பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த கலாட்டா

0
ntrichy

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த கலாட்டா     செனட் வலியுறுத்தல்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் நியமனத்தில் முறைக்கேடு நடந்திருப்பதாக எழுந்த புகார் குறித்து நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால் உயர்கல்வித்துறை செயலாளரும்,கல்லூரி கல்வி இயக்குனரும் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று செனட் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பாரதிதாசன் பதிவாளராக கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பதில் முறைக்கேடு நடந்திருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் புகார் கூறி வருகின்றன.இந்த விவகாரம் நேற்று நடந்த பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் எதிரொலித்தது.

கூட்டம் தொடங்கியதும்,பதிவாளர் நியமனம் குறித்து விவாதிக்க செனட் உறுப்பினரும்,பல்கலைக்கழக ஆசிரியர் சங்க நிர்வாகியுமான ரவிச்சந்திரன் உரிமை பிரச்சனை எழுப்பினார்.இதற்கு துணைவேந்தர் மணிசங்கர் அனுமதிக்க மறுத்தார்.

இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.செனட் உறுப்பினர்களுக்கு உரிமை பிரச்சனை,ஒத்திவைப்பு தீர்மானம்,கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உரிமைகள் உள்ளன.அதனை துணைவேந்தர் பறிக்க முயல்கிறார் என செனட் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கூறியதை தொடர்ந்து பதிவாளர் நியமன விவகாரம் குறித்து பேச துணைவேந்தர் மணிசங்கர் அனுமதி வழங்கினார்.

பின்னர் ரவிச்சந்திரன் பேசுகையில், ‘ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் நபரின் பதவிக்காலம் முடிவடைய 3 மாதம் உள்ள நிலையில் பல்கலைக்கழகங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு பல்கலைக்கழக விதிகள் இடமளிப்பதில்லை.

ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு குழு அமைப்பாளராக இருந்த உயர்க்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால்,இருந்த கல்லூரி கல்வி இயக்குனர் மஞ்சுளா ஆகியோர் தங்கள் பொறுப்பு தற்காலிகமானது என தெரிந்தும் இப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் தேர்வு நெறியாளர் பணியிடங்களை எந்த அடிப்படையில் நிரப்பினர்.

இதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து முறையாக விசாரணை நடைபெற வேண்டும் என்றால் உயர்க்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால்,கல்லூரி கல்வி இயக்குநர் மஞ்சுளா ஆகியோரை இடமாற்றம் செய்து அப்பணியிடங்களுக்கு வேறு யாரையாவது நியமனம் செய்யவேண்டும் .அதன்பின் விசாரணை நடத்தினால் மட்டுமே இதற்கு நியாயம் கிடைக்கும்.

இப்பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்களாக இருந்தவர்கள் யாரும் தங்கள் பதவி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வரவு, செலவு கணக்குகளை செனட் கூட்டத்தில் சமர்ப்பிப்பதில்லை. என்று பேசினார். இதற்கு பதில் கூறிய துணைவேந்தர் மணிசங்கர்,’பதிவாளர் நியமனம் குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை கேட்கப்பட்டது.

அவர்கள் கேட்ட தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. தற்போது செனட் கூட்டத்தில் இந்த விஷயம் எழுப்பப்பட்ட விபரம் குறித்தும்,உறுப்பினர்களின் கோரிக்கைகளும் கவர்னர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்தப்படும்.

இதுவரை எப்படியோ , இனி செனட் கூட்டத்தில் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.வெளிப்படையான நிர்வாகம் நடைப்பெறுவதை உறுதி செய்வேன்.என்று கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.