மக்களாவது மண்ணாங்கட்டியாவது….. பில்கேட்ஸ் மனைவியின் திட்டம் ஜெயிக்கும்……..

0
ntrichy

மக்களாவது மண்ணாங்கட்டியாவது….. பில்கேட்ஸ் மனைவியின் திட்டம் ஜெயிக்கும்……..

 

நகரமயமாக்கல் வேகமாக நடந்து கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், மக்களுக்கு நன்மை ஏற்படுமா? இல்லையா? என்று பார்க்காமல், எந்த புதிய நிறுவனங்கள் ஆரம்பித்தாலும், லஞ்சம் கொடுத்தால், அனுமதி வழங்கப்படும் என்பது நிதர்சனமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில், கடந்த 2016ம் ஆண்டு திருச்சி மாநகராட்சி சார்பில் லிங்கம் நகர் அருகில் மனித மலக்கசடு சுத்திகரிப்பு மையத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடியும் தருவாயில் திருச்சி மேயரால் சுமார் ரூ.3.95கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் இந்த சுத்திகரிப்பு மையத்திற்கு 31.8.16 அன்று போடப்பட்ட கடைசி ஒப்பந்தத்திற்கான கையெழுத்து இதுவே.

மனித மலக்கசடு சுத்திகரிப்பு மையம்

மனித மலக்கழிவுகளை பவுடராக(தூள்களாக) மாற்றி அதை விவசாயத்திற்கு உரமாக மாற்றுவது, அதில் இருந்து கேஸ் எடுப்பது இவையே மனித மலக்கசடு சுத்திகரிப்பு மையத்தின் முக்கிய பணி. அந்த வகையில், திருச்சி உறையூர் ரோட்டில் இருந்து குழுமணிக்கு செல்லும் மெயின்ரோட்டில் உள்ள வள்ளலார் நகரில், அரசால் கட்டப்பட்டு வரும் மீன்மார்ட்கெட்டிற்கு பின்புறம் உள்ள ஒன்றரை ஏக்கரில் இந்த மனித மலக்கசடு சுத்திகரிப்பு மையம் அமைய உள்ளது.

இந்த சுத்திகரிப்பு மையத்தை அமைக்க இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஹியுமன் ரிசோர்ஸஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை அணுகி இந்த சுத்திகரிப்பு மையம் இங்கு வர வித்திட்டவர் பில்கேட்ஸ்சின் மனைவியான மெலாண்டாகேட்ஸ். இந்நிலையில், இச்சுத்திகரிப்பு மையம் இந்த இடத்தில் அமைவதினால் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகளையும் அதனால் உண்டாகும் விளைவுகளையும் கூறி இப்பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் சங்கம் மற்றும் லிங்கம்நகர் வளர்ச்சி சங்கங்கங்கள் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகுறித்து லிங்கம்நகர் வளர்ச்சி சங்க செயலாளர் திருஞானசம்பந்தர் கூறுகையில், கடந்த உள்ளாட்சி அமைப்பின் பதவிகாலம் முடியும் போது திருச்சி மாநகராட்சியின் சார்பில் மேயரால் இறுதியாக 31.8.16 அன்று கையெழுத்திடப்பட்ட திட்டம் இதுவே. இதற்கு மாநகராட்சி கமிஷ்னர் பெரிதும் உதவியுள்ளார். இதன் மூலம் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்தும் மேயர் முதல் வார்டு கவுன்சிலர் வரை ஒவ்வொருவரும் பணம் வாங்கிகொண்டு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதனால், இப்பகுதியில் சுற்றுச்சுழல் பெரிதும் பாதிக்கப்படும்.

பாதிப்புகள்

இந்த பகுதி முழுவதும் ஆறுகளின் ஓரங்களில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, சாண்ட்விச் என்று அழைக்கக்கூடிய இருபகுதிகளிலும் ஆறுகளாகவும் நடுவில் குடியிருப்பு பகுதிகளும் உள்ளது. இப்போது வரவிருக்கும் சுத்திகரிப்பு மையத்தின் மேற்கு பகுதியில் 400மீட்டர் தொலைவில் கொடிங்கால் ஆறும், தெற்கு பகுதியில் 100மீட்டர் தொலைவில் காசிவிலங்கி ஆறும் அமைந்துள்ளது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் ஆற்று நீரில் மலக்கழிவுகள் செல்லும் அபாயம் உள்ளது. இந்த மையத்தில் ஏதேனும் சிறிய அளவிற்கு கசிவு ஏற்பட்டாலும் பல கி.மீ தூரத்திற்கு அழுகிய முட்டையின் வாடை அடிக்கும். இதனால், காற்று மாசு ஏற்படும். வீட்டில் செப்டிடேங்குகள் கட்டுவது போன்று தான் இங்கும் கழிவுகள் தொட்டியில் தேக்கிவைக்கப்படும். இதற்கான மலக்கழிவுகளை பெறுவதற்கு மாநகராட்சியில் உள்ள 40, 45, 49, 53, 57, 60 உள்ளிட்ட 6 வார்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த பகுதியில் செப்டிக் டேங்குகள் நிரம்பிவிட்டன என யார் தொடர்பு கொண்டாலும் அந்த கழிவுகள் அனைத்தும் இந்த மையத்திற்கே வரும். அதுவும் 60வது வார்டு மட்டுமே இப்பகுதியைச் சேர்ந்தது. மீதமுள்ள வார்டுகள் எல்லாம் வேறு பகுதிகள். அங்கிருந்து, இப்பகுதிக்கு தினமும் 10க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே, 16அடி கூட இல்லாத இந்த ரோட்டில் இரு பேருந்துகள் இங்கு சேர்ந்தாற் போல் போவதே கடினம். இந்நிலையில் அந்த சிறிய இடத்தில் 10லாரிகள் தினமும் வந்து சென்றால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். பாற்றாக்குறைக்கு முன்பகுதியில் மீன்மார்க்கெட் கட்டிகொண்டிருக்கின்றனர். அதற்கும் காலையில் வாகனங்கள், பொதுமக்கள் வந்த வண்ணமே இருப்பார்கள். இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கமுடியாமல், காலை பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் என அனைவரும் அவதிக்குள்ளாவார்கள். சாப்பிடக்கூடிய பொருளான மீன்களை முன்னர் வைத்துகொண்டு, மனித மலக்கழிவுகளின் சுத்திகரிப்பு மையத்தை பின்புறம் வைப்பது என்பது முறையான செயலாக மாநகராட்சிக்கு எவ்வாறு தோன்றியது என்பதே புரியவில்லை.

வழக்கு

31.8.16ல் இந்த திட்டத்திற்கு மாநகராட்சி ஒப்புதல் அளிக்கிறது. சில மாதங்களுக்கு  பிறகு இது பற்றியான தகவல் எங்களுக்கு கிடைத்தது. பின்னர், 31.1.17அன்று இது குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இதற்கிடையில், அதுவரையில் மக்கள் வசிக்கும் பகுதியாக இருந்ததை, மாநகராட்சி ஆவணத்தில் மே மாதம் 2017 முதல் தொழிற்பகுதியாக மாற்றிவிட்டனர். மக்கள் வசிக்கும் பகுதி என்றால் சட்டவிதிகளின்படி அங்கு தொழில்நிறுவனங்கள் எதுவும் தொடங்கப்படக்கூடாது. ஆனால், மாநகராட்சியில் லட்சம் வாங்கிகொண்டு அனுமதிஅளித்துவிட்டனர். நாங்கள் வழக்கை தாக்கல் செய்தவுடன் அந்த பகுதியை தொழில்பகுதியாக மாற்றிவிட்டனர். அடுத்து தாக்கல் செய்யும் போது இதையும் வழக்கில் மென்சன் செய்துள்ளோம். இவ்வழக்கு கோர்ட்டில் வரும் போது நீதிபதி, இச்சுத்திகரிப்பு மையத்தில் இருந்து கசிவு ஏற்பட்டால் என்ன நடக்கும் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மாநகராட்சி வக்கீல் பெரிதாக ஒன்றும் ஆகாது அழுகிய முட்டை வீசும் வாடை வரும் என்றார். அதிர்ந்து போன நீதிபதி அப்படி என்றால் மாநகராட்சியிலேயே தான் அதிக இடம் இருக்கிறதே அங்கு இதை அமைத்துகொள்ளவேண்டியதுதானே. ஏன் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைக்கிறீர்கள் என்று கேட்டார். இந்த வழக்கில் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது அதிகம் இருப்பதால், இவ்வழக்கை நீதிபதி பசுமைத்தீர்ப்பாயத்திற்கு மாற்றி விட்டார். சென்னையில் பசுமைத்தீர்ப்பாயத்தில் இருந்த நீதிபதிகள் ஓய்வு பெற்று இன்னும், அங்கு நீதிபதி போடாத காரணத்தினால் பெட்டிசன் அப்படியே உள்ளது. மதுரை கோர்ட்டில் விவசாயிகள் சங்க செயலாளர் பிச்சை உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். லிங்கம் நகர் வளர்ச்சி சங்கத்திற்கு பக்கபலமாக இருந்தோம். பசுமை தீர்ப்பாயத்தில் நாங்களும் சேர்ந்து  வழக்கை முறையிட்டு நடத்த உள்ளோம். இதற்கிடையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மீதும் சென்னையில் வழக்கு தொடர்ந்துள்ளோம். சாண்ட்விச் பகுதியில் இவ்வாறான ஒரு சுத்திகரிப்பு மையத்திற்கு எவ்வாறு அனுமதி அளித்தனர் என்றும், மாநகராட்சி ஆணையர் மூலம் அவர்களுக்கு தவறான அறிக்கை சென்றுள்ளது அதை முறையாக பார்வையிடாமல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு அனுமதி அளித்துள்ளது எனவும் அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளோம். இதற்கான, ஹியரிங் 20ம் தேதி வர உள்ளது.

அமைதிக்கூட்டம்

நாங்கள் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்த உடன் அந்த தன்னார்வத்தொண்டு நிறுவனத்தில் இருந்து ஒரு குழு வந்தது. இத்திட்டத்தைப்பற்றியும், தமிழத்திற்கு முன்னரே கர்நாடகாவில் உள்ள தேவ்நகரில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. என்றும் கூறினார். நாங்கள் அவர்களிடம் வெள்ளம் வந்தால் தண்ணீரில் மலக்கழிவுகள் மிதக்குமா? மிதக்காதா?, நிலத்தடி நீர் பாதிக்கப்படுமா?, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா? படாதா? என 5 கேள்விகள் கேட்டோம். உங்கள் வீட்டில் உள்ள செப்டிக் டேங்குகளில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன நடக்குமோ அதே நடக்கும். தண்ணீர் வந்தால் கழிவுகள் மிதக்கும் என்றனர். நாங்கள் கேட்டக்கேள்விகளுக்கு முறையாக அவர்களினால் பதில் கொடுக்கமுடியவில்லை. அடுத்தப்படியாக கடந்த 1ம்தேதி தாசில்தார் மூலம் மற்றொரு அமைதிக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், இப்பணிகள் தற்காலிகமாக செயல்படாது என அவர் உத்திரவாதம் அளித்தார். அதன் காரணமாவே போராட்டம், ஆரப்பாட்டம் என எதுவும் எனவும் தற்போது செய்யாமல் உள்ளோம். இதற்கு முன்னால் கலெக்டர் அலுவலம், உறையூர் பகுதி உள்ளிட்ட இடங்களில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்.

பாதிக்கும் பகுதி

தற்போது அவர்கள் மனித மலக்கசடு சுத்திகரிப்பு மையம் அமைக்கத்துடிக்கும் பகுதி, அரசு அதிகாரிகளுக்கு காலனிகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம். ஆனால், கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக மக்கள் அடிப்படையே பாதிக்கப்படுமே என்பதைக்கூட கருதாமல் இப்படி ஒரு சுத்திகரிப்பு மையத்திற்கு அனுமதிஅளித்துள்ளனர் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். இந்த பகுதியில், 1000க்கும்மேற்பட்ட குடியிருப்புகளில், 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், திடீரென வெள்ளமோ, சுத்திகரிப்பு நிலையத்தில் ஏதேனும் அபாயகரமான கோளாறுகளோ ஏற்பட்டால் என்ன செய்வது. 2005ல் ஏற்பட்ட வெள்ளத்தின்போதே மக்கள் யாரும் வெளியே செல்லமுடியாத அளவிற்கு அவதிகளை சந்தித்தனர். இந்நிலையில், மலக்கழிவுகளும் அந்த தண்ணீரில் சேர்ந்து வரும் என்று நினைக்கும்போதே பயமாக உள்ளது. இதில், பெஸ்கி நகர், வெள்ளாளர் நகர், லிங்கம் நகர், பாதிமா நகர், ராம் நகர், மங்களம் நகர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகள்  எல்லாம் உடனே பாதிக்கக்கூடிய பகுதிகளாக இருக்கும். இங்கு பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகளே உள்ளன. காரணம் 2005ல் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கம் தான். சாதாரண வீடுகள் கூட 6 முதல் 7அடி உயர்த்தியே கட்டப்படும் தண்ணீர் வீடடிற்குள் சென்று விடக்கூடாது என்பதற்கான. அப்படி இருந்தும் வெள்ளத்தில் வீட்டிற்குள் தண்ணீர் சென்றது.

மனு

திட்டத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளை குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி, அமைச்சர் வளர்மதி, தொகுதி எம்.எல்.ஏ கே.என்.நேரு, மாநகராட்சி கமிஷ்னர் உள்ளிட்ட அனைவரும் மனுக்களை வழங்கினோம். ஆனால், ஒரு பயனும் இல்லை.

திட்டத்திற்கு எதிரிகள் அல்ல

மக்களுக்கு நம்மை பயக்கும் அனைத்து திட்டங்களையுமே நங்கள் வரவேற்போம். ஆனால், இது போன்ற மையத்தை மக்கள் வழும் பகுதியில் அமைப்பதற்கான காரணம் என்ன? கர்நாடக தேவ்நகரில் இருக்கக்கூடிய சுத்திகரிப்பு மையமானது, மக்கள் வழும் பகுதியில் இருந்து 40கி.மீ தொலைவில், தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அடுத்தப்படியாக அது தண்ணீரே இல்லாத பகுதி. ஆனால், இங்கோ இரு ஆறுகளுக்கு நடுவே அமைக்கப்படுகிறது.  அவர்களிடம் வெள்ளத்தின் போது மலக்கழிவுகளை எவ்வாறு எடுப்பீர்கள் என்று கேட்டதிற்கு, அப்போது அதை அள்ளி பஞ்சப்பூர் கொண்டு விடுவோம் என்கின்றனர். உண்மையில் வெள்ளம் வந்தால் உள்ளேயே செல்லமுடியாது. அந்த பகுதியில் வழும் மக்களுக்கு அது நன்கு தெரியும். வெள்ளம் வந்தால் அள்ளிச்செல்வதை. இந்த சுத்திகரிப்பு மையத்தையே மக்கள் யாரும் இல்லாத திருச்சிக்கு வெளியே அமைக்கவேண்டியது தானே. அது தானே முறை. இங்கு ஆற்றில் இருந்து வேண்டிய நீரை இம்மையத்திற்கு எடுத்தகொள்ளலாம் என்ற காரணத்திற்கான இங்கே அமைக்கீறார்கள் என்பதில் எவ்வளவு சுயநலம் உள்ளது. வந்தவரை லாபம் என்று ஆட்சியாளர் பணம் வாங்கிகொண்டு அனுமதி அளித்துவிட்டனர். இப்போது நாங்கள் அவதிப்பட்டுகொண்டிருக்கிறோம். லிங்கம் நகர் 60வது வார்ட்டைச்சேர்ந்த கவுன்சில் ராஜா மட்டும் இதன் விளைவுகளை அறிந்து கையெழுத்து போட மறுத்துவிட்டனார். ஆனால், தி.மு.க மற்றும் அ.தி.மு.க என இரு கட்சியினரும் இந்த விஷயத்தில் ஒன்றுமையக இருந்து செயல்பட்டுள்ளனர். இந்த பிரச்சனைக்குறித்து போராட்டம், ஆர்ப்பாட்டம், நீதிமன்றம் என எங்களால் முடிந்த வரையில் அனைத்தையும் செய்துவிட்டோம். ஆனால், இன்னும் ஒரு பயனும் கிடைக்கவில்லை.  இந்த வழக்கைப்பொருத்தவரையில் எவ்வளவு தூரம் சென்றாலும் சரி போராடி வெற்றி பெற்றே தீருவோம். இவ்வாறு ஆதங்கத்துடனும் உறுதிபடக்கூறினார்.

 

 

இது குறித்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த 60வது வார்டின் கவுன்சிலர் ராஜா கூறுகையில், மாமன்ற கூட்டத்தில் இதன் முழு விளக்கத்தையும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்தது. இயற்கையாகவே அந்த இடம் இந்த சுத்திகரிப்பு மையம் அமைவதற்கு ஏற்ற இடம் இல்லை, இருபுறமும் ஆறுகள் உள்ளது வெள்ளம் ஏற்பட்ட நிலைமை மோசமாக மாறிவிடும். அதுமட்டுமின்றி, இதைத்சுற்றி விவசாய நிலங்கள் அதிகம் அவை அனைத்தும் பாதிக்கப்படும், மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி நான் அப்போதே இதை ஒப்புகொள்ளவில்லை. இந்நிலையில், இந்த மையத்தின் முன்பகுதியில் மீன்மார்கெட் வரஉள்ளது. உணவு பொருள்விற்கும் இடத்தில் கழிவு இருப்பது சாத்தியம் இல்லாத ஒன்று எனவும், இதை பஞ்சப்பூர் பகுதியில் அமைப்பது தான் நல்லது எனவும் கூறினேன். மேயர், கமிஷ்னருக்கு இந்த பகுதியைப்பற்றி அவ்வளவாக தெரியவில்லை. மனிதாபிமான அடிப்படையில் தவறு என்பதை அவர்கள் உணர்ந்து எவ்வாறு ஒப்புதல் வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. தொண்டு நிறுவனம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு முறைகள் கூறப்பபட்டாலும், இயற்கை சீற்றம் என்பதை யாராலும் சமாளிக்கமுடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மக்களுக்காக கொண்டு வரப்படும் எந்த ஒரு திட்டத்திற்கும் சாதக, பாதகங்கள் இருக்கும். ஆனால், அதில் பாதகம் அதிகமாக இருந்தால் மாற்றத்தைகொண்டுவரவேண்டியது அரசின் கடமை. முதலில் அந்த திட்டம் குறித்து அந்த பகுதி மக்களுக்கு எடுத்துரைப்பது என்பது அடிப்படை. அவ்வாறாக இல்லாத பட்சத்தில் மக்களாக அறிந்து அதை எதிர்க்கும் போது கொண்டு வரமுயல்வது என்பது அபாயகரமானது. இந்த திட்டத்தின் முழுஅம்சங்களையும் அப்பகுதிமக்கள் உணரவேண்டும். மக்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.

 

((பாக்ஸ்))

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 

இந்திய அரசியலமைப்பின் 21வது சட்டப்பிரிவின் படி சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணவும், உயர்நீதிமன்றத்தில் உள்ள சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட வழக்குகளை குறைக்கவும் 2010ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் நிறுவப்பட்டது. இதன் முதன்மைக்கிளை புது டெல்லியிலும், கிளை இருக்கைகள் சென்னை, போபால், புனே மற்றும் கொல்கத்தாவிலும் அமைக்கப்பட்டது.  மேலும்,  இதன் தலைமை நடுவராக  20.12. 2012 முதல் நீதியரசர் சுவதந்திரக் குமார் பதவிவகித்து வருகிறார்.  இந்நிலையில், சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. எனவே, டெல்லியில் உள்ள முதன்மை அமர்வுக்கு அடுத்த படியாக சென்னையில் இரு அமர்வுகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், இங்கு பதவியில் இருந்த நீதித்துறை உறுப்பினர்கதள் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் ஒருவர் பின் ஒருவராக ஓய்வு பெற்றுவந்தனர். இறுதியா ஒற்றை நீதித்துறை உறுப்பினர் எம்.எஸ்.நம்பியார் மட்டும் இருந்தார். பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு நீதித்துறை உறுப்பினர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் ஆகியோர் இணைந்து தான் வழக்குகளை விசாரிக்கவும், உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியும். இதனால், பசுமைத்தீர்ப்பாயத்தின் வழக்கு முடங்கும் நிலை இருந்தது. இதனையடுத்து, மத்திய நிதித்துறையில், நாட்டில் உள்ள பசுமை தீர்ப்பாயம், கடன் வசூல் தீர்ப்பாயம் உள்ளிட்ட தீர்ப்பாயங்களுக்கான உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் நியமன விதிகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, உறுப்பினர்கள் நியமிக்கும் வரையில் ஒற்றை நீதிபதி செயல்படுவார் என ஆணை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, சென்னையில் வழக்கம் போல் இத்தீர்ப்பாயத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த ஜனவரி 2ம் தேதியுடன் ஒற்றை நீதித்துறை உறுப்பினர் எம்.எஸ்.நம்பியாரும் ஓய்வு பெற்றார். இதனால், சென்னையில் உள்ள பசுமைத்தீர்ப்பாயத்தில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்படாமல் முடம் நிலை ஏற்பட்டது.

இது குறித்து 40வது வார்ட்டு கவுன்சிலர் முத்தசெல்வன் கூறிதாவது, ஏதோ குப்பைகளை உரமாக மாற்றுவது தானே திட்டமாக இருந்தது. என்ன சொல்கிறீர்கள் மலமா! இருங்கள் இது பற்றி முழுமையாக்கேட்டுச்சொல்கிறேன். என்றார்.

இந்த திட்டத்திற்கு கையெழுத்து போட்ட கவுன்சிலர்களில் இவரும் ஒருவர். மக்கள் பிரதிநிதி என்பவர் ஒட்டுமொத்த மக்களின் குறளாக இருக்கவேண்டும். மாறாக, இது போன்று மக்கள் விரோத திட்டங்கள், தன் பகுதிகளுக்கு வரும் திட்டங்களைப்பற்றிக்கூட முழுமையாகதெரியாமல் ஆவணங்களில் கையெழுத்துப்போடுவது என செயல்படுவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை இழப்பது மட்டுமின்றி ஜனநாயத்தின் மீதும் அவநம்பிக்கையினை ஏற்படுத்துகின்றனர்.

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.