பாதாள சாக்கடை ஆகும் கல்லனை கால்வாய்

0
ntrichy

பாதாள சாக்கடை ஆகும் கல்லனை கால்வாய்

 

சோழநாடு சோறுடைத்து எனும் புகழ்பெற்ற தமிழகத்தின் நெற்களஞ்சியமாய் விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் வளைந்து நெளிந்து ஓடும் ஆறுகள் அழகினை வார்த்தையால் விவரிக்க முடியாது. அத்தகைய தஞ்சையில் பாயும் ஆறுகளில் ஒன்றான கல்லணை கால்வாய் தற்போது சீரழிந்து காணப்படுகிறது.
தனி மனித ஒழுக்கம் மட்டுமே தீர்வு எனும் உணரும் தருணத்தில் நமது முன்னோர்கள் நாம் நன்றாக வாழ வேண்டும் என விட்டுச் சென்ற பொக்கிஷங்களை ஒவ்வொன்றாக இழந்து வருகிறோம். நகரமயமாக்கல், மக்கள் தொகை பெருக்கம் என நாமே காரணமிட்டுக்கொண்டு நம் கண் முன்னே நம்மாலேயே நாசம் செய்யப்படும் பல செயல்களில் ஒன்றாய் உணவுக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் ஆறுகளை நாசம் செய்து வருகிறோம். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை எனும் கூற்றின் விளைவாய் இன்று ஆட்சியாளர்களிடமும் பெருமுதலாளிகளிடமும் மாட்டிக் கொண்டும் முழிக்கிறோம்.

டெல்டா மாவட்டங்களில் முக்கிய பகுதியாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் நம் வாரிசுகள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிப்பார்கள் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அந்த நிலையை வெகுவிரைவில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளோம். என்ன விட்டுச் செல்ல போகிறோம் நம் வருங்கால தலைமுறைக்கு. இது முக்கியமாக சிந்திக்க வேண்டிய சூழல், சிந்திக்க மறந்தால் நம் பெயரன், பெயர்த்திகளுக்கு இங்கு எதுவும் மிச்சமிருக்காது.

தஞ்சை நகரில் ஓடும் ஆறுகளில் ஒன்றான கல்லணை கால்வாயால் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி முதலிய பகுதிகள் பாசனம் பெருகின்றன. தஞ்சை பெரிய கோவில் வழியாக ஓடும் இந்தக் கால்வாய் மேற்கண்ட பகுதிகளின் நீராதாரங்களாக விளங்கும் ஏரி குளங்களையும் நிரப்பும் பணியையும் செய்கின்றது. இப்படிப்பட்ட இந்த கால்வாய் தற்போது தஞ்சை நகரத்தின் கழிவு நீரால் நாசமடைந்து கொண்டிருக்கிறது.

உதாரணமாக பொன்மணி மஹால் அருகில் உள்ள பாதாள சாக்கடை இணைப்பு கல்லணை கால்வாயை குறுக்காக கடந்து நியூ வெங்கடேச பெருமாள் கோவில் வழியாக செல்கிறது. சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாதாள சாக்கடை கல்லணை கால்வாயின் கீழே செல்லும் படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கால்வாயில் நீருக்கு கீழே செல்லும் பாதாள சாக்கடை உடைந்து கால்வாய் நீருடன் கலந்து அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டையும், கால்வாய் தண்ணீரின் நிறத்தையே மாற்றியுள்ளது.

தஞ்சையின் பெரும் பகுதிகளிலிருந்து வரும் சாக்கடைகள் இந்த பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ளன. கல்லணை கால்வாயை ஒட்டியிருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் கழிவுகள் இந்த பாதாள சாக்கடையில் பெரும் அளவில் கலக்கிறது. அந்த நிறுவனம் பயன்படுத்தும் ரசாயன கழிவுகளும் கலப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்தும்போது பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.
கால்வாயில் தண்ணீர் ஓடும் நேரங்களில் இந்த பாதாள சாக்கடையின் கழிவுகள் அனைத்தும் நீரில் அடித்து செல்லப்படுகிறது. மாறாக கால்வாயில் தண்ணீர் இல்லாத நேரங்களில் தஞ்சை பெரிய கோயிலுக்கும் இருபது கண் பாலத்துக்கும் இடையே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாநகர மக்களுக்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

கால்வாயில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நேரத்தில் 20 கண் பாலத்தில் உள்ள மதகுகள் மூடப்பட்டிருப்பதால், தொடர்ந்து அந்த தனியார் நிறுவனத்திற்கு அருகே வெளியேறும் பாதாள சாக்கடையில் வெளியாகும் கழிவுகள் எதிர் திசையில் தஞ்சை பெரிய கோவில் வரை சென்று விடுகிறது. வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ராஜராஜனின் அதிசயத்தை காண வருடம் முழுக்க தஞ்சையை தேடி வரும் சாக்கடையாக உள்ள கல்லணை கால்வாயை கண்டு முகம் சுளிப்பதே. இத்தகைய கால்வாய் சீர்கேட்டால் ஏற்படும் துர்நாற்றம் அவர்களுடன் சேர்த்து பொதுமக்களையும் வெகுவாக பாதிக்கிறது.

இந்த பகுதியில் தான் தமிழக அரசின் சுற்றுலா மாளிகை, பொதுப்பணித்துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களின் வணிக வளாகங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் தஞ்சாவூருக்கு வரும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் தங்கும் சுற்றுலா மாளிகை இருந்தும் இதுவரை யாரும் இந்த பிரச்சினையை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
கண்டுகொள்ளாத மாநகராட்சி
குடிநீருக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய கால்வாயில் பாதாள சாக்கடை உடைந்து சாக்கடை நீர், கல்லணை கால்வாயில் கலக்கிறது என மனு அளித்தும் மாநகராட்சி எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய தொற்று நோய்கள் உருவாக காரணமாக இருக்கும் இது போன்ற சீர்கேட்டை உடனடி நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் பாதாள சாக்கடையை விரைவில் சரி செய்ய வேண்டும் அல்லது இதற்கான நிரந்தர தீர்வாக கால்வாயில் கீழே குறுக்காக பாதாள சாக்கடை இணைப்பு செல்வதை மாற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

 

இது குறித்து கல்லணை கால்வாயின் செயற்பொறியாளர் ரேவதி கூறியது:
‘‘கல்லணை கால்வாயின் குறுக்கே செல்வது மழை நீர் வடிகாலே தவிர, பாதாள சாக்கடை கால்வாய் அல்ல. கால்வாய்க்கு அருகிலிருக்கும் நிறுவனங்கள் தங்களது சாக்கடை கழிவுகளை இந்த மழை நீர் கால்வாயில் விட்டு விடுகிறார்கள். அவ்வாறு செய்வதால் கால்வாயில் கலக்கும் கழிவுகளால் மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு அதனால் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் கழிவு நீர் கல்லணை கால்வாயில் மேல்மட்டத்திற்கு வந்து கலக்கிறது. இதனை சரி செய்யச் சொல்லி கடந்த 2009ம் ஆண்டே மாநகரட்சிக்கு கடிதம் எழுதியுள்ளோம்’’ என்றார்

இது தொடர்பாக அருகிலுள்ள நிறுவனங்கள் ஒன்றின் உரிமையாளரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரின் உதவியாளர், ‘‘ எங்களது சாக்கடை கழிவுகள் மழை நீர் வடிகாலில் கலப்பது உண்மைதான், ஆனால், பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு சுகாதார கேடு ஏற்படுவதற்கு நாங்கள் பொறுப்பல்ல’’ என்றார்.
மாநகராட்சி ஆணையர் வெளியூர் சென்றிருப்பதால், நகர் நல அலுவலரை தொடர்பு கொண்டு மேற்கொண்ட குறைகளை தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டோம். அதற்கு சரியான பதில் தராமல் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கூறிவிட்டு முடித்துக் கொண்டார்.
– போர்வாள்

Leave A Reply

Your email address will not be published.