ஒரு முதலாளி உருவான கதை…பாண்டியன் டிரேடர்ஸ் முத்துராஜிடம் நேர்காணல்

0
ntrichy

ஒரு முதலாளி உருவான கதை…பாண்டியன் டிரேடர்ஸ் முத்துராஜிடம் நேர்காணல்

 

தன் குழந்தைகள் படிப்பதில் ஆர்வம் காட்டாதபோது கோபப்படும் பெற்றோர். அவர்களது எதிர்காலம் பள்ளி படிப்பில் மட்டும் தான் உள்ளது என்று அவர்களுக்கு தொடர் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஆனால், கல்வியில் கற்பதில் ஏதோ ஒரு சூழலில் தோற்ற பலர் இன்று வாழ்வில் மிகப் பெரிய வெற்றியாளராக முன்னேறியுள்ளனர். அவர்களை போன்றவர்களில் ஒருவரான முத்துராஜ் குறித்து இந்த வாரம் பார்ப்போம்..

SSLC முடிச்சிட்டு ரிசல்ட்டுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.என் நண்பர்கள் எல்லாம் போலீஸ் ஆகிட்டாங்க.எனக்கும் ஆசை இருந்தது பரிட்சைலாம் எழுதி தேர்வும் ஆனேன், ஆனா என் வீட்டில் விடவில்லை. SSLC க்கு அப்புறம் படிக்கவும் வசதியில்லை. திருச்சி டவுனுக்கு போனா ஏதாவது நல்ல வேலை கிடைக்கும்ன்னு கிளம்பி வந்தேன்.

 

திருச்சி வருவதற்கு முன்…

1956ல் ராமநாதபுரம் மாவட்டம் முத்துநாடு என்ற கிராமத்தில் பிறந்தேன். என் கூட பிறந்தது 5 பேர், நான் 2 வது பையன். தஞ்சாவூரில் SSLC வரை படித்தேன்.
பிறகு திருச்சிக்கு என் 17 வயதில் வேலைத்தேடி வந்தேன். ஒரு பைப் விற்கும் கடையில் எடுபிடியாக வேலைக்கு சேர்ந்தேன். கிட்டத்தட்ட 15 வருடங்கள் அந்த கடையில் உள்ள அனைத்து வேலைகளையும் படிப்படியாக கற்றுக்கொண்டேன். கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிவரும் பணியை செய்தேன். பிறகு ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு பொறுப்பாளராக என்னை நியமித்தார்கள்.
ஆரம்பத்தில் (1973-ம் ஆண்டு) என் சம்பளம் 55 ரூபாய், 1983-ல் திருமணம். அப்போதைய என் சம்பளம் 290ரூபாய் தான். என் குடும்பத்தின் தேவைக்காகவும் எதிர்கால சேமிப்புக்காகவும் உழைக்க உத்வேகம் கொண்டேன்.
குடும்ப தேவையைத்தாண்டி சம்பாதிக்கும் போது, எளிதாக சேமிக்க முடியும் என்பதை உணர்ந்தேன். அதுவரை செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு தனியாக சிறு பைப்புகள் விற்கும் கடையை ஆரம்பித்தேன்.

புதிதாக தொழிலில் போட்டிகள் ஏதாவது ?

நான் தொழில் தொடங்கியபோது போட்டிகள் இல்லை. என்னுடைய பழக்க வழக்கம், சுற்றத்தாரிடம் பழகிய விதம் எனக்கு ஆர்டர்கள் கிடைத்தது. முதலில் 5,-6 வருடங்கள் மிகவும் கஷ்டம் தான். என் மனைவியின் நகையை முதலீடாக வைத்தே கடையை ஆரம்பித்தேன். ஆர்டர்கள் பிடிக்க சைக்கிளிலேயே 40-50 கி.மீ பயணிப்பேன்.
பெரிய கடைகளில் கடனுக்கு பொருட்களை வாங்கி, அதை விற்றுக் கிடைக்கும் லாபத்தை கொண்டு தொழிலை மேம்படுத்தினேன். நிறைய இழப்புகளையும் சந்தித்தேன்.
பைப்புகள் மட்டுமே விற்றுக் கொண்டு சிறிய கடையாக நடத்திக் கொண்டிருந்த எனது கடையை பைப்புகள், அடிபம்புகள், வீடுகட்ட தேவையான பொருட்கள் விற்கும் ‘‘பாண்டியன் பைப் டிரேடர்ஸ்’’ எனும் பெரிய கடையாக மாற்றினேன். இன்று எங்களிடம் விவசாயம், தொழிற்சாலை, கட்டுமான வசதிகளுக்கு தேவையான மோட்டார்ஸ், பம்பு செட்டுகள், போன்ற அனைத்தும் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து செயல்படுவதே எங்கள் கடையின் நோக்கம்.
இப்போது மதுரைரோடு, இப்ராஹிம் பார்க், தென்னூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் எங்களது கடைகளை தொடங்கி நடத்து வருகிறோம். இன்று திருச்சியில் எங்க கடைகளுக்கு நல்ல மதிப்பு உள்ளது.

பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறீங்க?

பாண்டியன் பைப்ஸ் டிரேடர்ஸ் தொடங்கி 31 வருடங்கள் ஆயிற்று. நிறைய தர்மசங்கடமான சூழ்நிலைகள், இழப்புகள் கடந்து வந்திருக்கிறேன். சிலவற்றை சாதாரணமாக கடந்து தான் ஆகவேண்டும் அப்போது தான் சாதிக்க முடியும்.வீட்டில் என் மனைவியிடம் பிரச்சனைகள் குறித்து பேசுவேன். குறைந்தபட்சம் பிரச்சனைகளை முகம் சுளிக்காமல் சுமூகமாக பேசி சமாளிப்பேன்.
வேணுமென்றே வம்பு செய்பவர்களாக இருந்தால் விட்டுப்பிடிப்பேன், பிரச்சனைக்கான தீர்வை யோசிப்பேன். அத்துடன் தேவையில்லாத பிரச்சனைகளில் இருந்து விலகிவிடுவேன். அப்போது தான் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க முடியும்.

உழைத்து முன்னேற விரும்புவோர்க்கு தாங்கள் கூற விரும்புவது…

முறையாக தொழிலைக் கற்றுக்கொண்டு களமிறங்குங்கள். அகலக்கால் வைக்காமல் படிப்படியாக தொழிலில் முன்னேறுங்கள். அதிகாலையில் எழுந்து உழைக்க தயாராவது, கடினமான உழைப்பு, இறை நம்பிக்கை அவசியம்.
அதைவிட நம் உழைப்பின் மீதான நம்பிக்கை அதிகம் இருத்தல் நலம். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு குதூகலமாக உழைக்க வாழ்வில் வெற்றிப்பெற வழிவகுக்கும் என்றார் ‘‘பாண்டியன் பைப் டிரேடர்ஸ் ’’ நிறுவனர் ரா.முத்துராஜ்.
-ரா.நிருபன்

Leave A Reply

Your email address will not be published.