தேசிய நதிநீர் ஆய்வுக்குழு திருச்சி வருகை

6ம் தேதி திருச்சி வந்த தேசிய நதிநீர் ஆணையத்தின் இணை இயக்குனர் சபிதா மாதவி சிங் மற்றும் ஆலோசகர் பி.பி.பர்மன் கொண்ட குழுவினர் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் கீழ் காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்தல், முக்கிய இடங்களில் கரை பகுதிகளை மேம்படுத்தல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
பஞ்சப்பூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் புதிய இடத்தில் நவீன முறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது குறித்தும் கேட்டறிந்து ஆலோசனை செய்தனர்.
பின்னர் இந்தக் குழுவினர், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் கரைப்பகுதிகளை மேம்படுத்துதல் தொடர்பாகவும் வரைபடங்களை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து கரூர், ஈரோடு, பவானி கூடுதுறை ஆகிய பகுதிகளிலும் இந்த திட்டம் தொடர்பாக காவிரி ஆற்றுப்பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டைசெல்வம், செயற்பொறியாளர் மணிமோகன், மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவல்லி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
