

மேலும் மழை காரணமாக மின்சார வினியோகமும் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், ரெயில்வே திருமண மண்டபத்திற்குள்ளும் மழைநீர் புகுந்தது. அத்துடன் சமையல் கூடத்திலும் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக, மாலை 6 மணிக்கு மேல் நடக்க வேண்டிய நிகழ்ச்சி ரத்து செய்யப் படுவதாக அதை ஏற்பாடு செய்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.(தினத்தந்தி)

Leave A Reply

Your email address will not be published.