தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் சிறைக்காவலர்களுக்கான பயிற்சி நிறைவு மற்றும் பணியேற்பு விழா

0
ntrichy

தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் சிறைக்காவலர்களுக்கான பயிற்சி நிறைவு மற்றும் பணியேற்பு விழா

 

தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் சிறைக்காவலர்களுக்கான பயிற்சி நிறைவு மற்றும் பணியேற்பு விழா திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், திருச்சி மத்திய சிறை ஏடிஜிபி அசோக் சுக்லா, கண்காணிப்பாளர்  நிகிலா நாகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி மத்திய சிறையில் சிறைகாவலர்களுக்கான பயிற்சி பள்ளியில் 482 பேருக்கு மோப்ப நாய் கையாளும் விதம், துப்பாக்கி சுடுதல், யோகா, முதலுதவி சிகிச்சை முறை, கைதிகளை கையாளும் முறை, மனித உரிமைகள், தகவல் உரிமை சட்டம், இளம்சிறார் குற்றம் உட்பட 15 துறையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் லத்தி பயன்படுத்துவது, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட செயல்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இப்பயிற்சிகளை கடந்த ஆறு மாதங்களாக மேற்கொண்டு வந்த 482 பேரும் (448 ஆண், 34 பெண்)  சிறைக்காவலர்களாக பணியேற்றுக் கொண்டனர். மேலும் பயிற்சியின் இறுதியில்  நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பணியேற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “42 நீதிமன்றங்களில் 5.23 கோடி செலவில் காணொலிக்காட்சி கருவிகள், 51.85 இலட்சம் செலவில் சிறைவாசிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்  (RO SYSTEM), 2.19 கோடி செலவில் மத்திய சிறை வாசிகளுக்கு மருத்துவ பரிசோதனை கருவிகள், உபகரணங்கள் வாங்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும்,  சிறைக்கைதிகளுக்கு மன இறுக்கத்தை போக்கும் விதமாக ஆற்றுபடுத்துநர் மற்றும் வானொலிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறைவாசிகளின் கல்வித் தகுதியை பொறுத்து அவர்கள் மேலும் கல்வி பயில வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6 சிறை அலுவலர் பதவிக்கு அரசு தேர்வு ஆணையம் மூலமாக தேர்வு செய்யபட்டுள்ளனர். 101 உதவி சிறை அலுவலர்கள் வேலூரில் உள்ள சிறை நிர்வாக பள்ளியில் பயிற்சி பெற்று வருகின்றனர். 340 இரண்டாம் நிலை காவலர் சீருடை பணியாளர் ஆணையம் மூலமும், மகளிர் சிறை, திறந்தவெளி சிறை உள்ளிட்டவைகளில் 31 துப்புரவு பணியாளர் இடங்களும் நிரப்பபட உள்ளது. புதிதாக பணியில் சேரும் சிறைக்காவலர்கள் சிறைத்துறை மீது எழும் புகார் மற்றும் விமர்சனங்களுக்கு தக்க பதிலளிக்கும் வகையில் ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் பணியாற்ற வேண்டும்,” என்றார்.

முன்னதாக பயிற்சி முடித்த சிறை காவல்ர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு,பயிற்சியின் போது சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்

Leave A Reply

Your email address will not be published.