பழநிபாரதி காற்றை குளிர வைத்த கவிஞன்

0
1

பழநிபாரதி காற்றை குளிர வைத்த கவிஞன்

எத்தனை வரிகள் இதுவரை எழுதப்பட்டனவோ, அத்தனை வரிகளுக்குள்ளும் அக உணர்வைப் பந்திப்பரிமாற்றம் செய்த விரல்களுக்குச் சொந்தக்காரர். தண்ணீரில் விழுந்த இளம் வெயிலாக எண்ணற்றோரைத் தொட்டெழுப்பிய சூரியவரிகளை இதயங்களுக்குள் விதைகளாக ஆழப்புதைத்தவர். சொற்களற்ற வெளிகளில் நுரையீரல்களைத் திணறடிக்கும் கடற்காற்றுப்போல அக்கிரமங்கள் எதுதெரியினும் நெருப்புப்பொறிகளைச் சொற்களினூடே புதைத்துக் கவிதைகளாக வீசி எறிந்தவர். அவர்தான் கவிஞர் பழநிபாரதி.

போதிமரத்திலிருந்து ஞானம் கிடைப்பது உண்மையெனில் அரசமரத்திற்கடியில் அமர்கிற எல்லோருமே ஞானம் பெற்றிருக்க வேண்டும். துன்பத்திற்குக் காரணம் என்ன? எனத்தேடிய புத்தரின் தேடலுக்கான விடை போதிமரத்தடியில் கிடைத்தது. அதைப்போல அன்றாடம் நம்மில் எழுகிற ஆயிரமாயிரம் வினாக்களுக்கான பதில் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திடமே இருக்கிறது என்கிற உண்மையைத் தம் எழுத்துக்களில் தந்து சூழலைப் போதிமரமாக்கியவர் கவிஞர் பழநிபாரதி.

2

பாரதிதாசனின் மாணவரும், பாரதிதாசன் பரம்பரைக்கவிஞருமான அய்யா சாமி.பழனியப்பன் அவர்கள் பாரதியின் மீதிருந்த அதீத அன்பின் காரணமாகக் தம் மகனுக்குப் பாரதி எனப் பெயர் வைத்தார். பாரதி அது பெயர்ச்சொல் அல்ல எழுதுகோலால் உழுதுகாட்டிய வினைச்சொல் அல்லவா? காலத்தால் முந்தி, வானமென விரவி, கடலெனப் பரவி உயர்ந்தும், உள்ளம் நிறைந்தும் இருக்கும் செம்மொழித்தமிழின் சீர்மிகுக்கவிஞனான பாஞ்சாலியின் வழக்கறிஞன் பாரதியின் பெயர் இத்தமிழ்க்கவிஞனுக்குப் பொருந்திப்போனது வியப்பின் குறியீடு அன்றி வேறென்ன?
தொடக்கக்காலங்களில் பழ.பாரதி என்று அழைக்கப்பட்ட கவிஞர், தன் தந்தையின் பெயரே முன்னொட்டாகி “பழநிபாரதி” என்றாக விரியத் தொடங்கினார்.

மனத்துக்குள் மழைபொழிய வைக்கும் வசீகரம் தெரிந்த வார்த்தைச்சித்தர் வலம்புரிஜான் அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றிய “தாய்” இதழில் உதவி ஆசிரியராகத் தன் எழுத்துப்பணியைத் தொடங்கினார்.

பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதித் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். உவமைக் கவிஞர் சுரதா, “இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்” என்றார் ஒருமுறை. உண்மைதான் 1500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களைப் பிரசுவித்து ஒரு ஏகாந்த பயணியாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்ட ஆளுமை பழநிபாரதி என்றால் அது மிகையாகாது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்தநாளுக்குப் பிரபாகரன் வழித் துணையல்ல.. வழி என்ற பாடலை இவரின் உரத்தையும், திறத்தையும் ஒருசேர உலகிற்கு உணர்த்தியது. எந்த மதக்கொடிகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள் அதை இரத்தத்தில் கழுவி அழுக்காக்காதீர்கள் என்று சொல்லி மனிதாபிமான கவிஞர்கள் விரும்பிய சமய நல்லிணக்கத்தை, “பாபர் மசூதி சுவரில் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன இராமர் அணில்கள்” என்ற ஒற்றை வரியில் இதயத்துடிப்பாக்கியவர் கவிஞர்.

நீ சிறிய விதைதான்..
உனக்குள் ஒளிந்திருக்கிறது பிரமாண்ட மரம்”
என அந்த ஞான உழவன் அப்துல்ரகுமான்
எவரை நினைத்து எழுதினார் எனத் தெரியவில்லை.
ஆனால் இன்று பழநிபாரதியே பிரமாண்ட மரமாகி
எண்ணற்ற இளம் எழுத்தாளர்கள் கூடு கட்டிக்கொள்ள
தம் மனத்தைத் திறந்துவைத்திருக்கிறார்.

இராமேஸ்வரத்தின் கடலில் இந்தக் காகிதத்தால் ஒரு படகு செய்து அனுப்பலாம் இலங்கை இராணுவத்தால் கொல்லப்படும் மீனவரோடு இது கரையொதுங்கினால் நான் என்ன செய்ய முடியும்? உள்ளிட்ட வினாக்களை எழுப்பும் வெள்ளைக்காகிதம் போன்ற இவரது கவிதைகள் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞரின் வாரிசு என்பதை மிண்டும் மீண்டும் நிருபிக்கிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம். நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், புத்தனாம்பட்டி, நேரு தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, குற்றாலம் பராசக்தி மகளிர் தன்னாட்சிக் கல்லூரி, கோவை டாக்டர் எஸ்.என்.எஸ். இராஜலட்சுமி கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி மற்றும் கேரள மாநில அரசின் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூல்கள் உட்பட பாடத்திட்டங்களில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. புதுவைப் பல்கலைக்கழக கீதம் ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக் கீதம் ஆகிய இரண்டு கீதங்களும் இவரால் இயற்றப்பட்டவை என்பதை அறிகிறபோது எப்போதோ விழுந்த மழைச்சாரலில் இப்போது நனைவதுபோல இருக்கிறது. இதுவரை 13 கவிதைத் தொகுதிகள். ஒரு கட்டுரைத் தொகுதி, ஒரு நேர் உரைத் தொகுப்பு வெளிவந்துள்ளன.

எண்ணற்ற திரைப்பாடல்களைத் தந்த இவருக்கு சினிமா எக்ஸ்பிரஸ் விருது, காதலுக்கு மரியாதை திரைப்படத்திற்கான சிறந்த பாடலாசிரியர் விருது, கலைமாமணி விருது, கலைவித்தகர் கண்ணதாசன் விருது, பிதாமகன் திரைப்படத்திற்கு சர்வதேச தமிழ்ப்பட விருது, சிற்பி இலக்கிய விருது, இசைஞானி இளையராஜா விருது, கவிதை உறவு விருது, பகுத்தறிவாளர் கழகத்தின் புரட்சிக்கவிஞர் விருது ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

விருதுகளின் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான கவிக்கோ விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ஒரு இலட்ச ரூபாய் பரிசுத்தொகைக் கொண்ட கவிக்கோ விருது முதன்முதலில் கலைஞர் மு.கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. அந்த வரிசையில் கவிஞர்அறிவுமதியைத் தொடர்ந்து, 21வது விருதாளராகக் கவிஞர் பழநிபாரதி தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் தேதி வேலூரில் நடைபெறும் இவ்விழாவில் கருஞ்சட்டைத்தமிழர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் இவர் எழுத்துக்கள் குறித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

காற்றுக்குக் கண்கள் இல்லை எல்லோரையும் சந்திக்கும் – கால்கள் இல்லை எல்லா இடங்களுக்கும் செல்லும் – வாய் இல்லை எல்லா மொழிகளிலும் பேசும் – கரங்கள் இல்லை எல்லோரையும் தழுவிக் கொள்ளும். பொய்கையில் குளிர்ந்து போகும் – பூக்களில் மணம் வீசும் – புல்லாங்குழலில் இசையாகும். காற்றுப் போல எங்கும் வியாபித்திருக்கிறது கவிஞர் பழநிபாரதியின் எழுத்துக்கள்.

உயிர்பறவையொன்றைத் தம் எழுத்துக்களினூடேவைத்துப் பெரிதினும் பெரிது கேட்ட பெருங்கவிஞன் பாரதியின் சுவடாய் ஒளிரும் கவிஞர் பழநிபாரதி காற்றிலிருந்து சொற்களைப் பெற்றவன் அல்ல தம் சொற்களால் காற்றைக் குளிரவைத்தவன்.

 

3

Leave A Reply

Your email address will not be published.