ஒளிமதிச்சோலையைப் பற்றி தெரிந்து கொள்வோம்

0
1

திருச்சி மாவட்டத்தில் துவாக்குடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருநெடுங்களம் ஒப்பிலா நாயகி உடனுறை நித்திய சுந்தரேசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் காவிரியின் தென்கரையில் அமைந்த 8வது தலமாகும். தல விருட்சங்கள் வில்வம், கஸ்தூரி, அரளி. தீர்த்தம் அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்.

திருச்சி மாவட்டத்தில் துவாக்குடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் இடர்களையும் பதிகம் பாடப்பெற்ற தலம் இது “மறையுடையாய் தோலுடையாய்” என துவங்கும் அப்பதிக முதல் பாடல் அங்கு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் ராஜ கோபுரத்தில் முன்னும் பின்னும் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

ஒளிமதிச்சோலை

2

சிறப்புகள் என்று எடுத்துக்கொண்டால், இத்தலத்திலுள்ள வெண்கலக்குதிரை விந்தையான அமைப்புடையது. மகா மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடுடன் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் சிவன் மட்டுமே உள்ளார். இறைவி அரு உருவாக இருக்கிறாள் என்பதாக கருதப்படுகிறது. (தனி சன்னதி அம்பாளுக்கு உண்டு) தவஞ்செய்த அம்பிகையை இறைவன் கள்ள உருவில் தோன்றி கந்தர்வ மணம் செய்ய முற்பட, அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம் என்பதால் ஒளிமதிச்சோலை என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.

இங்குள்ள  யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார்.

இக்கோயிலின் நவக்கிரக சந்நிதியில் (பதினொன்று திருவுருவங்கள்) சூரியனாரின் திருவுரு தமது இரு மனைவியரோடு மேற்கு திசை நோக்கியும் ஏனைய எட்டு கிரகங்களின் திருவுருவங்கள் சூரியனாரை நோக்கியும் காட்சி தருவதாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் சூரியக்கதிர்கள்  சிவபெருமான் மீது  படுமாறு அமைக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பு.

3

Leave A Reply

Your email address will not be published.