பாதுகாக்க தெரியாத மாநகராட்சி; பரிதவிக்கும் மக்கள் ஸ்மார்ட் சிட்டி கனவை நிறைவேற்றுவாரா மாநகராட்சி ஆணையர்

0
ntrichy

பாதுகாக்க தெரியாத மாநகராட்சி; பரிதவிக்கும் மக்கள்

ஸ்மார்ட் சிட்டி கனவை நிறைவேற்றுவாரா மாநகராட்சி ஆணையர்

 

திருச்சி மாநகரம் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டுள்ளது. கடந்த 2015-16 ண் ஆண்டில் இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் 3-ம் இடம் பெற்றது. இந்த ஆண்டு எப்படியும் முதலிடம் பெற்றுவிட வேண்டும் என மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி திருச்சி ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் கட்டமைப்பு பட்டியலில் உள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தின் மைய பகுதியான திருச்சியையும் சேர்க்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர். மத்திய அரசு இதை ஏற்று, கடந்த 2017 ஜூன் 28ல் திருச்சி மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணிக்காக மத்திய அரசு திருச்சி மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம், 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி வழங்கும்.

கடந்த ஜனவரி 31-ம் தேதி திருச்சி மாநகராட்சி ஆணையரும், ஸ்மார்ட் சிட்டி திட்ட நிர்வாக இயக்குனருமான ரவிச்சந்திரன் மலைக்கோட்டையை மையமாக கொண்டு 7 கிலோ மீட்டர் பரப்பளவில் முதல்கட்டமாக ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்தார். மேலும், இந்த 7 கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் சுற்றுலா வளர்ச்சி, வணிக வளாகம் அபிவிருத்தி, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், போக்குவரத்தை சீரமைத்தல் உள்பட 21 விதமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

திருச்சி மாநகரிலுள்ள 10 பூங்காக்களை
ரூ. 88.45 லட்சத்தில் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிடப்பட்டு அதற்கான திட்ட வரைவு மாநகராட்சி கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஏறத்தாழ 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட பொழுதுபோக்கிற்கான வசதிகள் மிகக்குறைவு.
மேற்கண் 10 பூங்காக்களில் ஒன்றான இப்ராகிம் பூங்காவினை 1930 ம் ஆண்டு அப்போதைய திருச்சினாபாலி ஆட்சியர் ரெங்கநாதன் திறந்து வைத்தார். அந்த விழாவில் முனிசிபல் சேர்மன் எம்.கே.முகமது இப்ராகிம், துணை சேர்மன் கே.சிங்கம் ஐயங்கார், பொறுப்பு கவுன்சிலர் டி.ஆர்.கோபால் ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு காலகட்டங்களில் இப்பூங்கா மாநகராட்சி நிர்வாகத்தால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு மாநகராட்சி ஆணையர் ஹர்மந்தர்சிங், மேயர் சாருபாலா தொண்டைமான் ஆகியோரின் முயற்சியால் ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது.
மக்களால் நேசிக்கப்படும் விதத்தில் மிக அழகாகவும், குழந்தைகளு்ககான விளையாட்டு உபகரணங்கள், சுவர் ஓவியங்கள், குடிநீர் வசதி போன்ற பல்வேறு வசதிகளுடன் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கடந்த சில ஆண்டுகளாக இந்த பூங்காவை யாரும் கண்டுகொள்வதில்லை. பொதுமக்கள் உள்ளே செல்லவே அச்சப்படும் நிலையில் உள்ளது. நுழைவாயிலில் தொடங்கி பூங்காவின் உள்ளே உள்ள பொம்மைகள், குழந்தைகளின் விளையாட்டு சாதனங்கள் சிதிலமடைந்துள்ளன. மாலையில் வெளிச்சத்துக்கான அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகளை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தி உள்ளனர்.

ஆனால், மாநகராட்சி நிர்வாக உரிமம் பெற்ற ஒப்ந்தததாரரால் பெரியவர்களுக்கு ரூ.3ம் சிறியவர்களுக்கு ரூ.2ம் புகைப்படங்கள் எடுப்பதற்கு ரூ.15ம் வீடியோவிற்கு ரூ.100ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பல சமயங்களில் இதற்காக ரசீதும் தருவதில்லை. இதனால், பொதுமக்கள் வருகையும் இல்லாமல் போய்விட்டது. இதை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோத கும்பல்கள் இப்பூங்காவினை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு புதிய பசுமை பூங்காக்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இன்னும் சில இடங்களில் அதற்கான பணிகளும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
ஆனால், இப்ராகிம் பூங்கா நகரில் மையப் பகுதியில் அமைந்திருப்பதால், மக்களின் பொழுதுபோக்கு தேவையை பூர்த்தி செய்யும் இடமாக கருதப்பட்டது. ஆனால், இத்தகையை பழைய பூங்காக்களை புதுப்பித்து மக்களின் நன்மதிப்பை பெறாமல், புதிது புதிதாக பூங்காக்களை உருவாக்குவதால் என்ன பயன்.
-வெற்றிச்செல்வன்

Leave A Reply

Your email address will not be published.