திருச்சியில் சுற்றுலாவேனை திருடிய ஆசாமி கைது

திருச்சி ரெங்க நகர் பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம்(44). இவர், தனக்கு சொந்தமான சுற்றுலா வேனை கடந்த 2-ந் தேதி திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள அமைப்புசாரா ஓட்டுனர்கள் சங்க வேன் நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார்.
அடுத்த நாள் காலையில் அவரது வேன் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே வேனை திருடிய மர்ம நபர் டோல்கேட் வழியாக செல்லும்போது நுழைவு கட்டணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி மோகனசுந்தரம் செல்போனுக்கு வந்தது.
உடனே இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி திண்டிவனம் அருகே டோல்கேட் பகுதியில் அந்த சுற்றுலா வேனை மீட்டதுடன், திருடி சென்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஜயரங்கன் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்
