என்ன… ஜி.எச். கிளம்பிவிட்டீர்களா? முதலில் இதைப்படியுங்கள்

-மீனா அசோக்

0

ஒரு நோயாளியின் பார்வையில்…

திருச்சி அரசு மருத்துவமனை பற்றிய பொதுவான புரிதல் என்னவெனில், சரியாக பார்க்கமாட்டார்கள். மருத்துவர்கள் கண்டிப்புடன் நடத்துவர் என்பதே.

ஆனால் உண்மை நிலை என்ன என்று ஒரு நோயாளியாக நான் மருத்துவமனை சென்றபின் உணர்ந்தேன்.

அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 2015-ல் எனக்கு தீராத இடது கைவலி. நானும் ஒரு கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்ப்பவள். கீ போர்டு ஆக்டிவேட் செய்ய இடது கை, வலதுகை இரண்டுமே மிக மிக முக்கியம்.

நியூரோ டாக்டரிடம் சென்று 15 ஆயிரம் செலவு செய்தேன். கரண்ட் வைத்தேன். இன்னும் சில பல டாக்டர்களிடம் சென்றேன். இது எல்லாம் என் கணவரின் வற்புறுத்தலுக்காக. எனக்கு ஜி.எச். செல்லணும் என்ற எண்ணம் மட்டுமே. அதனை ஒருநாள் அவரிடம் சொன்னேன். சரி வா போகலாம் என்றார்.

சித்தா பிரிவு

அங்கு சித்தா, என்ற ஒரு பிரிவு இருக்கும். முன்னால் அகத்தியர் சிலை அழகாக அமைக்கப்பட்டிருக்கும். தினமும் ஒரு தகவல் எழுதி வருகிறார்கள் நமது டாக்டர்கள்.

அங்கு சென்றேன். வர்ம சிகிச்சையில் என் கைவலி 1 மாதத்தில் குணமானது. அந்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றேன்.

அதற்கென்ன இப்போது என்கிறீர்களா?

ஒன்றுமில்லை. இப்போதும் எனக்கு மெண்டல் டிப்ரஷன் காரணமாக எல்லோருக்கும் வரும் இன்சுலீன் லெவல் 325 என ரிப்போர்ட் சொன்னது. உடனே ஆயுர்வேதா டாக்டரை அணுகினேன். குறைத்துவிடலாம் அம்மா என்றார்.

அவர் சொன்ன நெறிமுறைகளை தவறாது கடைபிடித்ததன் காரணமாக தற்போது 130 ஆக குறைந்துள்ளது.

யோகா

சரி. அடுத்து யோகா செல்லலாம் என சென்றேன். அதற்குள் எத்தனை பிரிவு. யோகா தினமும் காலை 9-10 மணி வரை. அதில் அப்படி என்ன சொல்லித்தருகிறார்கள் என பார்க்கலாம் என்று தான் சென்றேன். ஆனால் அதற்கு முற்றிலும் அடிமையாக ஆகிவிட்டேன். அங்கு உடற்பயிற்சி, சூரிய நமஸ்காரம், மூச்சுப்பயிற்சி, முத்திரைகள் என சொல்லிக்கொண்டே போகலாம். கனிவான முகத்துடன் அந்த மருத்துவர் நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.

அக்குபஞ்சர், அக்குயோகா, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி

பிறகு அக்குபஞ்சர், அக்குயோகா, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி என்று எல்லோரும் கனிவு மட்டுமே. அவர்கள் நோயாளிகளை கவனிக்கும் விதமே நோயிலிருந்து அவர்கள் சீக்கிரம் விடுபட்டு நிவாரணம் அடைந்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே.

“மக்களைத்தேடி மருத்துவம்”

“மக்களைத்தேடி மருத்துவம்” என்று ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சித்தாபிரிவில் நடக்கிறது. இதனை நான் ரேடியோவில் கேட்டிருக்கிறேன். ஆனால் நேராக பார்க்கும்போது அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒவ்வொரு மருத்துவர்களும் தங்களது பிரிவில் ஒரு குறிப்பிட்ட நோயிற்கான காரணங்கள், குறிகுணங்கள், அதிலிருந்து விடுபட என்ன மருந்துகள், வழிமுறைகள் அனைத்தையும் சொல்கின்றனர். இதனை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் அவர்கள் வழிநடத்துகிறார்.

ஒரு சின்ன மனக்குறை

ஒரு சின்ன மனக்குறை என்ன என்றால் இடப்பற்றாக்குறைதான். யோகா செய்ய வரும் மக்கள் கூடிக்கொண்டே செல்கின்றனர். ஆனால் அவர்கள் தாராளமாக உட்கார்ந்து யோகா செய்ய ஒரு “ஹால்” ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். இதனை மருத்துவத்திற்கு “அதி” முக்கியத்துவம் தரும் மாநில அரசும், நம் திருச்சி மாவட்ட அமைச்சர்களும் கருத்தில் கொண்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும். இன்னும் மக்கள் நல்ல பலனை பெறுவர்.

உங்களுக்கு இருக்கும் பிரச்னைகளை களைய ஜி.எச் கிளம்பிவிட்டீர்களா? நலமுடன் மற்றும் மகிழ்ச்சியுடன் திரும்புவீர்கள்.

வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்.

 

Leave A Reply

Your email address will not be published.