காவிரிக்கு ஒத்துழைக்கா விட்டால் தமிழகமே ஒத்துழையாமை அறப்போரில் இறங்கும்-திருச்சியில் கமலஹாசன்

0
ntrichy

காவிரிக்கு ஒத்துழைக்கா விட்டால் தமிழகமே ஒத்துழையாமை அறப்போரில் இறங்கும்-திருச்சியில் கமலஹாசன்

 

 

திருச்சி பொன்மலை ஜி கார்னர் இரயில்வே திடலில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் மாலை 06 மணிக்கு துவங்கியது. ஆயிரக்கணக்கானோர் கமலை காண தமிழகம் முழுவதிலுமிருந்து குவிந்தனர். கூட்டம் நடைபெறும் இடத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் நூற்றுக் கணக்கான காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். தனியார் பாதுகாவலர்களும் ஏராளமானோர் கெடுபிடிகளுடன் பொதுக்கூட்ட மேடைக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பொதுக்கூட்ட மேடையில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்கான இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டது. அதில் கமலே எழுதி பாடிய பாடலும் ஒன்று. 07:40 மணிக்கு மேல் மேடை ஏறிய கமல் பொதுக்கூட்ட மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் ஈரோட்டை சேர்ந்த மநீம ஜெசினா என்பவர் கொடியேற்ற பொதுக்கூட்ட மேடையில், திருச்சி, தஞ்சை, திருவாருர், நாகை, பெரம்பலூர்,  அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா பகுதி மாவட்ட பொறுப்பாளர்களுடன் மேடையில் கமல் அமர்ந்திருந்தார். பொதுக்கூட்ட மேடையின் பின் டிஜிட்டல் திரையில் கட்சியின் பெயர், சின்னம், பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது. மக்களிடையே நம்மவரிடம் நமது கேள்விகள் என்ற வாசகம் அடங்கிய பெட்டியை கொண்டு வந்தனர். அதில் கேள்விகளை எழுதி பெட்டியில் போட்டனர். அந்த கேள்விகளில் சிலவற்றை தேடி எடுத்து குறித்து கொண்டது ஒரு குழு. மேலும் ஒரு குழு வாட்ஸ் அப் குழுவில் பொதுக்கூட்ட போட்டோக்களை அனுப்பிக் கொண்டு இருந்தனர். பொதுக்கூட்டத்தில் 10 கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 10 க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர். அவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி வரவேற்றார் கமல்.

இரவு 08:30 மணியளவில் பேசத் தொடங்கிய கமல் பேசியதாவது,  “ஆடு தாண்டும் காவிரி அகண்ட காவிரியாகும் இடம் திருச்சி. காவிரியில் காலம் காலமாக நமது உரிமைகளை அரசியல்வாதிகள் தட்டிப்பறிக்கின்றனர். பல நூறு ஆண்டுகளாக காவிரியில் நமது உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக குழப்பமும் பேராசையும் நம்மிடையே அதிகரித்துள்ளது. தீர்வு கிடைக்கும் நிலையில் சாக்கு போக்கு சொல்கின்றனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசு செய்து வருவது தவறு. உண்ணாவிரதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, உண்ணுவதில்தான் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. நீருக்காக கெஞ்ச வைத்துவிட்டு மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் இருந்து கொண்டுள்ளது மாநில அரசு. இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க வேண்டும் என்பது எனது கனவு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தமிழகம் அமைதியாக ஒத்துழைக்க மறுக்கும். காவிரி விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சி வேண்டாம். காவிரி பிரச்னையில் தீர்வை நோக்கி மக்கள் நீதி மய்யம் செல்கிறது. கர்நாடக தேர்தல் முடிந்ததும் யாரையாவது உண்ணாவிரதமோ, ஊர்வலமோ நடத்தச் சொல்லி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பார்கள். தமிழகம் அமைதியாக ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான். தொடையை தட்டுவது மட்டும் வீரம் அல்ல, தொடையை தட்டவும் எங்களுக்கு தெரியும். காவிரி பிரச்சனையை திசை திருப்பாதீர்கள், திசை திருப்பினால், திசை திரும்பமாட்டோம். காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள். இல்லையெனில் தள்ளி நில்லுங்கள். எங்களிடம் அதை செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

காவிரி பிரச்சனை குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது உரைக்கு நடுவே இப்பிரச்னைக்கு தீர்வு என்ன என்று வல்லுநர்களுடன் கமல் உரையாடிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் கமல் வல்லுனர்களிடம் கேள்வி கேட்டு காவிரி பிரச்சனை குறித்து விளக்கம் பெற்றார். அதில்

தமிழக விவசாயிகள் அதிக அளவில் நிலத்தடி நீரை நம்பி இருக்கிறார்கள், ஆனால் நம்முடைய விவசாயம் ஆற்று நீர், ஏரி நீர் விவசாயம்தான். இதற்காக தமிழகத்திற்கு காவிரி நீரை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்” என்றார்.

மற்றொருவர் பேசியதாவது ”காவிரி பிரச்சனை டெல்டா பிரச்சனை இல்லை. அது தமிழகம் மொத்தத்திற்குமான பிரச்சனை. இது விவசாயிகள் பிரச்சனை இல்லை. மக்கள் பிரச்சனை” என்றார். வீடியோ முடிந்தவுடன் இந்த வல்லுநர்கள் முடி மறைப்பதற்கு முன்பே இதை வலியுறுத்தினார். அப்போதும் செய்யவில்லை. இப்போது முடி நரைத்த பின்னரும் இவர்கள் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த அறிஞர்கள் கூற்றுப்படி நடந்தால் தமிழக நீராதார பிரச்சனை திறந்திருக்கும். ஆனால் தமிழக அரசு இதை எதையும் செய்யவில்லை. இவர்கள் பேச்சை இவ்வளவு நாள் கேட்காத காரணத்தால் இப்போது தண்ணீர் பிரச்சனை இருக்கிறது என்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் பற்றிய உரையை முடித்த பின்னர் மக்கள் நீதி மையத்தின் திட்டங்களையும் அறிவித்தார். அதில் அவர் கூறியதாவது, “உடல் நலமும், மகளிர் நலனும் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள். விவசாயம், நீர் வளம், பாசனப்பரப்பு ஆகியவை செயல்படுத்த முழு வீச்சில் பணிகள் துவங்கும். மழை நீரை சேமிக்க சிறு, சிறு அணைகள் கட்டப்படும். ஏரி, குளங்கள் தூர்வாரப்படும். சொட்டு நீர் பாசனம், தெளிப்பான் பாசனம், நவீன பாசன முறைகளை செயல்படுத்துவோம்.  திறன் மேம்பாட்டு வாரியங்கள் அமைக்கப்படும். தொழில் வளத்தை பெருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

லோக் ஆயுக்தா அமைக்கப்படும். 69 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறோம். விவசாயத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பை சிறு தொழில்களாக உருவாக்கி தர வேண்டும். தொழிற்சாலைகளுக்கு மய்யம் எதிரானது இல்லை. தவறு செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவதை எதிர்க்கிறோம். தமிழக காவல் துறையின் திறமை யாருக்கும் குறைந்தது அல்ல. காவலர்களை வி.ஐ.பி., பந்தோபஸ்துக்கு பயன்படுத்தாமல், சட்டம் ஒழுங்கை காக்க மட்டும் பயன்படுத்தப்படும். காவல் துறையை சீரமைக்க வாரியம் அமைக்கப்படும். பல கோடிகளை லஞ்சம் கொடுத்து துணை வேந்தர் பதவியை பெறுபவர்கள் தேச துரோகிகள். ஆசிரியர்கள் நேர்மையாக இருந்தால் கல்வி நேர்மையாக இருக்கும். ஆகியவற்றை கட்சியின் கொள்கைகளாக அறிவித்தார். மேலும் தொடர்ந்த அவர் சினிமாவில் நான் அரசியல் செய்வதில்லை, அரசியலில் நடிக்கமாட்டேன்.  இன்னும் இரண்டு வாரங்களில் மய்யம் மொபைல் ‘ஆப்’ அறிமுகம் செய்யப்பட உள்ளது”, ஆகியவற்றை திட்டங்களாக அறிவித்தார்.

தனது உரையை முடித்த பின்னர் மதுரை பொதுக்கூட்டத்தில் நடத்தியது போல கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அதில், `சினிமாவில் கமல் வெற்றிகரமானவராக இருக்கலாம். ஆனால், அரசியலில் அவரால் அப்படி இருக்க முடியாது’ என அமைச்சர் ஒருவர் கூறிய விமர்சனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அந்த கட்சியில் என்னிடம் சம்பளம் வாங்காமல் என்னுடைய மக்கள் தொடர்பாளராக அவர் இருந்து வருகிறார். அவர் என்னை எந்த அளவிற்கு விமர்சிக்கிறாரோ அந்த அளவுக்கு மக்கள் என் மீது அன்பு செலுத்துவார்கள். அவர் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது. நான் சினிமாவில் அரசியல் செய்ததில்லை. அரசியல் செய்யும் போது நடிக்க மாட்டேன். அவரால் இதைச் செய்ய முடியுமா?” என்றார்.

  • தனியாக டி.வி சேனல் துவங்குவீர்களா என்ற கேள்விக்கு, கட்சிக்கு என்று தனி ‘டிவி’ சேனல் தேவை என மக்கள் நினைத்தால் அதை நோக்கி நகர்வோம். இவ்வாறு பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இறுதியாக, பறக்க நினைத்தால் பறந்துவிடலாம். ஆகாய விமானம் அப்படித்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் ஒருவர் பறந்தார். இப்போது கூட்டம் கூட்டமாக பறக்கிறோம்.  முதல்வராவது நிச்சயம் நடக்கும், அதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன”, என்றார்.

Leave A Reply

Your email address will not be published.