திருச்சியில் சித்திரை வெயிலை விரட்டிய  இடியுடன் கூடிய பழத்த மழை 

0
ntrichy

திருச்சியில் சித்திரை வெயிலை விரட்டிய  இடியுடன் கூடிய பழத்த மழை

 

 

தமிழ்நாட்டில் மைய பகுதியாக விளங்கும் திருச்சி மற்றும் கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் வேலூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர். வெயில் 105 டிகிரியை தாண்டியும் பதிவானது. கோடை வெயிலின் அனல் தாங்காது பொதுமக்கள் வெளியில் செல்ல பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கினர்

 

‘கத்திரி வெயில்’ என்னும் அக்னி நட்சத்திரமககடந்த 4ஆம் தேதி தொடங்கியது.இதனால் வெயில் கடுமையாக வாட்டி வந்தது. திருச்சியில் இருமுரை சாரல் மழையாகவே பெய்தது.

 

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு திருச்சி மாநகரில் வானத்தில் கருமேகம் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி மாநகரில் பாலக்கரை, தென்னூர், புதூர், தில்லைநகர், திருச்சி மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

 

பாலக்கரை சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அப்பாதையில் செல்ல சிரமப்பட்டனர். காந்தி மார்க்கெட் பகுதியில் பெய்த பலத்த மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டது, மார்க்கெட் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்களும் அவதிப்பட்டனர். மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கின.

 

இதுபோல திருச்சி விமான நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று மாலை 4 மணி முதல் பலத்த மழை பெய்தது. கருமேகம் சூழ்ந்து இருந்ததால் விமான நிலையத்திற்கு காரில் வந்த பயணிகளும், அவர்களை வழியனுப்ப வந்த உறவினர்களும் காரின் முகப்பு விளக்கை எரிய விட்டப்படியே வந்தனர்.

 

பலத்த மழையால் திருச்சி விமான நிலைய வளாகத்திலும் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. விமான நிலையத்திற்குள் சென்று வரும் வழியில் உள்ள போர்டிகோ பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால், பயணிகள் தங்களது உடைமைகளை டிராலியில் எடுத்து செல்வதற்கு பெரும் சிரமப்பட்டனர். உடைமைகள் மழைநீரில் நனைந்தன. மாலை 4 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை மாலை 5.30 மணி வரை நீடித்தது. மழைக்காரணமாக சிங்கப்பூரில் இருந்தும், இலங்கையில் இருந்தும் திருச்சி வரவேண்டிய விமானங்கள் வழக்கமான நேரத்தைவிட, காலதாமதமாக ஓடுதளத்தில் இறங்கின. விமான நிலையப்பகுதியில் பலத்த மழை பெய்ததை இப்போதுதான் காண்பதாக விமான பயணிகள் சிலர் தெரிவித்தனர்.

 

பல மாதங்களுக்கு பிறகு பெய்த பலத்த மழையால் பூமி குளிர்ந்தது. சில இடங்களில் பெய்த மழைநீரை பூமி வேகமாக உள்வாங்கியது. பள்ளத்தில் தேங்கிய மழைநீர் வெளியேற முடியாமல் குட்டைபோல தேங்கி கிடந்தது. எதிர்பாராத மழையால் மாலை வேலைமுடிந்து வீடு திரும்பிய அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் சற்று சிரமத்திற்கு உள்ளானார்கள். அதே வேளையில் பலத்த மழையால் விவசாய பெருமக்கள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

 

திருச்சியில் அக்னி வெயிலின் தாக்கத்தை நேற்று ஒரே நாள் பெய்த கோடை மழையானது விரட்டியது. தொடர்ந்து கோடைமழை பெய்தால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும், அதற்கு வருணபகவான் கருணை காட்ட வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.