அடிமையாக இருக்க பெண் தயாராக இருக்கிறாள்……

0
ntrichy

 

அடிமையாக இருக்க பெண் தயாராக இருகிறாள்……

நகரத்தில் உள்ளவர்களே பணம்கட்டி அரசுப்பணிகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்லமுடியாத தற்போதைய சூழ்நிலையில், கிராமப்புற மாணவர்களுக்கு அரசுப் பணிகளுக்கான இலவசப் பயிற்சியை முறையான ஆசிரியர்களைகொண்டு நடத்துவது என்பது சாதாரண செயல்அல்ல. அந்த வகையில், தனது சொந்த ஊரிலே கலைஞர் படிப்பகம் என்ற பெயரில் அதை செயல்படுத்தி நடத்திவருகிறார் இலக்கியப்படைப்பாளியான அரசியல் பெண்மணி சல்மா. துவரங்குறிச்சியில் பிறந்து, கவிஞர், எழுத்தாளர் மற்றும் தி.மு.கவில் முக்கிய பிரதிநிதியாக திகழ்ந்து, பல போராட்டங்களுக்கு பிறகு சமுதாயத்தில் தனக்கென தனி அங்கீகாரத்தை பதித்தவர் சல்மா. தற்போது, தி.மு.க மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளராக பணியாற்றிவருகிறார். இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இவரை சந்தித்து பேசியபோது.

பெண்கள் அரசியலுக்கு வருவதினால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன? அரசியலில் உங்களுக்கு வரும் அடக்குமுறைகளை எவ்வாறு கையாளுகின்றீர்கள்?

பாதகத்திற்கே வேலையே இல்லை. விமர்சனங்கள் வரும். அது அரசியலில் மட்டும் அல்ல. சினிமாத்துறை, விளம்பரத்துறை, ஐ.டி என எல்லாத்துறைகளிலுமே அடக்குமுறை, வன்முறை, விமர்சனங்கள் இவை அனைத்துமே நடக்கிறது. இதற்காகவே பெண்கள் பணிபுரியும் இடங்களில் விசாரணை கமிட்டி அமைக்கப்படவேண்டும் என்கிறோம். அதை எல்லாத்தையும் மீறி பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே முக்கியம்.

எழுத்தாளராக இருந்த நீங்கள் எவ்வாறு அரசியலுக்குள் வந்தீர்கள்?

எழுத்து என்றாலே அரசியல் தான். சமூக அக்கறையுடன் தான் ஒரு எழுத்தாளன் எழுதத் தொடங்குகிறான். வெகுஜன அரசியலுக்குள் வந்ததிற்கு சந்தர்ப்பமே காரணம். நான் மட்டுமல்ல பெரும்பாலான பெண்கள் அரசியலுக்குள் அவ்வாறே வருகின்றனர். 33சதவீத இடஒதுக்கீடு காரணமான வேறுவழியின்றி கணவர்களால் முன்னிறுத்தப்பட்டவர்கள். ரிசர்வேசன் இல்லை என்றால் இஸ்லாமிய பின்னணி கொண்ட என்னால் அரசியலுக்குள் வந்திருக்கவே முடியாது. பெரும்பாலான இடங்களில் வீட்டு வேலையைப் பெண் பார்த்துகொள்கிறாள், அரசியலை ஆண் பார்த்து கொள்வார்கள் என்ற சூழ்நிலையே உள்ளது. தாமாக முன்வந்து அரசியலுக்கு வருவது கடினம் தான்.

குடும்பத்தின் பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது?

எழுத்தாளராக இருந்தபோது கூட குடும்பம் ஏற்றுகொள்ளவில்லை. இது வழக்கத்திற்கு மாறான ஒன்று. அடுத்தது என்னுடைய இஸ்லாமிய பின்னணியும் சேர்ந்து கொண்டது. எனவே, முறையான அங்கீகாரம் என் குடும்பத்தில் கிடைக்கவில்லை. அதற்கு தயாராகவும் இல்லை. அரசியலுக்கு வந்தது தற்செயலாக நடந்தது.

இன்றைய சூழ்நிலையில் பெண்எழுத்தாளர்கள் குறைவாக இருப்பதாக தெரிகிறதே?

அப்படியெல்லாம் இல்லை. தற்போது புதிய பெண் எழுத்தாளர்கள் நிறைய பேர் வருகின்றனர். நான் தனியாக தெரிவதற்கு காரணம் இஸ்லாமிய பின்னணியில் இருந்து வந்ததினால், என் மீதான பார்வை, கவனம் அதிகரிக்கிறது. அதையும் தாண்டி அரசியலிலும் இருக்கிறேன். எனவே எனக்கு இரண்டு அடையாளங்கள் உள்ளது.

பழைய எழுத்தாளர்கள் அளவிற்கு தற்போது வரும் எழுத்தாளர்கள் மக்கள் மனதில் நிற்பதில்லையே?

இளைய தலைமுறை எழுத்தாளர்கள், நவீன படைப்பாளிகள் என ஒரு கூட்டமே தற்போது இருக்கின்றனர். பழைய எழுத்தாளர்கள் தங்களுக்கென்று ஒரு அடையாளம் பெற்றுள்ளனர். அனைத்து இடங்களுக்கும் பரவலாக சென்றடைந்துள்ளனர். தற்போது பிரபல எழுத்தாளர்களான செந்தில், தேவிபாரதி, சரவணன்சந்திரன், கார்னல் மார்க்ஸ் உள்ளிட்டோரை வாசிக்கும் பழக்கம் கொண்ட இளைய தலைமுறையினர் நன்கு அறிந்துவைத்துள்ளனர். எங்களைப்போன்ற எழுத்தாளர்களும் இவர்களை ஊக்குவிக்கிறோம்.

மக்களின் எதார்த்த நிலையை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் அரசியலுக்கு வருவதில்லையே?

வெகுஜன அரசியல் என்பது வேறொரு உலகம். எழுத்தாளர்களின் கவனம் கதையுடன் தொடர்பில் இருந்து கொண்டே இருக்கவேண்டும். கதையை நான் சிந்திக்க தொடங்கிவிட்டேன் என்றால், கதாப்பாத்திரத்துடன் பயணம் செய்து கொண்டே இருக்கவேண்டும். அரசியலில் மக்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். நேரம் ஒதுக்குவது கடினம். கலைஞர் போன்றவர்களினால் தான் இரண்டையும் கையாளமுடியும். இவையனைத்தையும் தாண்டி ஆர்வம் இருக்கவேண்டும். படைப்பாளிகளாக இருந்தால் மட்டும் தான் சுதந்திரமாக இருக்கமுடியும் என்று நம்புபவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள். அடுத்தது, அரசியல் கட்சிக்கொள்கையுடன் ஒத்து பயணிக்கவேண்டும்.

வெகுஜன அரசியலுக்கும், இயக்க அரசியலுக்கும் உள்ள வேறுபாடு?

இயக்க அரசியல் இன்றைக்கு சமூக அக்கறையுடன் செயல்படுவதை பார்க்கமுடிகிறது.  வெகுஜன அரசியல் ஓட்டு வங்கியை குறிவைத்து எது தேவை, எது தேவையில்லை என்று தேர்வு செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், ஏதேனும் ஒரு விஷயத்தில் இருவரும் ஒரு நேர்க்கோட்டில் பயணிப்பார்கள். உதாரணமாக பெரியார் சர்ச்சை குறித்த பிரச்சனை, கெயில் போன்ற விவசாயிகளின் பிரச்சனைகளை சொல்லலாம்.

இயக்க அரசியல் சார்ந்து மக்கள் இருந்தால், நல்ல அரசியல் தலைவர்கள் கிடைப்பார்கள் என்ற கருத்து தற்போது எழுந்துள்ளதே?

இது ஒருவித கற்பனை. வாக்கு அரசியல் என்று வந்துவிட்டால் சமரசம் தேவைப்படும். அவ்வாறே இன்றைய சூழல் அமைந்துள்ளது. வாக்குக்கு பணம் கொடுப்பது இன்றைக்கு அதிகாரித்துவிட்டது. இயக்க அரசியலில் இருப்பவர்கள் அரசியலுக்கு வந்தாலும் அதே நிலைதான். இது மிகவும் மோசமான நிலைதான். இளைஞர்களின் பங்களிப்பு அரசியலில் அதிகமாக வந்தால்த் தான் இந்த நிலைமை மாறும்.

உலகநாடுகளில் உள்ள இஸ்லாமியர்களுக்கான பாதுகாப்புக்கும், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கான பாதுகாப்புக்கும் இடையேயான வேறுபாடு?

உலகம் முழுவதிலும் இஸ்லாமியர்களுக்கான பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது. இந்தியாவிலும் அதே நிலைதான். ஐ.எஸ்.ஐ.எஸ், டிவின் டவர் இடிப்பிற்கு பிறகு உலகம் முழுவதிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான இஸ்லாமிக்போபியா வளர்த்தெடுக்கப்படுகிறது. குறிப்பாக டிரம்ப் ஆட்சியில் விசா வழங்கப்படுவது உள்ளிட்ட செயல்களின் மூலம் தங்களின் அரசியல் கொள்கையையே இஸ்லாமியர்களுக்கு எதிராக வைத்துள்ளனர். இதை நாங்கள் இஸ்லாமிக்போபியா என்றே அழைக்கிறோம். தமிழகத்தைப்பொறுத்தவரையில் இஸ்லாமியர்களுக்கு சென்னையிலேயே வீடு கிடைப்பது சிரமாக உள்ளது. சமீபத்தில் ஒரு இஸ்லாமிய மாணவியை சந்தித்தேன். அகமதாபாத்தில் படிக்கும் அவளுக்கு முஸ்லீம் என்பதால் வீடு கிடைக்கவில்லை. வேறு நண்பரின் பெயரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இவ்வாறாக அனைத்து இடங்களிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.‘

திராவிடத்தை அடக்கமுறை செய்யத்துடிக்கும், பா.ஜ.கவின் முயற்சி பலிக்குமா?

பா.ஜ.கவைப்பற்றி அனைவரும் தெரிந்துவைத்துள்ளனர். மற்ற மாநிலங்களைப்போல கல்வியறிவில் பின்தங்கிய மாநிலம் தமிழகம் கிடையாது. அனைவரும் படிப்பறிவு உள்ளவர்கள். சமூக, அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள். எல்லா இடங்களிலும் சாதி வன்முறையைத்தூண்டி வெற்றி பெறுவது போல, இங்கும் வெற்றிபெற்று விடலாம் என்று நினைக்கின்றனர். அது மக்களுக்கு தெரியும். அதனால் தான், இங்கு நோட்டாவைவிட குறைவான வாக்குகள் வாங்கியுள்ளனர். ஜெயலலிதா இல்லாத இடத்தை நிரப்புவதற்கு, ரஜினி, கமலின் மூலம் வாக்கு வங்கிகளை உருவாக்கி, பின்பு ரஜினியுடன் இணைந்து கொள்வார்கள். இதன் மூலம் தங்களுக்கான வாக்குகளையும் அதிகரித்துகொள்வார்கள். இன்னும் 5 ஆண்டுகள் அவர்கள் கையில் கிடைத்தால், கல்விநிறுவனங்கள், மருத்துவத்துறை உள்ளிட்ட இடங்களில் அவர்களின் ஆதிக்கத்தை செலுத்தி முழுமையாக்கி விடுவார்கள்.

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா?

நிச்சயம் அமைக்க மாட்டார்கள். பா.ஜ.கவிற்கு வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு ஒரளவிற்கு இருக்கிறது என்றால் அது கர்நாடகாவிலே தான். அதை இழக்க அவர்கள் விரும்பமாட்டார்கள். முத்தலாக் சட்டத்தை உடனே நிறைவேற்ற முயற்சித்தார்கள். இல்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு என்றார்கள். அதே நீதிமன்றம் தான் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இல்லையா. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமுடியாது என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியிருப்பதில் இருந்தே அவர்களின் நிலைப்பாடு தெரிகிறது. அனைத்துக்கட்சித்தலைவர்களும் மாநிலத்தின் உரிமைக்காக பிரதமரை சந்திக்கவேண்டும் என்றும் நேரம் கேட்டால் தர மறுக்கிறார். தமிழக வளர்ச்சியை மட்டுப்படுத்தவேண்டும். தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருப்பதை உடைக்கவேண்டும். அப்போது நாம் மத்தியில் இருப்பவர்களை எதிர்ப்பார்க்கும் நிலைவரும். அப்போது தான் அவர்களின் கட்சியை தமிழகத்தில் வளர்க்கமுடியும். இதுவே அவர்களின் நோக்கம். இதற்கு சான்றாக பல மாநில உரிமைகள் பறிபோய்க்கொண்டிருப்பதை கண்ணெதிரே பார்க்கமுடிகிறது.

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு கூறவிரும்புவது?

தந்தை பெரியார் எப்போதும் ஒன்று சொல்வர். பெண் அடிமையாக இருக்கிறார் என்றால். ஆண் மட்டும் காரணம் கிடையாது. பெண் முதலில் தனக்கான தனித்துவத்தை, வலிமையை உணரவேண்டும். ஆண் மட்டும் அடிமையாக்க நினைப்பதில்லை. பெண் அடிமையாக இருப்பதற்கு தயாராக இருக்கிறாள். அந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால், பெண் தான் யார்? தன் அவசியம் என்ன? தன் முக்கியத்துவம் என்ன? என்பதை உணரவேண்டும். அப்போதுதான் மாற்றங்கள் ஏற்படும்.

 

 

Leave A Reply

Your email address will not be published.