திருச்சி எம்ஆர்.பாளையத்தில் வன உயிரியல் பூங்கா

0

வன விலங்குகளால் வேளாண் பயிர்கள் பாதிக்கப்படுவதால், அவற்றிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பது எப்படி? என திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களுடன் கருத்துகேட்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் 24ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசன் வரவேற்றார்.. திருச்சி மண்டல வன பாதுகாவலர் சதீஷ், திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு, மரக்கன்றுகள் மற்றும் கிராம வனக்குழுவினருக்கு சுழற்சி கடன், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு,
வனப்பகுதியில் இருந்து, வயல் வெளிப்பகுதிக்கு யானைகள் வராமல் இருக்க பழைய முறைப்படி 8 அடி ஆழம், 8 அடி அகலத்திற்கு அகழி வெட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், யானை மட்டுமின்றி இதர மிருகங்களும் வருவது தடுக்கப்படும். மழைக்காலத்தில் அகழியில் தண்ணீர் தேங்குவதால் நிலத்தடி நீர் உயரும். விரைவில் அத்திட்டம் கொண்டு வரப்படும் என்றார்.
மயில்கள் சரணாலயம்
தமிழகத்தில் மயில்கள் சரணாலயம் அமைக்கப்படும் என்றும், திருச்சி எம்ஆர்.பாளையத்தில் ஓராண்டில் வன உயிரியல் பூங்கா நடைமுறைக்கு வரும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலெக்டர் சிவராசு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அசோக் உப்ரிதி, தலைமை வன உயிரின காப்பாளர் சேகர் குமார் நீரஜ், கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் நாகநாதன், தமிழ்நாடு வனத்தோட்ட கழக நிர்வாக இயக்குனர் யோகேஷ்சிங், எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன், சவுந்திரபாண்டியன் மற்றும் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங் களைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

விவசாயிகள் தரப்பில் இழப்பீட்டு தொகையை உயர்த்த கோரிக்கை விடுத்தனர். விளைபொருட்கள் மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேளாண் துறை மற்றும் வனத்துறை மூலமாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்துள்ள அனைவரின் கருத்துக்களும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோவை ஈஷா யோகா மையத்தில் ஒரு சென்ட் நிலம் கூட ஆக்கிரமிப்பு இல்லை என அறிக்கை தரப்பட்டுள்ளது. ஆனால் புதிய ஆட்சி வந்துள்ளதால் மீண்டும் ஆய்வு நடத்தப்படும். அதுபோல காருண்யா பல்கலைக்கழகம் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதா? எனவும் ஆய்வு நடத்தப்படும்.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் 23.98 சதவீதம் வனப்பகுதி உள்ளது. இதனை உயர்த்த தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஆண்டுக்கு 2.65 கோடி மரக்கன்றுகள் அனைத்து துறைகள் மூலம் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி எம்.ஆர். பாளையம் வன உயிரியல் பூங்கா இன்னும் ஓராண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.