தந்தையை தவிக்க விட்ட பிள்ளைகள் கைதாவார்களா ?

0
ntrichy

தந்தையை தவிக்க விட்ட பிள்ளைகள் கைதாவார்களா ?

திருச்சி திருவானைக்காவல் நெல்சன் ரோடு அண்ணாநகரைச் சேர்ந்தவர்  வெள்ளைச்சாமி (80), சத்திரம் பகுதியில் உள்ள ஜோசப் கல்லூரி விடுதியின் அருகே 20 வருடமாக கர்சீப் வியாபாரம் செய்து வருகின்றார்.  இவருக்கு 3 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி  வெவ்வேறு ஊர்களில் இருக்கும் நிலையில் வெள்ளைச்சாமி தனது  மகன்களான ரவி மற்றும் கணேசன் என்பவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வெள்ளைச்சாமி கடந்த 10 ஆம் தேதி மாவட்ட காவல்துறை துணை ஆணையர்  சக்திகணேஷிடம் தனது இரண்டாவது மகன் கணேஷ் (45) மீது புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் எனது மகன் கணேசன் எனக்கு சாப்பாடு போடாமல் துன்புறுத்துவதாகவும், செலவுக்கு பணம் ஏதும் கொடுப்பதில்லை என்றும் வயதான காலத்தில் என்னை தவறான வார்த்தைகளால் திட்டுவதுடன் அடிக்கவும் செய்கிறான் என்றும் கணேசன் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருந்தார். புகார் மனுவை ஏற்ற துணை கமிஷனர் சக்தி கணேஷ், விசாரணைக்காக கணேசனை கமிஷனர்  அலுவலகம் வர  சொல்லிருந்தார். கணேசனை விசாரித்த கமிஷனர்,  திருவரங்கம் காவல் உதவி ஆய்வாளர் அழகரிடம் இந்த வழக்கை ஒப்படைத்தார்.

அதன்பிறகு அவரை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் அழகர், கணேசன் மீது Senior Citizen Production Act(105/1824)கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனா். மேலும் அவரிடம் நடைபெற்ற விசாரணையில் எங்க அப்பா என் அண்ணன் ரவியின் பேச்சை கேட்டுக்கிட்டு என்மேல் தவறான புகார் அளித்துள்ளார். என்னை வீட்டை விட்டு காலி செய்ய சொல்கிறார். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருமே படித்து வருகின்றனர். எனக்கோ எலும்புருக்கி நோய் ஏற்பட்டு முடியாமல் உள்ளேன், என் மனைவி  ஒருவரின் வருமானத்தை வைத்துத்தான் என் பையங்கள படிக்க வச்சிக்கிட்டு இருக்கோம். இதுல என் அப்பாவை எப்படி பார்த்துக்கறது என்று தன் தரப்பு நியாயத்தை கூறியுள்ளார். எங்க அப்பாவுக்கு ஒவ்வொரு மாசமும் 1000 ரூபாய் தான் என்னால கொடுக்க முடியும்னு சொல்லிருகாரு.

இந்த வழக்கின் தொடர்பாக ‘நம்மதிருச்சி’  மூலம் வெள்ளைச்சாமியை சந்தித்தபோது  அவர் கூறியது ,

எனக்கு வயது 80 ஆகிறது. என்மனைவி தவறிப்போனதால் வயதான காலத்தில்  ஒரு வேலையை செய்வதற்கு பெரும் சிரமம் படுகின்றேன். பெற்ற பிள்ளைகள் கடைசி காலத்தில் கஞ்சி ஊற்றும் என்று தான் எல்லாரையும் வளர்த்துவிட்டேன். ஆனா இப்ப என்னைய கவனிக்கக் கூட ஆள் இல்ல ஒரு வேல சோத்துக்கு கூட கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன். எனக்கு மொத்தம் ஏழு பிள்ளைங்க. இவங்க எல்லாத்தையும் கரை ஏத்திவிட நானும் என் மனைவியும் ரொம்ப சிரமப் பட்டோம். கர்சீப் விக்கிறதெல்லாம் ஒரு 15 வருடமாத் தான். இதுக்கு முன்னே காய்கறி வியாபாரம் செய்துக்கொண்டிருந்தேன், எங்களோட சொந்த ஊரு பெட்டவாய்த்தலை. அங்கே இருந்து தான் பிள்ளைகள் எல்லாத்தையும் வளர்த்தோம். ஒரு மகளை  கல்யாணம் பண்ணி கொடுக்க இருக்குற நகை சொத்தெல்லாம் வித்துதான் பண்ணுனேன். இதேபோன்று மற்ற பொண்ணுக்களுக்கும் கடன் வாங்கித்தான் கல்யாணத்தை நடத்தி முடிச்சோம், எல்லாரும் அவங்களோட குடும்பத்த மட்டுந்தான் பாக்கறாங்க. யாரும் இதுவரை என்னைய  கவனிக்கல. இந்த கர்சீப் விற்றாத்தான் நான் ஒருவேளையாவது சாப்பிட முடியும், இதுலயும் எல்லநேரமும் வியாபாரம் ஒடும்னு சொல்லமுடியாது ,அந்த கஷ்டத்துல தான் என் மகன்கள் கிட்ட உதவி கேட்டேன் ,அவங்கள் எல்லாரும் அவங்களோட மனைவி பேச்ச கேட்டுகிட்டு கவனிக்க மாட்றாங்க. அடிக்க வாரனுங்க ,இதனால மனசு ஓடஞ்சிதான் வீட்டுல ஓய்வு எடுக்க முடியாம இங்க வந்து கர்சீப் வித்துக்கிட்டு இருக்கேன் . என் பசங்க என்ன கவனிக்காம இருந்தாலும் பரவா இல்ல என் வீட்ட கொடுத்தா போதும் எந்த ஒரு தொல்லையும் இல்லாம இருப்பேன்.

பெற்றோர்கள் பிள்ளைகள சின்னவயசுல கஷ்டம் தெரியாம வளர்க்கிறோம் ஆனா பிள்ளைங்க வளர்வதே பெற்றோர்களை கஷ்டப்படுத்தத்தானோ !

 

.

 

 

Leave A Reply

Your email address will not be published.