பல பிரச்சினைகள் ஏற்படும் எனவே இங்கு டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது-பொன்மலை பகுதி மக்கள்

0
ntrichy

பல பிரச்சினைகள் ஏற்படும் எனவே இங்கு டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது-பொன்மலை பகுதி மக்கள்

 

 

திருச்சி மாவட்டம் பொன்மலை அருகே கிழக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்றல் நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கடை கட்டப்பட்டு வந்தது. அந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து கம்யூனிஸ்டு கட்சி பொன்மலை பகுதி செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அந்த கட்சியினரும் தென்றல் நகர், காருண்யாநகர், அமல் நகர், கிழக்குறிச்சி, பொன்னேரிபுரம், மீனாட்சி நகர், காவேரி நகர், விஐபி நகர், கீழ கல்கண்டார்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இணைந்து, புதிதாக கடை கட்டப்பட்டு வரும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அவர்கள் கூறுகையில், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், அலுவலகத்திற்கு செல்பவர்கள், பஸ் நிலையத்திற்கு செல்பவர்கள் ஆகியோர் இந்த வழியாகவே சென்று வருகின்றனர். ஏற்கனவே இந்த பகுதியில் அடிக்கடி சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது. அருகில் புறக்காவல் நிலையம் இல்லாததால், எந்த பிரச்சினையாக இருந்தாலும 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால், மேலும் பல பிரச்சினைகள் ஏற்படும். எனவே இங்கு டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது, என்று தெரிவித்தனர்.

 

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், என்று தெரிவித்தனர். இதையடுத்து திருவெறும்பூர் துணை தாசில்தார் ராஜேந்திரன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். 10 நாட்களுக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அவர் கூறியதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 3 மணி நேரம் நடந்த முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.(தினத்தந்தி)

Leave A Reply

Your email address will not be published.