நீங்க சொன்ன நாங்க கேட்டுடுவோமா

0
ntrichy

நீங்க சொன்ன நாங்க கேட்டுடுவோமா

திருச்சி மாநகரில் போக்குவரத்து வீதிகளில் என்ன என்ன பிரிவுகள் உள்ளனவோ அனைத்தையும் தனியார் பஸ்கள் மீறுவதால் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

திருச்சி மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவதில் முதலிடம் வகிப்பது தனியார் டவுன் பஸ்கள். உச்சஸ்தாயில் அலறவிடுவது, பாதசாரிகள், டூவீலர் ஓட்டிகளை மிரள செய்யும் வகையில் ஹாரனை அலறவிட்டு பஸ் ஓட்டுவது,பஸ் ஸ்டாப் இல்லாத இடத்தில் நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவது போன்றவை அன்றாடம் தனியார் டவுன் பஸ்கள் செய்யும் அத்துமீறல்கள். இவர்களின் வேகப் போட்டியால் பஸ் உள்ளே பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டி உள்ளது. சாலையில் செல்லும் டூவீலர் ஓட்டுனர்கள், பாதசாரிகள் கதியும் பயணிகள் கடிக்கு ஈடாகத்தான் இருக்கிறது. தற்போது போக்குவரத்து போலீசாரின் கவனம் முழுவதும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது குவிந்து விட்டதால் பஸ் டிரைவர்கள் விதிகளை மீறுவதில் சர்வ சுதந்திரமாக செயல்படுகின்றனர்.

ஏற்கனவே இருந்த விதி மீறல்களில் வழிதடத்தை மாற்றி மாற்றி ஓட்டுவதும் சேர்ந்துள்ளது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சாத்திரம் பஸ் நிலையம் செல்லும் டவுன் பஸ்கள் கலையரங்கம் தியேட்டர் சாலை, மெக்டொனால்ட்ஸ் சாலையில் வலது புறம் திரும்பி ராக்கின்ஸ் சாலை வழியாக ஜங்ஷன் ரவுண்டானாவில் இடது புறம் பாரதியார் சாலையில் திரும்பி செல்ல வேண்டும்.

ஆனால் டைமிங் போட்டி மற்றும் ரயில் டைமிங்கை கணக்கீட்டு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் சில தனியார் டவுன் பஸ்கள் கலையரங்கம் தியேட்டர் சாலையில் இருந்து மெக்டொனால்ட்ஸ் சாலையில் இடது புறம் திரும்பி நேராக ஆர்.சி.பஸ் ஸ்டாப் அருகில் பாரதியார் சாலை வழியாக செல்கின்றன.

மாலை நேரங்களில் இந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தாலும் பகல் நேரத்தில் யாரும் நிற்காதது தனியார் பஸ்கள் அத்துமீறுவதற்க்கு வசதியாகிவிடுகிறது. இதனால் பஸ் வலதுபுறம் தானே செல்லும் என்று நினைத்து வாகனத்தில் பின் தொடர்வோர், திடீரென பஸ் இடது புறமாக திரும்புவதால் நிலைத்தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.

இதே போல ஒவ்வொரு விதி முறை மீறலிலும் ஏதேனும் ஒரு வகையில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் போக்குவரத்து துறை அதிகாரிகள், மற்றும் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை.

Leave A Reply

Your email address will not be published.